Sunday, January 1, 2012

வந்தாச்சு வந்தாச்சு.........

அனைவருக்கும் உள்ளம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்



எல்லாரும் செளக்கியமா இருக்கேளா? நானும் எதோ கொஞ்சம் செளக்கியமா இருக்கேன். ஒரு மாசமா சம்சார சாகரத்துக்குள்ள ‘தத்தக்கா புத்தக்கா’னு நீச்சல் அடிச்சு போராடிண்டு இருக்கேன். அதுக்குள்ளையே எதுக்குடா கோந்தை அலுத்துக்கராய்?னு எல்லாரும் சமாதானம் சொல்ல ஆரம்பிச்சுடாதீங்கோ! நான் சும்மா லூலூவாயிக்கு தான் சொன்னேன். பிரம்மச்சாரியா ஊருக்கு போயிட்டு இப்ப பெரீய்ய்ய்ய குடும்ப இஸ்தனா திரும்பி வந்தாச்சு. கல்யாணத்துக்கு கிளம்பி கல்லிடைலேந்து மெட்ராஸ் வரர்துக்கு விஜய் ஹிட்டு படம் குடுக்கர்துக்கு போராடரமாதிரி போராடவேண்டியதா போச்சு. அடிச்ச மழையை பாத்துட்டு ‘ஓஓஓ! ஏதுடா இது! எல்லா ஆம்பளேளுக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் தானே புயல் சூறாவளி இடி மின்னல் எல்லாம் வரும், நம்ப கதைல கல்யாணத்துக்கு முன்னாடியே வரர்தே!’னு ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவா போயிடுத்து.

‘நீனு சூப்பிஸ்தானுவா! நானு சம்பிஸ்தானு!’னு டயலாக் பேசிண்டே வேகமா வரும் ரயிலை ரிவர்ஸ்ல தள்ளர தெலுங்கு பட கதானாயகனாட்டாமா உம்மாச்சி 3 நாளைக்கு மழையை நிப்பாட்டி காப்பாத்தினார். கல்யாணத்துக்கு கிளம்பர்துக்கு முன்னாடியே ‘தக்குடு கோந்தைக்கு எங்களோட பரிபூரண ஆசிர்வாதங்கள்’னு சொல்லி லக்ஷம் கட்டி வராஹன் ‘நைஜீரியா’ மாமியோட தம்பி மூலமா மணியார்டர்ல வந்தது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஜானுவாசத்துல ஆரம்பிச்சி முகூர்த்தம் வரைக்கும் செட்டு செட்டா நம்ப ஆட்கள் வந்துண்டே இருந்தா. மஃப்டில வந்த மன்னார்குடி கிருஷ்ணராட்டமா நம்ப மைனர்வாள், என்னோட அனுகூலசத்ரு பாலாஜினு ஒரு பெரிய படையே வந்தது. அவுக்காத ஐடி கார்டும் சரைக்காத தாடியுமா நம்ப எல் கே வந்தார். நீங்க என்ன பில்டப்பு குடுத்தாலும் ஆபிஸ்ல ஆபிஸ் வேலைதான் பாக்கறேள்னு யாரும் நம்பமாட்டேங்கரா எல் கே!



கையை புடிச்சு இழுத்தையா??


ஜானுவாசம் அன்னிக்கி யாரோ ஒரு மாமி மைக்கை பிடிச்சுண்டு பாடறேன் பேர்விழினு ப்ராணனை வாங்கிட்டா. வாதாபி கணபதிம் பாட்டை அக்குவேறு ஆணிவேறா பிச்சு எறிஞ்சுட்டா. மேடைலேந்து இறங்கி ஓடலாம் போல இருந்தது. பக்கத்துலேந்து என்னோட ஆத்துக்காரி 'பாடர்து எங்க பாட்டியோட அக்கா!'னு சொன்னதுக்கு அப்புறம் கப்சிப்னு ஆயிட்டேன். ‘இந்த வயசுலையும் பாட்டி என்னமா பாடரா! அப்பிடியே எழையர்தே தொண்டை! ஹம்சத்வனிக்கு இப்படி ஒரு த்வனி இருக்குனு இன்னிக்கிதான் தெரியர்து!’னு சொல்லி வச்சேன். என்ன இருந்தாலும் நாம எல்லாம் மனமோஹனசிங்கு வம்சமாச்சே. கல்யாணத்துக்கு முந்தின நாளும் சரி கல்யாணத்தன்னிக்கும் சரி காத்தால குடிச்ச ஒரு லோட்டா காபி மட்டும் தான். எட்டரைக்கு டாண்னு 7 இட்லி இல்லைனா 4 தோசையை உள்ள தள்ளியே பழகிட்டதால கண்ணு சொருக ஆரம்பிச்சுடுத்து. இதுக்கு நடுல யாரோ ஒரு ரோஸ் கலர் புடவை கட்டின மாமி எங்க பக்கத்துல வந்து ‘அந்த ரவாதோசையும் கெட்டிசட்னியும் நாக்குலையே நிக்கர்து!’னு உசுப்பேத்திண்டு இருந்தா. ‘உங்களுக்கு நாக்குல நிக்கர்து எனக்கு நாக்கு தள்ளர்து!’னு மொனகினேன். என்னோட மாமனார் சரவணபவன் ஹோட்டல் மாதிரி எல்லா ஐட்டத்தையும் மெனுல போட்டுருக்கார்.

