Thursday, October 10, 2013

கல்லிடை பயணம்

அனைத்து வாசக/வாசகிகளுக்கும் தக்குடுவின் இதயம் நிறைந்த நவராத்ரி நல்வாழ்த்துக்கள்!!

அத்வைதாவோட நாமகரணத்தை ஒரு காரணமா வச்சுண்டு மெட்ராஸ் வந்தாலும், பக்கத்துல யாரோ பேசர்துக்கு உம் கொட்டிண்டே எதிர்தாப்புல போகும் ஊதா கலரு ரிப்பன்னையும் அவளோட அப்பனையும் பாக்கர மாதிரி நம்ப வானர மனசு கல்லிடையை சுத்தி தான் நொண்டி அடிக்கர்து. ஊருக்கு போகர்துக்கு முன்னாடியே சாஸ்தா ப்ரீதியோட சேதி தேதியோட வந்துடுத்து. தோஹால இருந்தே தங்கமணிகிட்டயும் “அண்டா நிறைய பாயாசம் இருப்பதாலும் தெரு முழுக்க மாமா/மாமி வம்பு இருப்பதாலும் 2 நாள் கல்லிடை போய்வர அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்”னு ஒரு பிட்டை போட்டு பர்மிஷன் வாங்கி வச்சுண்டாச்சு. அப்புறம் என்ன, நாமகரணம் முடிஞ்ச ரெண்டாவது நாள் வாலை கிளப்பிண்டு ஓடும் கன்னுகுட்டி மாதிரி ஒத்த பையை தூக்கிண்டு பெருங்குளத்தூர்ல போய் நின்னு எங்க ஊருக்கு போகும் ஆம்னி பஸ்ஸுக்கு போனை போட்டு “சம்முகம் அண்ணாச்சியா? அண்ணாச்சி எங்க இருக்கீய? நான் இங்க பெருங்குளத்தூர்ல நிக்கேன்! நீங்க பைய்ய்ய்ய வந்து ஏத்திகிடுங்க!னு பேசிண்டு இருக்கும் போது என்னோட மச்சினன் “அத்திம்பேர் பை மட்டும்தான் போகர்தா நீங்க போகலையா?”னு பாவமா கேட்டான்.

பஸ்ஸுக்குள்ள ஏறினா “ஏ மாப்ளே! நீ எங்கடா வந்தை?”னு ஒரு குரல் கேக்கர்து. “அண்ணா! எப்பிடி இருக்கேள்?”னு ஒரு குத்துக்கல்தெரு பொண்ணு ஜாரிக்கர்து. “ஆத்துக்காரி வரலையாடா கோந்தை?”னு இன்னொரு மாமி ஜாரிப்புக்கு நடுல புகுந்து என்னோட சீட்டுக்கு போனேன். ஒரு மினி கல்லிடையே பஸ்ஸுக்குள்ள பாத்தமாதிரி ஒரு சந்தோஷம்! அந்த சந்தோஷத்தோடையே கண்ணை மூடி திறந்தா தாழையுத்தூர் சிமெண்ட் பாக்ட்ரி வந்துடுத்து. திருனவேலிகாராளுக்கு அந்த இடத்துலேந்தே திருனவேலி ஆரம்பம் ஆயிடும். கல்லிடைகாராளுக்கு சேரன்மகாதேவி தாண்டியாச்சுன்னா கல்லிடை தான். பஸ் ஸ்டாண்ட்ல ஒரு மாமா டர்க்கி டவலை தலைப்பா கட்டிண்டு அவரோட பொண்ணு மாப்பிள்ளைக்கு காத்துண்டு இருந்தார். அடுத்த ரெண்டு நிமிஷத்து ‘சிங்கம்’ பட டைரக்டர் ஹரி படத்துல 15 டாடா சுமோ வரிசையா போகரமாதிரி 10 ஆட்டோ எல்லா தெருவுக்கும் சீறிபாய்ஞ்சுண்டு போச்சு.

‘திடுதிப்பு’னு ஊருக்கு கிளம்பினதால விஷேஷத்துக்கு வந்த அம்மா அப்பா கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல வந்துண்டு இருந்தா, கொலு மேளம் வாசிக்க போன கணேச கம்பர் மாதிரி முதல் ஆளா பூட்டியிருக்கும் ஆத்துவாசல்ல போய் இறங்கினா, ‘ஏஏஏ மாப்ளே! பொண்ணரசி என்ன சொல்றா?’னு ஒரு அண்ணா கேக்க, அவாத்து மாமி ‘பல்தேய்ச்சுட்டு காபி குடிக்க வா!’னு கூப்பிட்டா. இந்த அன்பும் பாசமும் தான் ஊர் ஊர்னு கோட்டி புடிச்சு நம்மை அலைய வைக்கர்து. இந்த தடவை எங்க தெருதான் சாஸ்தா ப்ரீதியோட ஏற்பாடுங்கர்தாலையோ என்னவோ தெரியலை தெருவே ஜே ஜேனு இருந்தது. இருக்கர கூட்டம் போராதுன்னு பாம்பே,மெட்ராஸ்,பாலக்காடு,கல்கத்தா,மஸ்கட்னு எல்லா இடத்துலேந்தும் செட்டு செட்டா ஆட்கள் வந்து குமிஞ்சுருந்தா. வெளியூர்லேந்து வந்தவா எல்லாருக்கும் தெருல ஒரு மண்டபத்துல காபி ஆகாரம் ஏற்பாடு ஆயிருந்தது. 'மாமா கொஞ்சம் சட்னி விடுங்கோ!'னு யாரோ ஒரு கல்கத்தா மாமி கூப்பிட்டுண்டு இருந்தா. சட்னி/சாம்பார் இல்லாமையே ஒரே சிட்டிங்ல 12 இட்லி சாப்பிடர மாதிரி இருந்த அவாத்து மாமா பக்கத்துல உக்காசுண்டு காபிக்கு காத்துண்டு இருந்தார்.


