Friday, March 23, 2012

வானர போஜனம்

எல்லாருக்கும் மனம் நிறைஞ்ச ஹேப்பி யுகாதிலு! :)



எப்பப் பாரு சாப்பாடு இல்லைனா பந்தி. இந்த தக்குடு சரியான சாப்பாட்டு ராமனா இருப்பான் போலருக்கே!னு எல்லாரும் வைய்யாதீங்கோ! ரொம்ப நாள் ஆச்சு கல்லிடை காஸ்மோபொலிடன் சம்பந்தமா பேசி. 'தக்குடு! நீ பேசியே ரொம்ப நாள் ஆச்சுடா!னு நீங்க எல்லாரும் பாயிண்டை புடிக்கர்துக்குள்ள நான் கதைக்கு போயிடறேன். சந்தோஷி மாதா பூஜை!னு ஒரு பூஜை உண்டு. பொதுவா தெலுங்கா தான் இந்த பூஜையை ஜாஸ்தி பண்ணுவா. எங்க தெருல ரெண்டு மூனு பேராத்துல ரொம்ப பயபக்தியா இதை பண்ணுவா. தொப்பை நிறைய மம்மு கிடைக்கர்தால சந்தோஷிமாதா பூஜைனு சொன்னாலே எங்க எல்லாருக்கும் சந்தோஷம் சந்தைபிச்சிண்டு போகும். சந்தோஷிமாதா பூஜை நல்ல ஆத்துக்காரர் வரணும்னு வேண்டிண்டு தெருல இருக்கும் கல்யாணம் ஆகாத அக்காக்கள் பண்ணும் பூஜை. பூஜை செளக்கியமா பண்ணிமுடிச்சுடலாம், ஆனா சாப்பாடு போட்டு முடிக்கர்துக்குள்ள சங்கரன்கோவில்ல ஆளும்கட்சி பட்டபாட்டுக்கு மேல படணும்.

சந்தோஷி மாதா விரதம் முடிக்கர அன்னிக்கி 11 இல்லைனா 15 பையங்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடணும். அந்த பையங்க திருப்தி ஆனாதான் விரதம் நல்லபடியா முடிஞ்சதா அர்த்தம். எங்க கோஷ்டியை திருப்தி படுத்தர்து அவ்வளவு சுலபம் இல்லை. இதுல போதாகுறைக்கு சாப்பாட்டுல புளிப்பு போடவே கூடாது & அதுமட்டும் இல்லாம அன்னிக்கி ஒரு நாள் முழுக்க பசங்க யாரும் புளிப்பு சம்பந்தமான வஸ்து எதுவும் சாப்பிட கூடாது. அதுக்காக சாயங்காலம் மறுபடியும் எல்லாருக்கும் ஆஹாரம் போட்டு அனுப்புவா. இவ்வளவு உபசாரம் பண்ணினாலும் பசங்க கோஷ்டி கல்யாணத்தாத்துல மாயபுரம்/மன்னார்குடியை சேர்ந்த பையனாத்துகாரா பொண்ணாத்துகாராளை பாடாபாடுபடுத்தர மாதிரி பொசுக்கி எடுத்துடுவா.

எங்களோட கரகாட்டக்காரன் செட்டை வச்சு ரெண்டு வருஷம் சந்தோஷிமாதா விரதம் இருந்த ஒரு மாமியாத்துல 'இனிமே விரதமே வேண்டாம் சாமி!'னு பிரதிக்ஞை எடுக்கர அளவுக்கு கடுப்பாயிட்டானா பாருங்கோளேன். வாராவாரம் வெள்ளிக்கிழமை பூஜை பண்ணிட்டு பொரிகடலை & மண்டவெல்லம் யாராவது வினியோகம் பண்ண ஆரம்பிச்சா அவாத்துல கூடிய சீக்கரம் மம்மு சாப்பிட கூப்பிடுவானு எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவோம். ‘ஏன்டா! என்னடா! இங்க வாயேண்டா!’ மாதிரியான மரியாதைகள் இல்லாம ‘என்னடா கோந்தை! கண்ணா! ராஜா!’ மாதிரியான திடீர் கொஞ்சல்கள் ஜாஸ்தி ஆனா ஒரு வாரத்துல அவாத்துக்கு சந்தோஷிமாதா சாப்பாட்டுக்கு மாமி & அக்கா கூப்டபோரானு நாம புரிஞ்சுக்கனும். குறிப்பிட்ட அந்த வெள்ளிக்கிழமை வானரப்படைல இருக்கும் 15 டிக்கெட்டும் வாய்கால்ல திவ்யமா ஸ்னானம் பண்ணிட்டு பளிச் விபூதி/கோபி பளபளக்கர நெத்தியோட 'பலிகடா' மாமி ஆத்துக்கு போயிடுவோம். வாமன அவதாரத்துல குடையை கைல பிடிச்சுண்டு வந்த பகவான் மாதிரி இருக்குடா கோந்தேளா!னு அந்தாத்து மாமா ஆரம்ப பிட்டை போட்டு வைச்சுடுவார். நாங்க அதுக்கு எல்லாம் மயங்கின மாதிரி காட்டிக்கவே மாட்டோம்.

