Tuesday, October 27, 2015

கோவைக்கு இனிமே போவை?

ஜெய் பாகுபலி! ஜெய் மகிழ்மதி!னு நம்ப ரம்யாகிருஷ்ணன் மாதிரி உத்வேகத்தோட சொல்லிண்டு எழுதனும்னு தான் மனசுல தோனர்து ஆனா அது விஜயோட ‘புலி’ மாதிரி இருந்து ‘படிக்க வந்தவன் பலி’னு ஆயிட்டா என்ன பண்ணர்து. சரி விடுங்கோ! நான் விஷயத்துக்கு வரேன். போன மாசம் இந்தியாவுக்கு லீவுல வந்தேன். எல்லாருக்கும் போன் பண்ணனும்! ரெண்டு மூனு பேரோட ஆத்துக்கே போய் கழுத்தறுக்கனும்!னு என்னென்னவோ ப்ளான் போட்டுண்டு வந்தேன். ‘அத்தனையும் பொய்யாச்சு ராசா! ஒத்தையில நிக்குதிந்த ரோசா!’னு ஆயிடுத்து. மெட்ராஸ்ல போய் இறங்கின அடுத்த நாளே கல்லிடைல இருக்கும் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம ஆகி 15 ஆள் ஆஸ்பத்திரில போய் உக்காரும்படியா ஆயிடுத்து. அப்பாவுக்கு சுகர் பிரச்சனையால இடது கை பெருவிரல்ல இருக்கும் எலும்பு முழுசா போய் சர்ஜரி பண்ணும்படியா ஆயிடுத்து. மனசே சரியில்லாம தான் லீவு கழிஞ்சுண்டு இருந்தது. சரி விடுங்கோ என்னோட ப்ராரப்த கர்மா என்னோட போகட்டும்.

ஆஸ்பத்திரி ஆர்பாட்டங்கள் எல்லாம் கழிஞ்சு ஆத்துக்கு போன 3 நாள்ல கல்லிடைல சதுர்த்தி உத்ஸவம் ஆரம்பம் ஆயிடுத்து. திடீர்னு எல்லாம் மாறினதால தங்கமணியையும் அத்வைதாவையும் மெட்ராஸ்ல விட்டுட்டு வந்துட்டேன். தெருல இருந்த மாமா மாமிகளுக்கு பதில் சொல்லி முடியலை! ஆத்துக்காரி வரலையா? குழந்தையாவது கூட்டிண்டு வந்துருக்கலாம்! எப்ப கூட்டிண்டு வருவை! வருவைல்யோ!னு எல்லா பக்கத்துலேந்தும் கேள்விகள்/உத்தரவுகள். என்ன பண்ணர்து! ஆத்துக்காரியை விட்டுட்டு வரணும்னு எனக்கு மட்டும் வேண்டுதலா என்ன? போன தடவை நான் கோவில்ல ஜோலியா இருந்தபோது தங்கமணியை சுத்தி வளைச்ச மாமிகள் “எங்காத்து ஓர்படியோட நாட்டுப்பொண் மாதிரியே இருக்கை,மதுரைல இருக்கர மருமாள் மாதிரியே இருக்கைனு சிலபல பிட்டுகளை போட்டுட்டு ‘தோஹால தங்கம் என்ன விலை? இங்கைக்கும் அங்கைக்கும் என்ன வித்தியாசம்? உங்காத்துகாரன் இதுவரைக்கும் என்னல்லாம் வாங்கிதந்துருக்கான்?”னு வரிசையா கேள்விகேட்டுருக்கா. தங்கமணிக்கும் கேள்வி கேட்டுதான் பழக்கம் பதில் சொல்லர்து எப்போதும் அடியேன் நெட்டுவாங்கம் தான். அதனால வழக்கம் போல’ 5 பவுண் வாங்கினா நிஜமாவே ஒரு கிராம் தங்கம் சும்மா தருவா மாமி. நம்ப ஊர்ல 10 ரூபா பனியன் ஜட்டி மாதிரி அந்த ஊர்ல பிளாட்பாரத்துலையே கடை போட்டு தங்கம் வியாபாரம் பண்ணுவா!’னு அள்ளிவிட்டேன். அந்த மாமி வாயைபொழந்துண்டு இருக்கும் போதே தங்கமணியை மெதுவா அந்த கும்பல்கிட்டேந்து காப்பாத்தி கொண்டுவந்தேன். அந்த மாதிரி வம்புக்கு இப்ப வழியில்லையேனு அவாளுக்கெல்லாம் குறை.

