Thursday, September 19, 2013

மறுபடியும் ஒரு பயணம் (Part 2)

Part I படிக்க இங்கே 'க்ளிக்'கவும்

போன் பண்ணினாளே தவிர எனக்கு இவா ரெண்டு பேரும் எப்பிடி வரப்போரானு சந்தேகமாவே இருந்தது. மைனர்வாளை பத்தி உங்க எல்லாருக்குமே நன்னா தெரிஞ்சுருக்கும் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே இன்ட்ரோ பாட்டு போட்டு அறிமுகம் பண்ணிவைக்கர காலகட்டத்துல நாம இருக்கர்தால ஆர் வி எஸ் அண்ணாவை பத்தியும் கொஞ்சம் சொல்லதான் வேண்டியிருக்கு. ஒரு காலத்துல மூனு பக்கத்துக்கு குறைவு இல்லாம தமிழ் பிரவாகமா ஓடும் அகண்ட காவேரி மாதிரி ப்ளாக்ல எழுதிண்டு இருந்தார். கொஞ்சும் சலங்கை படத்துல வரும் ‘சிங்கார வேலனே வேலா’ பாட்டுல வரும் ஜெமினி & சாவித்ரி மாதிரி இவரோட பதிவும் அதுக்கு ரசிகமணியோட கமண்டும் இருக்கும், நடுல T S பாலயா முகசேஷ்ட்டை மாதிரி நாங்களும் கமண்ட் போட்டு ரசிச்சுண்டு இருந்தோம். இவரோட பதிவுகளை எனக்கு தெரிஞ்ச சில நலம்விரும்பிகளுக்கு அனுப்பி வைக்கர்து உண்டு. அந்தமாதிரி ஒரு தடவை இவர் எழுதின போஸ்டை படிச்ச ஒரு மாமா, “தக்குடு! ஆர் வி எஸ்ஸுக்கு ஆனாலும் அசாத்திய தைரியம்டா! கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் சேப்பாயி சிணுங்கினாள்/உரசினாள்னு யாரோ ஒரு ஜலஜா கூட ஜல்ஸா பண்ணினதையெல்லாம் லஜ்ஜையே இல்லாம எழுதியிருக்காரே இந்த மன்னார்குடிக்காரர்! அவாத்து மாமி ஒன்னும் சொல்லமாட்டாளா?”னு வாயை பொளந்தார். “நாசமா போச்சு! ஜலஜாவும் இல்லை வலஜாவும் இல்லை! சேப்பாயி அவரோட கார் மாமா!”னு சொல்லி புரியவச்சேன். சமீபகாலமா மூஞ்சிபுஸ்தகத்துல ஒரு போஸ்பாண்டி மாதிரி பல வாலிபர்களை தன்னோட சுவாரசியமான எழுத்தால் வருத்தபடாம பாத்துக்கரார்.

அடுத்தது நம்ப கோவைசரளா மன்னிக்கவும் அனன்யாக்கா. ஓட்ட டப்பால கோலிக்குண்டை உருட்டிவிட்ட மாதிரி அப்பிடி ஒரு அமைதியான சுபாவம். எல்லாத்தையும் சிரிச்சமுகத்தோட எதிர்கொள்ளும் ஒரு மனப்பக்குவம். ஆத்துக்காரரை எதுக்கெடுத்தாலும் குத்தம் சொல்லும் ஒரு பதிபக்தினு சொல்லிண்டே போகலாம். “மாங்காடு காமாக்ஷி கோவிலுக்கு ஆத்துக்காரரோட போயிட்டு நேரா உங்காத்துக்கு வந்துடறேன் கேட்டையா?”னு போன்ல தகவல் சொன்னா. “கோவிலுக்கு போன இடத்துல புதுசா கல்யாணமானவா மாதிரி வாக்குவாதம் பண்ணிண்டு இருக்காமா ரெண்டுபேரும் சமத்தா வந்துசேருங்கோ!”னு சொல்லிண்டு இருக்கும் போதே மைனர்வாள் “மடிப்பாக்கத்துலேந்து கிளம்பியாச்சு! வந்துண்டே இருக்கேன்!”னு போன்ல பரபரத்தார். இவர் நேரா கிளம்பி ரோட்டை பாத்து வண்டியை ஓட்டிண்டு வந்தா பரவாயில்லை, “புஷ்டியாக இருந்த ஒரு இளம் யுவதி இஷ்டியாக ஒரு யுவனின் முதுகில் பல்லிபோல் ஒட்டிக்கொண்டு வந்தாள்! கீரை வாங்கிக்கொண்டு வந்த வெத்தலை வாய் பாட்டி காரை பாக்காமல் குறுக்கே புகுந்தாள்!”னு வரவழில பாத்ததை எல்லாம் மனசுக்குள்ள அடைகாத்து மூஞ்சிபுஸ்தகத்துல போடர்துக்கு யத்தனம் பண்ணுவாரே அதுதான் கவலை!