பூஜை எல்லாம் முடிய 11 மணி ஆயிடும். பத்துமணிக்கு சாப்பிடர வானரம் எல்லாம் 'பசி ப்ராணான் போகர்து!'னு கத்துவான், என்னை மாதிரி ஒரு மணிக்கு சாப்பிடர கோஷ்டி எல்லாம் ‘இன்னும் பசியே வரலை!’னு சலிச்சுக்கும். ஒரு வழியா பஞ்சாயத்து பண்ணி 12 மணிக்கு இலையை போட்டு பரிமாற ஆரம்பிப்பா. ஆரம்ப ரவுண்ட் எல்லாம் பூரியும் பருப்பு டாலும் பரிமாற ஆரம்பிப்பா. பூரியை தெற்கேந்து ஆரம்பிச்சு வடக்குல முடிக்கும் போது முதல் வானரத்தோட இலை விடிக்காத்தால 4 மணிக்கு பெருக்கி தெளிச்ச 'கொட்டடா குடையடா மாமி'யாத்து வாசல் மாதிரி சுத்தமா இருக்கும். மறுபடியும் அந்த புள்ளையாண்டானுக்கு பூரி போட்டுட்டு திரும்பினா வடக்குல இலை காலியா இருக்கும். ஏன்டாப்பா இதுகளை சாப்பிட அழைச்சோம்!னு அந்த மாமிக்கும் அக்காவுக்கும் வரும். மறுபடியும் பாசிப்பருப்பு டால் கொண்டு வரும் போது ஆளுக்கு ரெண்டு பூரி போட்டுண்டே டால் விடுவா. தொட்டுக்க எதுவும் இல்லாமையே சுமாரா 8 பூரியை நொசுக்கும் எங்க செட்டு பயலுக டால் வாளிக்கு உள்ள முக்கிலி நீச்சல் அடிச்சு வருவா. ‘போதும்’ அப்பிடிங்கர வார்த்தை ஒருத்தன் வாயிலேந்தும் மறந்து கூட வந்துடாது. சாப்பிடர குழந்தைகள் போதும்னு சொல்லற வரைக்கும் எல்லா பதார்தமும் பரிமாறனும்னு ரூல்ஸ் இருக்கர்தால மாமியாத்து மனுஷா திண்டாடி போயிடுவா.



ப்ளவுஸ் சங்கரனும் யானும்

சிலசமயம் புத்திசாலித்தனமா பண்ணர்தா நினைச்சுண்டு மாமியோ இல்லைனா அந்த அக்காவோ ‘பூரி காஆஆஆலி! அவ்ளோஓஓஒதான்!’னு சின்ன குழந்தைகள் கிட்ட சொல்றாப்ள ராகம் போடுவா. பூரி வரவரைக்கும் நாங்க எல்லாரும் ஆரஞ்சு மிட்டாய் சாப்பிட்டுண்டு இருக்கோம் மாமினு சொல்லிண்டே ‘ரொட்டிசால்னா’ சேகர் சட்டை பாக்கெட்லேந்து ஒரு ஆரஞ்சு மிட்டாயை எடுத்து காட்டுவான். ‘இருடா கோந்தை இருடா! கலாவை புதுசா மாவு பிசைய சொல்லறேன்’னு அலறிபிடிச்சுண்டு ஓடி வருவா. ‘கைல குடையோட வந்த வாமன அவதாரம்னு நினைச்சா எல்லாம் கைல கதையோட வரும் வானர அவதாரமா இருக்கேடி!’னு அடுக்களைல அம்மாவும் பொண்ணும் பேசிப்பா. அது முடிஞ்சு சாதமும் பொறிச்ச குழம்பும் ரெண்டு கோட்டிங் போடுவா. மாமி தொட்டுக்க கொஞ்சம் எலுமிச்சங்காய் ஊறுகாய் இருந்தா போடுங்கோ!னு பாவமா மூஞ்சியை வச்சுண்டு ப்ளவுஸ் சங்கரன் ஒரு பக்கம் பீதியை கிளப்புவான். கடைசில பால்பாயாசம் சுடசுட விடுவா. நன்னா சாப்பிட்டுண்டு இருக்கும் போது மறுபடியும் வாளியை சொரண்ட ஆரம்பிச்சுடுவா. பிரம்மாஸ்திரம் ஆரஞ்சு மிட்டாயை மறுபடி பாக்கெட்லேந்து எடுத்த உடனே வழிக்கு வருவா. ‘ஒஸ்தானு ஒஸ்தானு!னு சவுண்ட் மட்டும் குடுக்கறேளே தவிர கரண்டில ஒன்னும் வரமாட்டேங்கர்தே மாமி!’னு மூஞ்சிக்கு நேரையே ஹரிகுட்டி கேட்டுடுவான்.

போன தடவை ஊருக்கு போன போது இப்ப ஊர்ல இருக்கும் பசங்க கிட்ட ‘சந்தோஷி மாதா பூஜை எல்லாம் யாராவது பண்ணராளாடா?’னு ஜாரிச்சா, அப்பிடி ஒரு பூஜை இருக்கர்தே இப்ப உள்ள பசங்களுக்கு தெரியலை. யாராவது சாப்பாடு போட்டாதானே அவாளுக்கும் தெரியும் பாவம்! இப்ப இருக்கர நிலைமைக்கு யாராத்துலையும் பொண்ணுக்கு நல்ல வரன் வரணும்னு பிரயத்தனமே பண்ண வேண்டாம். பையங்க தான் எதாவது 'சந்தோஷ மாமா பூஜை' பண்ணனும் போலருக்கு! எல்லாம் கலிகாலம் வேற என்ன சொல்ல......!