கல்யாணத்துக்கு தோஹாலேந்து கோல்ட் ப்ரேம் கண்ணாடி போட்டுண்டு கருங்குளம் மாமி அவாளோட பொண்ணரசியோட வந்து இருந்தா. வீரவனல்லூர் மாமா மெட்ராஸ்ல இருக்கும் அவரோட பாஸை(அதான் அவாத்து மாமியை) அனுப்பி வச்சுருந்தார். கரெக்டா மாலைமாத்தி ஊஞ்சல் ஆடும்போது நம்ப வல்லிம்மா நடையும் ஓட்டமுமா வந்தா. மாலைமாத்து போது தூக்கர்துக்கு என்னோட தோஸ்த் ஒருத்தனை வரசொல்லீருந்தேன். எல் ஐ சி கட்டிடத்துக்கு பாண்ட் சட்டை போட்ட மாதிரி இருப்பான். தி நகர்ல அவன் தூக்கின உடனே தாம்பரம் ஸ்டேஷன்ல நிக்கர ரயில் எல்லாம் எனக்கு தெரிஞ்சதுன்னா பாத்துக்கோங்கோ. மேடைல உக்காசுண்டு இருக்கும் போது யாரோ ஒரு அக்கா மேடைக்கு கீழ வந்து நின்னுண்டு என்னையே பாத்துண்டு இருந்தா. யாருன்னே எனக்கு மனசுல ஆகலை. கடைசில பாத்தா அது நம்ப சிங்கப்பூர் ஜெய்ஷ்ரீ அக்கா. தொப்பி & எம் ஜீ ஆர் கண்ணாடியோட வந்து இருந்தா அடையாளம் தெரியும், திடீர்னு குலவிளக்கு ஸ்னேகா மாதிரி வந்தா எப்பிடி தெரியும். எக்ஸ்ட்ராவா ரெண்டு மாலை மட்டும் கைல இருந்திருந்தா அவாளையும் அவாத்துக்காரரையும் மனைல உக்கார வச்சுடலாம். அப்பிடி இருந்தா ரெண்டு பேரும். அக்காவோட ஆல் இண்டியா சமையலை சாப்பிட்டதுக்கு அப்புறமும் அவர் பாக்கர்துக்கு ரன்பீர்கபூர் மாதிரிதான் இருக்கார். ‘அடுத்த வாரம் ஜில் ஜில் குல் குல்னு ஒரு குஜராத்தி ஸ்வீட் பண்ணபோறேன் தக்குடு!’னு அக்கா வாஞ்சையா சொல்லும்போது அத்திம்பேர் முகத்தை பாக்கவே பாவமா இருந்தது. அவா இந்தபக்கம் நகர்ந்து போகர்துக்குள்ளையே ஒரு மாமி வந்து “எங்காத்து அகல்யாவுக்கு அந்த பையனோட ஜாதகம் வாங்கி தருவையா?”னு கெஞ்சிண்டு இருந்தா. ‘அந்த பையனோட ஆத்துக்காரிட்டையே வாங்கிக்கோங்கோ!’னு சொன்னதுக்கு அப்புறம் தான் அடங்கினா. ‘குலவிளக்கே குத்துவிளக்கு தருகிறதே!’னு சொல்லும்படியா அக்காவும் ‘பாங்க்’ மாமியும் சேர்ந்து வெள்ளி விளக்கு தந்தா.