மஹானுபாவர்களுடன் அடியேன் :)

ஒரு வழியா மைனர்வாள் தம்பதி சமேதராய் வந்து காட்சி குடுத்தார். காங்கிரஸ் காரியகமிட்டி மீட்டிங் அடண்ட் பண்ணர்துக்கு மார்டன் ஜீன்ஸ்ல வந்தமாதிரி தேசியக்கொடியை நெஞ்சில் குத்திண்டு வந்திருந்தார். இவர் வந்து அடுத்த ஐந்தாவது நிமிஷம் நம்ப லட்சிய தம்பதிகள் வந்து சேர்ந்தா. இவாள்ளாம் பெரிய ரைட்டர்ஸ் மாமா! கன்னாபின்னானு எழுதி தள்ளுவா!னு சொல்லி என்னோட மாமனார் & மாமியார் கிட்ட அறிமுகம் பண்ணி வச்சேன். ‘எதை பத்தி எல்லாம் எழுதுவா?’னு மெதுவா என்கிட்ட கேட்டார். ‘என்ன இப்படி கேட்டுட்டேள்! இவா எழுதாத ஏரியாவே கிடையாது சுருக்கமா சொல்லனும்னா இவா எழுதலைனா அது ஏரியாவே கிடையாது!’னு சொல்லிட்டு அரை லோட்டா ஜலத்தை குடிச்சுண்டு இருக்கும் போது ‘இவா எல்லாம் உங்களுக்கு எப்பிடி தெரியும்’னு எங்க மாமனார் அடுத்த கேள்வியை கேக்கவும் எனக்கு புரை ஏறிடுத்து. நானும் எழுதுவேன்னு சொல்லபோக, அவர் ஆசையா என்னோட ப்ளாக்கை திறந்து பாத்தா எல்லாம் பக்கத்தாத்து வம்பு எதிர்தாத்து வம்பாதான் இருக்கும் போதா குறைக்கு சிலுக்கு வேற நடுல வந்து ஒரு டான்ஸ் ஆடிட்டு போயிருப்பா.

