Wednesday, November 23, 2011

டும் டும் டும்

ஆசிரியர் முக்கிய பணியாக வெளியூர் செல்வதால் ஒரு மாதம் புதிய சரக்கு எதுவும் கடையில் கிட்டாது! வாசகர்கள் பொறுத்தருள வேண்டுகிறோம்!

i) 'வைதேகி மாமி! மாடிலேந்து வரும் போது பித்தளை குத்துப்போனியை கொண்டு வருவேளா?

அது ரொம்ப கனமா இருக்குமேடி பானு!

சரி விடுங்கோ! என்னோட புள்ளையை மட்டும் கொஞ்சம் தூக்கிண்டு வந்துடரேளா?

இல்லையில்லை நான் குத்துப்போனியவே கொண்டு வரேன், அப்பிடி ஒன்னும் அது கனம்னு சொல்ல முடியாது!


ii) 'ஏன்னா, எத்தனை தடவை பாத்ரூமுக்கு போயிட்டு போயிட்டு வருவேள்! காணாதுகண்ட மாதிரி உருளைகிழங்கு போண்டாவை திங்காதீங்கோ!னு சொன்னா காதுல வாங்கினாதானே!'


iii) 'கெளசல்யா மாமி! செளக்கியமா இருக்கேளா? பாத்து எவ்ளோ நாள் ஆச்சு?
மாறவேயில்லை 'சிக்'குனு அப்பிடியே இருக்கேளே? மாமி பாரு கோந்தை! டுடுடு டூ!

விஜயாவோட நாட்டுப்பொண் இல்லையோ நீ! கோந்தை எதுக்கு சிணுங்கிண்டு இருக்கான்? நீ எதுக்கு நைட்டியோட லாந்திண்டு இருக்கை?

மாமி! மாமி! ஒரு 5 நிமிஷம் குழந்தையை பிடிங்கோ! புடவை கட்டிண்டு வந்துடறேன்!

ஹுக்க்கும்! இதுக்குதான் மாமி! சாமி!னு சொல்லிண்டு வந்தாளா!


iv) 'வசந்தா மாமி, ஜானுவாசத்துலையே உங்க புடவைதான் பளிச்னு இருக்கு. காட்டன் சில்க்கா? விஜியோட கல்யாணத்து போது கட்டிண்ட புடவையும் காட்டன் சில்க் இல்லையோ? ஆனா அது அவ்ளோ சோபிதம் இல்லையே?

இருக்காதா பின்ன? இது எங்க அண்ணா புள்ளை கார்திக்கோட கல்யாணத்துக்கு கடைக்கே கூட்டிண்டு போய் மாட்சிங் ப்ளவுஸ் சகிதமா எங்கண்ணா வாங்கி தந்த புடவை. அது எங்க நாத்தனாரோட பொண் நிகிலா கல்யாணத்துக்கு ஆடிகழிவுல எடுத்த புடவை.

ஓஓ! உங்க நாத்தனாரே பின்னாடி நிக்கராளே!'

v) 'அருண் ஆய் போயாச்சாடா?

இன்னும் வரமாட்டேங்கர்துபா

எப்போதும் போகரமாதிரி போடா கண்ணா! லேட்டா போனா டிபன்ல அசோகா அல்வா காலியாயிடும்டா கோந்தை!

எனக்கு நம்பாத்துல போனாதான்பா வரும்!

உங்கம்மாவை மாதிரியே ஏட்டிக்கு போட்டி பேசாதே !இதுக்குனு பாம்பே போயாடா ஆய் போயிட்டு வரமுடியும்! போனவரைக்கும் போதும் வாடா கோந்தை!
அம்மா கேட்டா 'நன்னா போனேன்!' னு சொல்லனும் கேட்டையா!'

vi) 'கே கே நகர் அத்திம்பேர் எதுக்கு சுத்தி சுத்தி வந்துண்டு இருக்கார்?

ஜானுவாசம் முடிஞ்சாச்சு, சாப்பாடும் கடைசிபந்தி நடக்கர்து, மாடில தீர்த்தவாரி எதாவது இருந்தா ஓசில ப்ளூலேபிலை கவுத்தலாமேனு நெப்போலியன் மாதிரி படையெடுத்துண்டு இருக்கார்'.

vii) 'சாரதா! உன்னால ஹாண்ட் பேக்கை வச்சுக்கமுடியும்னா மட்டும் கொண்டுவந்தா போதும், சும்மா மினுக்கர்துக்கெல்லாம் கொண்டு வராதே!