கனடாலேந்து என்னோட பாசமலர் இட்லி மாமி அனுப்பி வச்ச மலர்கொத்து ரொம்ப அழகா இருந்தது. ரிச்மெண்ட் அக்கா அனுப்பி வச்ச லக்ஷம் கட்டி வராஹன் வல்லிம்மா கையால கிடைச்சது. உம்மாச்சி ப்ளாக்ல நிறையா எழுதர்துக்கு வாக்கா ரெண்டு புஸ்தகத்தை தானைதலைவி அக்காவும் அவாத்து மாமாவும் தந்தா. மாங்கல்ய தாரணம் ஆனதுக்கு அப்புறம் ஆசீர்வாதம் பண்ணர்துக்குன்னே நம்ப திவாண்ணா,மதுரையம்பதி அண்ணா, தி ரா ச மாமா எல்லாரும் வந்து இருந்தா. இதுக்கு நடுல ரெண்டு மூனு மாமா மாமிகள் எல்லாம் வந்து கையை பிடிச்சுண்டு ‘கோந்தை! உன்னோட ப்ளாக் படிப்போம், இது வரைக்கும் கமண்ட் போட்டதில்லை’னு சொல்லிண்டு ஓசி பேப்பர் வாசிக்கரவா வந்து ஆசிர்வாதம் பண்ணினா. “என்ன இருந்தாலும் உங்க அண்ணா வராம இருந்து இருக்க கூடாது! முக்கியமான கட்டத்தை விட்டு குடுப்பாளோ!”னு ஆளாளுக்கு ஆனை பூனை அக்ஷதை!னு ஒரு அபிப்ராயம் சொல்லிண்டு இருந்தா. எனக்கு எங்க அண்ணாவை தெரியும். அவன் எங்க இருந்தாலும் நான் செளக்கியமா இருக்கனும்னு தான் பிரார்த்தனை பண்ணிப்பான். ‘அவன் பக்கத்துல இருந்து நடத்தர்துக்கு எனக்கு பாக்யம் இல்லை’னு எனக்கு நானே சமாதானம் சொல்லிண்டேன். எல்லாம் முடிஞ்சு அடுத்த நாளே கல்லிடை போயாச்சு. ஊர் மனுஷாளுக்காக அங்க ஒரு ரிஷப்ஷன். ரிஷப்ஷனுக்கு வந்தவா எல்லாரும் போண்டாவையும் சேமியா பாத்தையும் திண்ணுட்டு போனா பரவால்லை, அவாத்து வைக்கோல்போர்ல கொளுத்தினதை எல்லாம் என்னோட தங்கமணிட்ட சொல்லி மானத்தை வாங்கிட்டா. சொல்லர்து எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில என்னோட கன்னத்தை கிள்ளி ‘எங்காத்து பிள்ளை மாதிரி’னு மாமிகள் ஒரு பிட்டையும் சொருகிட்டு போனா.

திருகார்த்திகை அன்னிக்கி ஒரு தம்பதிகள் இன்டிகா கார்ல வந்து ‘இங்க தக்குடுவோட ஆம் எங்க இருக்கு?’னு கேட்டா. ஆத்துக்குள்ள கூட்டிண்டு போய் ரொம்ப நேரம் பேசிண்டு இருந்தோம். அவாளும் ஓசிபேப்பர் படிக்கரவா சங்கத்தை சேர்ந்தவாளாம். ‘உனக்கு ஒரு கிஃப்டுமே வாங்கிண்டு வரலையே தக்குடு!’னு வருத்தப்பட்டுண்டா. எனக்கென்னவோ அந்த தம்பதிகளை பாத்ததே கிஃப்ட் மாதிரிதான்னு தோனித்து. அதுக்கு அப்புறம் கள்ளழகர் மாதிரி ஆயிடுத்து நம்ப நிலைமை. அவர் ஒரு ஆத்துல தான் இறங்கினார், நான் ஒவ்வொரு ஆத்துலையா இறங்கிண்டு இருந்தேன். ஜே பி நகர் மாமியாத்துல பூரணகும்பம் மட்டும் தான் குடுக்கலை. அப்பிடி ஒரு கவனிப்பு. என்னோட கல்யாண ஆல்பத்தை அவாத்து போட்டோ ப்ரேம்ல போட்டு பாத்துண்டு இருக்கா. அவாத்து மாமா சரியான பொசுக்கல் பாண்டியன். ‘நன்னா இருக்கு!’னு வாய்லேந்து வந்துடவே வந்துடாது. மாமிக்கு நான் ப்ளாக்ல போய் ஏடாகூடமா எதுவும் எழுதிடகூடாதே!னு அந்த கவலை ஒரு பக்கம். ரொம்ப நன்னா கவனிச்சு அனுப்பி வச்சா.

மெட்ராஸ்ல வந்து ஒரு வாரமா சித்தப்பா பெரியப்பா மாமா மாமி ஆத்துல மண்டகப்படி மாதிரி சாப்பிட்டு முடிச்சு, மாமியாரோட ஒன்னு விட்ட ஓர்படி பண்ணின பருப்பு பொடியையும் வாங்கிண்டு தப்பிச்சோம் பொழச்சோம்!னு தோஹாவுக்கு ஓடியே வந்தாச்சு. "கவலைபடாதீங்கோ! உங்களை கண்கலங்காம வச்சு காப்பாத்தரேன்!"னு என்னோட தங்கமணி சொல்லி இருக்கா:) மேல்கொண்டு அடி உதை எதுவும் விழாம குலதெய்வம் பெருவேம்புடையார் தான் காப்பாத்தனும்.