‘இவாளோட எழுத்துக்கு நான் பரமவிசிறி. அதனால தான் பாக்க வந்துருக்கா!’னு சொல்லி சமாளிக்கர்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. மைனர்வாளோட தர்மபத்தினி பக்கத்துல இருந்ததாலயோ என்னவோ தெரியலை மைனர்வாள்கிட்ட அப்பிடி ஒரு பவ்யம்! பேசர்தும் அவ்ளோ ஜாக்ரதையா பேசினார். அனன்யாக்காவாத்து மாமாவை இப்பதான் முதல் தடவையா பாக்கறேன். அசாத்தியமான பொறுமை. ரொம்ப நேரத்துக்கு கலகலனு எல்லாரும் பேசிண்டு இருந்தா. சாதாரணமான ஆரம்பிச்ச வம்பு ஒரு கட்டத்துல சோழமண்டல/பாண்டிய மண்டல பாடல்பெற்ற சிவஸ்தலங்கள் வழியா பயணம் பண்ணி பாலக்காடு கோயம்புத்தூர் எல்லாம் போய் கல்லிடை வந்து சென்னைக்கு திரும்பினது. சம்பந்தமே இல்லாம எவ்ளோ நேரமா பேசிண்டு இருக்கானு எங்க தங்கமணி ஆத்துல எல்லாரும் ஆச்சரியமா பாத்தா. பொதுவா இந்த மாதிரி நாட்டுக்கு அவசியமான டிஸ்கஷன் எல்லாம் TRC மாமாவாத்து அடுக்களைல டிக்காஷன் இறங்கிடுத்தானு பாத்துட்டுதான் ஆரம்பிப்போம். ஆனா பாருங்கோ! முன்னாடி எல்லாம் ஸ்டேட் ஸ்டேட்டா சுத்திண்டு இருந்த மனுஷர் இப்பெல்லாம் சிங்கபூர் மலேசியானு சுத்திண்டு இருக்கார்.

ரொம்ப நெருங்கின சொந்தக்காரா கிட்டகூட இந்த அளவுக்கு நாம பேசுவோமா அப்பிடிங்கர்து சந்தேகம்தான்! தொட்டுக்கோ தொடச்சுக்கோ!னு இருக்கும் சொந்தங்களுக்கு நடுல இது ஒரு வித்தியாசமான உலகம் தான்! எப்பிடியாவது அடுத்த தடவை அடப்பாவி தங்கமணியோட அப்பாவி ரெங்கமணியையும் சந்திக்கனும்.

கல்லிடை சாஸ்தா ப்ரீதி அடுத்த போஸ்ட்ல தான் பாக்கனும்!

Thursday, September 12, 2013

மறுபடியும் ஒரு பயணம்

ஹ்ம்ம்ம்ம்ம்ம்! சீன பயணி யுவான்சுவாங் மாதிரி ஊருக்கு போனா தான் என்னைமாதிரி ஏழைபாழைங்க போஸ்ட் எழுதமுடியர்து. முதல்ல ஒரு சந்தோஷமான சமாசாரத்தை சொல்லிக்கறேன் ஜூலை மாசம் பத்தாம் தேதி அடியேனுக்கு ஒரு பெண் குழந்தை ஆசிர்வாதமாகியிருக்கு. அவளை பாத்துட்டுவரலாம்னுதான் இந்த பயணம். குழந்தை பிறந்த செய்தி கேட்டதுலேந்து ‘எப்படாப்பா அதோட முகத்தை பாக்கபோறோம்’னு பட்டுண்டு வந்தது. “வெளி நாட்டுல வேலை பாத்தா இதுதான் ஒரு அசெளகரியம்! இந்த நிலைமை யாருக்கும் வரகூடாது”னு சராசரி வெளி நாடுவாழ் NRI இந்தியன் மாதிரி போலி ஒப்பாரி வைக்கர்துக்கு நான் தயாரா இல்லை. இதெல்லாம் உண்டுனு தெரிஞ்சுதானே கடலை தாண்டிவந்துருக்கு! அப்புறம் என்ன கண்ணை கசக்கிண்டு சின்னப்புள்ளத்தனமா? பிளைட்ல மட்டும் எப்ப ஏறினாலும் ஒரு பிரச்சனை நமக்கு முன்னாடி ஏறி உக்காசுண்டு நமக்காக காத்துண்டு இருக்கு. இந்த தடவை முதல்ல ‘ஆய்புவன்’ல புக் பண்ணி அப்புறம் கடைசி சமயத்துல கத்தார் ஏர்வேஸுக்கு மாத்தினதால கடைசி சீட்தான் கிடைச்சது. போய் உக்காசுண்டா பக்கத்துல கறுப்பு கலர் ட்ரெஸ் போட்ட ரெண்டு பொம்ணாட்டிகள்.