இப்ப என்னாச்சுனு ஊரை கூட்டிண்டு இருக்கேள்!

'இந்தோ வந்துட்டேன்!'னு சொல்லிட்டு குடுத்துட்டு போய் 3 மணி நேரம் ஆகர்து. 'ஹாண்ட் பேக் மாமியை விட உங்களுக்கு தான் அம்சமா இருக்கு அங்கிள்!'னு எங்கக்கா புள்ளை நக்கல் அடிச்சுண்டு இருக்கான்!'

viii) 'ஏ வித்யா! கொஞ்சம் பக்கத்துல வாயேன்! நம்ப லோகா மாமி லோக்கல்லதானே இருக்கா?

ஆமாம் மன்னி, சிட்லபாக்கத்துல தான் இருக்கா, 'லோக்கல் லோகா' தானே அவளோட பட்டப்பேர். ஏது? என்ன விஷயம்?

ஒன்னுமில்லை, நாம மதுரை வரைக்கும் போகர்தால கட்டுசாதக்கூடை வாங்கிக்கரோம், அவளும் அவளோட புள்ளை உசரத்துக்கு ஒரு கேரியல்ல ஊறுகாய் முதற்கொண்டு விடாம வாங்கிக்கராளே அதான் கேட்டேன்!

அவாத்துக்காரருக்கும் ஒரு நாள் ரெஸ்ட் வேண்டாமா பாவம்!'


இந்த மாதிரி சம்பாஷனைகள் நடக்கும் ஒரு இடத்துக்கு போகபோறேன். யெஸ்! அதே தான்! டிசம்பர் ஒன்னாம் தேதி அடியேனுக்கு டும் டும் டும்! தக்குடுவோட ப்ளாக்குக்கு வந்துபோகும் நிறையா ஆட்கள்ல ஒரு சிலபேரை தான் நேர்ல பாத்துபேசியிருக்கேன். இருந்தாலும் இங்க வரவா எல்லாருமே 'ஏ தக்குடு! ஓய் தக்குடு! எலேய் தக்குடு!தக்குடு பாஸ்!'னு ரொம்ப உரிமையாவும் அன்போடையும் பாசமழை பொழியும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் இந்த நல்ல விஷயத்தை சொல்லர்துல ரொம்ப மகிழ்ச்சி. உங்க எல்லாரோட அன்பும் ஆசிர்வாதமும் ஆதரவும் எப்போதும் தக்குடுவுக்கு வேணும். நக்கலும் நையாண்டியும் பண்ணிண்டு விளையாட்டுப் பிள்ளையா காலத்தை கழிச்சாச்சு. இப்ப திடீர்னு கல்யாணம்,குடும்பம்னு சொன்னா கொஞ்சம் பயமாதான் இருக்கு. இருந்தாலும் என்ன பண்ணமுடியும் அடுக்களையில் அடிவாங்கினாலும் அழாமல் சிரித்த முகமாய் வலம் வரும் அப்பாவி ரங்கமணிகள் சங்கத்துல ஒரு நாள் உறுப்பினர் ஆகியே தீரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

இத்தனை நாளா விண்டோ ஏர்கண்டிஷன் மாதிரி ஆத்துக்குள்ளையும் வெளிலயும் சூனா பானா வடிவேல் மாதிரி சவுண்ட் குடுத்துண்டு வளையவந்தாச்சு, இனிமே ‘ஸ்பிலிட்’ ஏசி மாதிரி வெளில மட்டும் சவுண்ட் குடுத்துண்டு ஆத்துக்குள்ள சத்தமே இல்லாம நல்லபிள்ளையா பேர் வாங்கணும். இதுவரைக்கும்




இப்படி இருந்த தக்குடு


டிசம்பருக்கு அப்புறம்





.......இப்படி ஆயிடுவான்!னு நிறையா பேர் மனப்பால்/மிளகுப்பால்/மசாலாப்பால் குடிச்சுண்டு இருக்கர்து நன்னாவே தெரியும். நானும் 'என்ன ஆகப்போகர்தோ?'னு ஆச்சர்யம் கலந்த திகிலோடதான் அடியெடுத்து வச்சுண்டு இருக்கேன். இனிமே வரக்கூடிய காலங்களில் 'தங்கமணி வச்ச சாம்பார்(?!), சாப்பாடும் பின்விளைவுகளும், தங்கமணி ஷாப்பிங்'னு வரிசையா போஸ்ட் போட முடியுமானு முயற்சி பண்ணிபாக்கலாம்.