‘எங்க நாத்தனாரோட சம்பந்தியோட சித்தப்பாவோட ஆத்துக்காரியும், உங்க அம்மாவோட தாய்மாமாவோட ஆத்துக்காரியோட அம்மாவும் அக்கா தங்கை அப்படினா உங்களுக்கு பேரன் பொறந்ததுக்கு எனக்கு சீதகம் உண்டா? உண்டுனா மூனு நாளா இல்லைனா பத்து நாளா?’னு ஹோமத்துக்கு வந்த ஒரு வாத்தியாரோட ப்ராணனை ஒரு மாமி  எடுத்துண்டு இருந்தா. ‘எனக்கு பேரனே பொறந்து தொலச்சுருக்க வேண்டான்’னு சொல்லறமாதிரி அந்த வாத்தியார் முழிச்சுண்டு இருந்தார். பன் கொண்டை! பாலா கொண்டை போட்ட மாமிகள், 'கேஸ் சிலிண்டர் மாட்டினா எத்தனை நாள் நோக்கு வருது?'னு கேள்வி கேட்டுண்டு இருந்த காலம் போய் 'இன்டர்னெட் ரொம்ப ஸ்லோவா இருக்கு! சாம்சங் போன்ல சார்ஜ் நிக்கவே மாட்டேங்கர்து!' மாதிரியான சம்பாஷனைகள்ல மூழ்கி இருக்கர்தை பாத்தா நிஜமாவே ‘அச்சே தின்!’வந்த மாதிரிதான் இருக்கு. சதுர்த்தி உத்ஸவம் நல்லபடியா முடிஞ்சதுக்கு அப்புறம் கோவைல இருக்கும் சித்தப்பாவாத்துக்கு போயிட்டு அப்பிடியே நம்ப இட்லி மாமியாத்துக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்தேன். ‘தெற்கால வந்து வடக்கால திரும்பி ஒரு மேட்டுல ஏறி பள்ளத்துல இறங்கி கடைசில வந்தா ஒரு பியூட்டிபார்லர் வரும்! அங்க வந்துட்டு திருப்பி கால் பண்ணுங்க மாமாவை அனுப்பி வைக்கறேன்’னு போன்ல வழி சொன்னாங்க.

நானும் மண்டையை ஆட்டிட்டு சித்தப்பாவோட கிளம்பி போனா மேடும் பள்ளமும் மாத்தி மாத்தி வருது நம்ப அக்கா சொன்ன பியூட்டி பார்லரை மட்டும் காணும். எங்கையாவது வண்டியை நிப்பாட்டி ‘ஏனுங்க இந்த பக்கம் பியூட்டி பார்லர் எதாவது இருக்கா?’னு விசாரிச்சா ‘ஏன்கண்ணு நீ ஏற்கனவே அழகாதானே இருக்க அப்புறம் எதுக்கு பியூட்டி பார்லர்?’னு ஒருத்தன் நக்கல் அடிக்கறான் இன்னொருந்தர் ‘பொம்பளபுள்ளைங்க மூஞ்சி பூரா பவுடர் அப்பிகிட்டு வந்து பயம்குடுத்துமே அந்த இடமா? தெரியாதே!னு பதில் சொல்லறார். குசும்பு பிடிச்ச கோவைனு சும்மாவா சொல்லியிருக்கா. அனேகமா அந்த பியூட்டி பார்லரை குத்துவிளக்கேத்தி திறந்து வச்சதே நம்ப இட்லிமாமியா தான் இருக்கும்னு தோனர்து.



அப்புறம் ஒரு வழியா சிவப்பு கலர் ஹோண்டா ஆக்டிவால பரமசாதுவா ஒரு மனுஷர் தேடும் விழிகளோட எதிர்தாப்புல வந்தார். அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பியூட்டி பார்லருக்கு பக்கத்துல வச்சு எங்களை அடையாளம் கண்டு வீட்டுக்கு கூட்டிட்டு போனார். வீட்டுக்குள்ள நுழைஞ்சு பத்து நிமிஷம் வரைக்கும் சஹானா என்னையும் என்னோட சித்தப்பாவையும் பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்கு வந்த ஏட்டைய்யா சந்தேகமா பாக்கரமாதிரியே தான் பாத்துண்டு இருந்தா. அதுக்கு அப்புறம் ரொம்ப இஷ்டமா என்கிட்ட வந்தாங்க மேடம். அவரோட சேர்ந்து நானும் விஷப்பரிட்சைல(சாப்பாடு) இறங்கபோறேன்னு இட்லி மாமியோட ஆத்துக்காரருக்கு பயங்கர சந்தோஷம். ‘குலதெய்வத்தை வேண்டிகிட்டு தைரியமா சாப்பிடுங்க! ஆறிலும் சாவு நூறிலும் சாவு!’னு பீதியை கிளப்பினார். அவர் ரொம்ப வேகமா சாப்பிட்டு முடிச்சுட்டார். அவரோட தங்கமணி அந்தபக்கம் போன சமயம் ‘கஷ்டமான விஷயத்துல ரொம்ப காலம் கடத்தக்கூடாது அதுக்குள்ள பாய்ஞ்சு வெளில வந்துடனும்’னு சொல்லிண்டே கையலம்ப போயிட்டார். சாப்பிட்டு முடிஞ்சு ரொம்ப நேரம் சஹானா கூட விளையாடிண்டு இருந்தேன். அடிக்கடி மணியை பாத்துண்டே இருந்த மாமா ‘தக்குடு இனிமே நீங்க பயப்பட வேண்டாம்! சாப்பிட்டு அரைமணி நேரம் ஆச்சு அபாயகட்டத்தை தாண்டியாச்சு! இனிமே உசுருக்கு சேதாரம் இல்லை!’னு சொல்லிட்டு சிரிச்சார். மனுசன் பாவம் வசமா சிக்கியிருக்கார் நம்ப இட்லி மாமிகிட்ட. 'கள்ளம் கபடம் இல்லாத ஒரு இனிமையான குடும்பம்'னு சொன்னா அது மிகைஇல்லை(இட்லி மாமி! நீங்க சொன்ன மாதிரியே சொல்லிட்டேன்).


ஒரு மாசம் ஒரு நிமிஷமா கழிஞ்சு போய் மறுபடியும் தோஹால வந்து ஒட்டகம் மேய்க்க ஆரம்பிச்சாச்சு! ஆத்துல இருக்கரவா எல்லாரையும் தக்குடு விசாரிச்சான்னு சொல்லுங்கோ!