அம்மாவும் பொண்ணும் மாதிரி இருந்தா. ‘யாரேன் இருந்துட்டுபோறா நமக்கு என்ன வந்தது?’னு நான் இருக்கும் போதுதான் அந்தம்மா தோள்ல மாட்டியிருந்த கோணிப்பைலேந்து(ஹேண்ட் பேக்னும் சொல்லலாம்) கத்தார் பாஸ்போர்ட்டை வெளில எடுத்தது. “ஆத்த்த்தாடி! இந்தம்மாவும் பொண்ணும் லோக்கல் ஆளுங்களா? நான் தொலைஞ்சேன்டா இன்னிக்கி!”னு மனசுக்குள்ள சொல்லிண்டேன். நாம தெரியாம தூங்கி விழுந்தாலோ இல்லைனா அந்தம்மா தூங்கி விழுந்தாலோ நம்ம முதுகுலதான் தர்ம அடி விழும். ஏர்ஹோஸ்டஸ் கிட்ட “காபி/டீ போடர இடத்துல ஒரு முக்காலி இருந்தாலும் பரவாயில்லை கமாண்டோ சேர் போட்டா கூட போதும் உனக்கு பேச்சாட்டு துணைக்கு அங்க வந்து உக்காசுக்கறேன் இந்த இடத்தை மாத்திகுடும்மா!”னு கெஞ்சிண்டு இருக்கும் போது எனக்கு இடதுபக்கமா ஜென்னலோர ரெண்டு சீட்டுக்கு ஒரு தம்பதிகள் வந்து உக்காசுண்டா.

ரவுண்ட் நெக் டீசர்ட் போட்ட அந்த மாமா கிட்ட மெதுவா ‘மேடம் என்னோட இடத்துல உக்காசுண்டாங்கன்னா நான் உங்க பக்கத்துல வந்துடுவேன்னு பக்கத்துல இருக்கும் பொம்ணாட்டியை கண்காட்டிண்டே நான் முடிக்கர்துக்குள்ள “நோ நோ நாங்க சேர்ந்து வந்துருக்கோம்!”னு பதில் சொல்லிட்டு ஜன்னல் வழியா வெளில எட்டிபாத்துண்டா. ‘தாராளமா சேர்ந்து வாங்கோளேன்! யாருவேண்டாம்னா? இப்ப என்ன டைவர்ஸ்ஸா வாங்க சொன்னேன்? நாலு மணி நேரம் 2 அடி தூரத்துல உக்காசுண்டு பிரயாணம் பண்ணகூடாதா? மாமியோட அக்கா பையனுக்கு மெட்ராஸ்ல கல்யாணம்/ ஒன்னுவிட்ட மாமாவோட ஷட்யப்தபூர்த்தினு மாமாவை ஒரு மாசம் விட்டுட்டு ஜாலியா ஊருக்கு போகும் போது ஒன்னும் தெரியாது. இங்க மாமா பருப்புபொடில ஆரம்பிச்சு மூக்குபொடி சாதம் வரைக்கும் எதையாவது சாப்பிட்டு உயிரை கைல பிடிச்சுண்டு இருப்பார். நாம ஒரு ஆத்திர அவசரத்துக்கு பிளைட்ல கேட்கும்போதுதான் என்னவோ மூனாறுக்கு ஹனிமூன் வந்தவா மாதிரி கையை பிடிச்சுண்டு பேசிண்டு வருவா.