குறிப்பு – "தேர்தல்ல போட்டியிட டிக்கெட் கிடைக்காதவாளுக்கு எல்லாம் நெஞ்சுல இடம் இருக்கு உடன்பிறப்பே!"னு சொல்லி டபாய்ச்சமாதிரி டபாய்க்காம தக்குடு போஸ்ட்ல கமண்ட் போட்டு படிக்கரவா,கமுக்கமா படிக்கரவா எல்லாரும் ஒழுங்கா மொய் பணத்தை ஏமாத்தாம அனுப்பி வைங்கோ! டாலர்,பவுண்ட்,ரியால்,யென்,தினார்,திர்ஹாம், நைஜீரியா கரன்சி எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும். பாஸ்டன் நாட்டாமையோட வகை,கனடா அக்கா (ஸ்) வகைو ரிச்மெண்ட் அம்மாவோட வகை, நைஜீரியா மாமி வகை,தோஹா மாமா வகை,சிங்கப்பூர் அக்கா வகை,சியாட்டில் சிங்காரியோட வகை,லண்டன் அண்ணாச்சி வகைனு தத்தனியா சபைல வச்சு ஓதியிட்டு குடுக்க ஏற்பாடு பண்ணிடலாம்.

Thursday, November 17, 2011

திக் திக் பிக்னிக்..........

“போன மாசம் குலுமணாலிக்கு போனோம்! முந்தின வருஷம் ஜம்முல போய் ஜம் ஜம்னு போட்ல போனோம்! மைசூர்ல பாத்த அந்த சாமுண்டி கோவில் இன்னும் கண்ணுலையே நிக்கர்து தெரியுமோ!”னு கல்லிடைக்கு கோடை விடுமுறைல வரும் சில ‘பீத்தல்’ மாமிகளோட சம்பாஷனைலேந்து பிக்னிக்குனா எதாவது புது இடத்துக்கு போகர்து போலருக்குனு நாங்க யூகம் பண்ணிப்போம். எங்களை பொருத்தவரைக்கும் மதுரை தான் தூரதேச பிரயாணம். அம்பாசமுத்திரத்துல இருக்கும் எங்க அத்தையாத்துல அடிக்கடி கல்யாணம் வரும். அதுதான் எங்களுக்கு பெரிய்ய்ய பிக்னிக்கு. கல்யாணத்துக்கு பாம்பே டில்லிலேந்து வந்தவா எப்படியும் வேன் வச்சுண்டு அகஸ்தியர் அருவிக்கு குளிக்க போவா. போகும் வழில பொழுதுபோகனுமேனு ‘லொடலொட’னு பேசும் என்னையும் வேன்ல கூட்டிண்டு போவா. சொந்தக்காரா கூட போயிட்டு நன்னா அருவில குளிச்சுட்டு பாட்டும் கூத்துமா இருந்துட்டு வந்தா அந்த குஷிலையே ஒரு வருஷம் தாக்குபிடிக்கலாம். மறுபடியும் எதாவது ஒரு கல்யாணம் அடுத்த வருஷமே வந்துடும். பெண்களூருக்கு வந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் வெளில எல்லாம் சுத்தி பாக்கர சான்ஸ் கிட்டிண்டு இருந்தது.

தோஹாவுக்கு வந்ததுக்கு அப்புறம் சுத்தமா ஒரு இடமும் போகர்து இல்லை. அடுக்களையே கோவில்! அடுப்பே சாமி!னு காலத்தை ஓட்டிண்டு இருந்தேன். போன வருஷம் கல்லிடைக்கு போயிருந்த போது வடக்குமாடத்தெருல ஒரு அக்கா "எங்காத்துக்காரர் தோஹால தான் இருக்கார், அவர் கிட்ட இந்த லெட்டரை மட்டும் குடுப்பேளா?னு ரொம்ப பவ்யமா கேட்டா. பொதுவா எங்க ஊர்லேந்து தோஹாவுக்கு என்னென்ன சாமான் குடுத்து விடுவானு யூகமே பண்ணமுடியாது. டிடாரங்காய்/ நார்தங்காய் ஊறுகாய்,வேப்பிலைகட்டி,பொருவிளங்காய் உருண்டை, ஆறு மாச மங்கையர்மலர்,சாம்பார்பொடி,ரசப்பொடி,பருப்பு பொடி,கோலப்பொடி,பின்னல்ல மாட்டும் குஞ்சலம்,வத்தல் வடாம்,அப்பளம்,’கொஞ்சம் போல’னு சொல்லிட்டு ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டில் நிறைய மாவடுனு ஒரு பெரிய பொட்டலத்தை நம்ப கைல குடுத்து ஏ பி டி பார்சல் சர்விஸ் அனுமார் மாதிரி நம்பளை ஆக்கிடுவா. “நம்பாத்து பிள்ளைனா தக்குடு! மாட்டேன்னா சொல்லமாட்டான்!”னு சக்கரகட்டியா தடுப்புஅணையெல்லாம் முதல்லயே போட்டு வச்சுடுவா. எல்லாத்துக்கும் முன்னாடி அவாத்துக்கு நம்மை கூப்பிட்டு ஒரு டம்பளர் காப்பியும் 2 தேங்குழலும் திங்கர்துக்கு வைப்பா. பக்கி மாதிரி அதை மட்டும் ‘லபக்!’னு சாப்பிட்டு தொலைச்சோம்னா அதுக்கு அப்புறம் “செஞ்சோற்று கடன் தீர்க்க, மாமியோட ஆத்துக்கு வந்து, காப்பியை குடித்தாயடா....!”னு கர்ணன் படபாட்டு தான்.