மஹா நைவேத்யம்!

மெதுமெதுவா தெருலேந்து ஆட்டோ கிளம்ப ஆரம்பிச்சது. நானும் ஒரு பாலக்காடு மாமாவை ‘ஆஹாரம் கழிச்சேளா மாமா?’னு கேட்டுண்டே அவரோட பக்கத்துல ஏறி உக்காசுண்டுட்டேன். ‘நீ ஆருனு மனசுல ஆகலை கேட்டையா?’னு அவர் சொன்னதுக்கு அப்புறம் ‘ஹலோ ஐ யம் சஞ்ஜய் ராமசாமி!’னு அறிமுகம் பண்ணிண்டே கோவில்வாசல்ல போய் இறங்கியாச்சு. எத்தனை வருஷம் ஆனாலும் எவ்ளோ சம்பாத்யம் பண்ணினாலும் இன்னும் தைரியமா கோவில் வாசல்ல செருப்பை கழட்டர்துக்கு பயமாதான் இருக்கு. திருப்பி மத்யானம் பொட்டப்பொடைக்கர வெய்யில்ல ஆத்துக்கு கிளம்பர்துக்கு வெளில வந்து பாத்தா யாராவது நம்ப செருப்பை “எக்ஸ்சேஞ் மேளா”ல லவட்டிண்டு போயிருப்பா. அதனால முதலியப்பபுரம் தெருல முன்னடிக்க இருக்கும் ஒரு மாமியாத்துல போய் ‘செளக்கியமா இருக்கேளா?’னு ஜாரிச்சுட்டு அப்பிடியே செருப்பை பத்திரபடுத்திட்டு வந்தேன்.

இத்தூணூன்டுலேந்து சதாபிஷேக தம்பதிகள் வரைக்கும் எல்லாரையும் சாஸ்தாங்கோவில்ல பாக்கமுடிஞ்சது. எல்லார் முகத்துலையும் அப்பிடி ஒரு சந்தோஷம். எந்தபக்கம் திரும்பினாலும் “செளக்கியமா இருக்கேளா? பொண்ணு எங்க இருக்கா?’ ‘பிள்ளைக்கு பாத்துண்டு இருக்கேளா? அமெரிக்கால தெற்க இருக்கானா வடக்க இருக்கானா?’ ‘பேத்திக்கு ஆயுஷ்ய ஹோமம் நன்னா கழிஞ்சுதா?’ ‘கல்யாணியோட மூத்த ஓர்படி பம்பேல திடீர்னு போய்ட்டாளாமே? ஓஓஓ! ஏதுடி இப்பிடி சொல்றை?’ ‘ஏ ராஜூ! அப்பாக்கு ஹார்ட் ஆப்ரேஷன் ஆச்சாமே?’ ‘ரெண்டாம் மூத்தவனுக்கு மட்டுக் ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா பொறுப்பு கழியும். ஹம்ம்ம்ம் ஆதிமூலம் தான் வழிவிடனும்!’னு பலவிதமான சம்பாஷணைகள் காதுல கேட்கும் போது டைம் மிஷின்ல ஏறி ஆறு வருஷம் பின்னாடி போன மாதிரி இருந்தது.

பிலிம் ரோல் போட்ட 'கோடாக்' காமிரால முன் பக்கமூடியை திறக்காம போட்டோ எடுத்த காலம் போய் ஏகப்பட்ட எஸ் எல் ஆர்-களும் 'ஆப்பிள்' ஐ பேடும், சாம்சங் காலக்ஸியும் பாக்கமுடிஞ்சது. யாரோ ஒரு மாமி ஐ பேட்ல தீபாராதனையை ரெக்கார்ட் பண்ணிண்டு இருந்தா. இன்னொரு மாமா ரொம்ப சீரியசா “பதினஞ்சு நாளுக்குள்ள ஒரு முடிவு தெரிஞ்சாகணும்”னு செல்போன்ல யார்டையோ சொல்லிண்டு இருந்தார். ‘பதினஞ்சு நாள்ல முடிவு தெரியனும்னா அப்போ நம்ப ‘ஏர்போர்ட்’ நாராயணசாமி கிட்ட தான் கேட்கனும்’னு மனசுக்குள்ள நினைச்சுண்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் பெங்களூர் கோமா மாமி & அவாளோட பொண்ணு மாப்பிள்ளை பேரன்கள் எல்லாரையும் பாத்து பேசினேன். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் சாஸ்தா ப்ரீதில கலந்துண்டது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. (சாஸ்தா ப்ரீதி விஸ்தாரமா படிக்க Part 1 Part 2)

குறிப்பு - நமோ / மிஷன் 272 ப்ளஸ்/ ராகுல்/ நான்சென்ஸ்/ ஒபாமா/ அமெரிக்கா/ சிரியா/ நஸ்சிரியா / கருப்பசாமி பாண்டியன்/ லாலு/ பெங்களூர் கோர்ட்/ ஓனாயும் ஆட்டுக்குட்டியும்/ காமென்வெல்த்/ தமிழருவினு பல விஷயங்களை பதிவா எழுதும் ஜாம்பவான்களுக்கு நடுல கல்லிடையின் எல்லையை தாண்டாத இந்த தக்குடு ப்ளாக்ல இதுவரை ஒரு லட்சம் ஹிட்ஸ் கொடுத்து ஆதரவு அளித்த(க்கும்) அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்!