பக்கத்து வரிசைகாரர்கிட்ட கெஞ்சர்தை விட லோக்கல் பொம்ணாட்டிகள் கிட்ட ‘டப்பா’ இங்க்லீஷ்ல “யூ லைக் மை மதர் ஆண்ட் யுவர் டாட்டர் லைக் மை சிஸ்டர்! சிஸ்டர் சன்னுக்கு மை மடில தான் காது குத்திங்க்! ஆல் ஆர் சேம் சேம் பாமிலி”னு சொல்லும்போதே அந்த புண்ணியவதி என்னோட குழந்தை மனசை புரிஞ்சுண்டு ‘நோ பிராபளம் யூ சிட் ஐ சிட்!’னு சொல்லி அனுமதி குடுத்தாங்க.( பொதுவா இங்க இருக்கர மனுஷா கிட்ட Past particible/ verb/ future continuous tense இதெல்லாம் போட்டு பேசினா கடைசில “யாரு பெத்த புள்ளையோ! அய்யோ பாவம்!”னு சொல்லற மாதிரி ஒரு பரிதாப பார்வை பாத்துட்டு ‘மாஃபி இங்கிலீஷ்!’னு சொல்லிடுவா). அதுக்கு அப்புறம் பைசா நகர் சாய்ஞ்ச கோபுரம் மாதிரி இடதுபக்கமா சாய்ஞ்சுண்டே 4 மணிக்கூர் பிரயாணம் பண்ணினேன். எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் பக்கத்து வரிசை மாமா மெதுவா ‘தோஹால எத்தனை வருஷமா இருக்கேள்?’னு ஆரம்பிச்சார். “சீட் மாத்தி குடுக்க வக்கில்லை, முகரகட்டைக்கு பேச்சு என்ன வேண்டியிருக்கு பேச்சு?”னு ‘நறுக்’னு கேக்கும் எங்க ஊர் மாமிகளை மனசுல நினைச்சுண்டே “கொஞ்சம் வருஷம் ஆச்சு!”னு சுரத்தே இல்லாம பதில் சொன்னேன். நீங்க எங்க வேலைபாக்கறேள்?னு நான் கேட்காமையே அவர் ஒரு தனியார் இன்ஷுரன்ஸ் கம்பெனி பெயரை சொன்னார். “என்னடா எலி அம்மணமா போகுதே”னு எனக்கு முதல்லையே கொஞ்சம் சம்சியம் உண்டு, அந்த மனுஷன் கிட்ட அதுக்கு அப்புறம் ஒரு வார்த்தை பேசலையே.



லொட லொடனு பேசர்து இருக்கட்டும் முதல்ல குழந்தையை பாத்தியா? குழந்தை செளக்கியமா?னு பாசத்தோட கேட்கும் உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி! அம்மாவும் பொண்ணும் ஆண்டவன் அருளால் செளக்கியம்! குழந்தையோட முகஜாடை தக்குடுவை கலர் ஜராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கு. என்னை மாதிரி வாயாடியா வந்துடுமோ!னு தங்கமணிக்கு இப்பவே கவலையா இருக்கு. கல்லிடை காஸ்மோபொலிடனுக்கு போய் தாமிரபரணி ஜலத்தை ஒரு வாய் குடிச்சா என் பொண்ணரசியும் வாயாடியாதான் வருவா. இதுல கவலைபடர்துக்கு என்ன இருக்கு?னு சமாதானம் சொன்னேன். குழந்தைக்கு நாமகரணம் முடிஞ்சதுக்கு அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு பதிவுலக ‘கோவைசரளா’ அனன்யாக்காவும் மன்னார்குடி ‘மைனர்வாள்’ ஆர் வி எஸ் அண்ணாவும் பாக்கர்துக்கு வரர்தா போன் பண்ணி சொன்னா.
போன் பண்ணினாளே தவிர.................. (தொடரும்)

அடுத்த வாரம் - பாலக்காடு, மன்னார்குடி சந்திப்பு & கல்லிடை சாஸ்தா ப்ரீதி வர்ணனை (விஜய் டிவி ‘ஆபிஸ்’ சீரியல் மாதிரி ‘நாளை’னு இரண்டு சீன் ஓட்டினாதான் நாலு மனுஷா எட்டிப்பாப்பா)