இதெல்லாம் இல்லாம ஒரே ஒரு லெட்டர்னு சொன்னவுடனே ஆச்சர்யத்தோட அதை வாங்கிண்டு வந்து அவாத்து மாமாட்ட தந்தேன். அதுல என்ன எழுதியிருந்ததோ அது பகவானுக்குதான் வெளிச்சம், ஆனா அந்த மனுஷன் எதோ காதல் கடிதம் வாசிக்கரமாதிரியே முகத்தை வச்சுண்டு பயபக்தியா வாசிச்சார். வாசிச்சுட்டு நேரா ஒரு கும்பல்ல கொண்டு வந்து சேர்த்துவிட்டார். அன்னிலேந்து நமக்கு பிடிச்சது ஏழரை. இன்னிக்கு வரைக்கும் என்னோட சாயங்கால & வீகெண்ட் ப்ரோகராம் எல்லாத்தையும் இந்த குரூப்தான் முடிவு பண்ணர்து. சில சமயம் கொஞ்சம் உபகாரமாவும் இருக்கா. நவம்பர் மாச தொடக்கத்துல தொடர்ந்து 5 நாள் லீவு இருக்குனு சொன்ன உடனே இந்த குரூப்ல இருக்கரவா எல்லாம் எங்கையாவது பிக்னிக்கு போலாம்னு திட்டம் போட ஆரம்பிச்சுட்டா. எத்தனை பேர் கிளம்பினாலும் கருங்குளம் மாமா & மாமி அவாத்து வண்டில எப்போதும் எனக்கு ஒரு சீட்டு போட்டு வச்சுடுவா. மாமா நம்ப ஊர் ‘மினிபஸ்’ சைஸுக்கு ‘ஆர்மதா’னு ஒரு வண்டியை கொண்டுவந்துட்டார். “ஆர்மதாவோ நர்மதாவோ ஒழுங்கா போய் சேர்ந்தா சரி!”னு சொல்லிண்டே எல்லாரும் ஏறி போனோம்.

மூனு கார்ல, எங்க வண்டிக்கு க.குளம் மாமா,இரண்டாவது வண்டிக்கு தஞ்சாவூர் மாமா & மூனாவது வண்டிக்கு வீ கே புரம் மாமா சாரதிகள். நான் கடைசி சீட்ல குழந்தேளுக்கு நடுல தண்ணி பாட்டிலோட பாட்டிலா உக்காசுண்டு வந்தேன். முதல் நாள் பீச்சுக்கு ஒழுங்கா போயிட்டு ஒழுங்கா வந்துட்டோம். இரண்டாவது நாள் மெட்ராஸ் மாமா அவாத்து மாமியோட தனியா கார்ல வந்தார். வீ கே புரம் மாமா வண்டிலதான் ஏலக்காய் மணக்க மணக்க டீ இருந்தது, அதனால நானு அவர் வண்டில ஏறிட்டேன். புறப்பட்டு கொஞ்ச நேரம் எல்லாரும் ஒழுங்கா போனா, திடீர்னு பாத்தா தனியா வந்த மெட்ராஸ் மாமா வண்டியை காணும். அவர் வண்டிலதான் பேல் பூரிக்கு உண்டான சாமான் எல்லாம் இருக்கு அதனால “ஓஒ பேல்பூரியை காணுமே!”னு எல்லாருமே ரொம்ப கவலைபட்டா. எங்க வண்டியை ஓட்டிண்டு இருந்த வீ கே புரம் மாமா திடீர்னு ஒரு வண்டியை ஃபாலோ பண்ணிண்டு வேற ரூட்ல போக ஆரம்பிச்சுட்டார். கடைசில பாத்தா அந்த வண்டில ஒரு லெபனான் பொம்ணாட்டி இருக்கா. லெபனான் பொம்ணாடிகள் & புருஷா ரெண்டு பேருமே நம்ப ஊர் எம் ஜி ஆர் ரை விட மூனு பங்கு ஜாஸ்தி நிறமாவும் லக்ஷணமாவும் இருப்பா. பின் சீட்ல அவாத்து மாமி இருக்கர ஞாபகமே இல்லாம பாவம் வெள்ளந்தியா ஃபாலோ பண்ணிட்டார்.

அப்புறம் ஒரு மாதிரி எல்லாரும் அந்த பிரெஞ்சு பீச்சுக்கு போய் சேர்ந்தோம். கிளம்பர இடத்துலேந்தே கண்ணாடி போட்ட மெட்ராஸ் மாமா “அது என்ன ஓய் பிரெஞ்சு பீச்சு?”னு கேட்டுண்டே இருந்தார். அங்க போய் பாத்தா ஒரே வெள்ளக்காரா கூட்டம். எல்லாரும் காத்தாட குளிச்சுண்டு இருந்தா. “இப்பதான் ஓய்ய்ய் பேர் காரணம் தெரியர்து!”னு அவரோட தங்கமணி முறைக்கர்தை கவனிக்காம எதோ E = 〖MC〗^2 பார்முலா புரிஞ்சமாதிரி பரவசமா இருந்தார். யூ எஸ் லேந்து ஒரு அக்கா தோஹாவுக்கு வந்திருந்தா. அவாளும் முதல்லேந்தே ஆட்டைல உண்டு. அந்த அக்கா எடுத்துண்ட போட்டோ எண்ணிக்கைல ஒரு கல்யாண ஆல்பமே போட்டு இருக்கலாம். க.குளம் மாமியோட காமிரா பயங்கர கிளாரிட்டி. ‘சலங்கை ஒலி’ கமலுக்கு கிடைச்ச ஒரு பொடியன் மாதிரி அந்த அக்காவுக்கு தக்குடுதான் போட்டோகிராஃபர். யூ எஸ் அக்கா கடலுக்கு நடுல போய் நின்னுண்டு “நன்னா முகம் தெரியமாதிரி எடு தக்குடு!”னு சொன்னா. நல்லவேளை நான் என்னோட காமிராவை கொண்டு போகலை. அதுல Zoom in பண்ணனும்னா பத்தடி முன்னாடி போகனும்,Zoom out னா பத்தடி பின்னாடி போகனும் ( “நூத்திபத்து ரூபாய்க்கு சகாயவிலைல காமிரா வாங்கினா அப்பிடிதான் இருக்கும்”னு எங்க அண்ணா நக்கல் அடிப்பான். அவனோட காமிரால 20 அடி பின்னாடி போய் எடுக்கனும்ங்கர்து தனி விஷயம்).


ஆடி பெருக்குக்கு கல்லிடைல ஆத்தங்கரைக்கு போய் தூக்குல கொண்டு போன புளியோதரை & இன்னபிற அயிட்டங்களை எல்லாம் காலி பண்ணிட்டு வரமாதிரி பீச்சுல உக்காசுண்டு எல்லா சோத்துமூட்டையையும் காலி பண்ணினோம். கடலைமாவை வச்சு வீகே புரம் மாமி ‘டோக்லா’னு ஒரு வஸ்து பண்ணி கொண்டுவந்து எல்லாருக்கும் குடுத்து டெஸ்ட் பண்ணிண்டு இருந்தா. அதோட செய்முறையை மெட்ராஸ் மாமி கேட்டுண்டு இருந்தா. ஆனா அவாத்து மாமாதான் ரொம்ப நுட்பமா ரெண்டு சந்தேகம் எல்லாம் கேட்டார் (இருக்காதா பின்ன, பண்ணறவாளுக்குதானே சந்தேகம் வரும்). மாமியும் உடனே தன் பங்குக்கு “கடலை மாவுக்கு பதிலா மைதா மாவு போட்டுக்கலாமா?னு டவுட் கேட்டா. அனேகமா இந்த வாரம் அவாத்துக்கு போனா ஒரு பாத்திரம் மைதாமா பசை கிட்டும். எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச்சு இன்னிக்கோட மங்களம் பாடுவா!னு பாத்தா “நாளைக்கு காத்தால எல்லாரும் அரைவயிறு மட்டும் சாப்பிட்டுட்டு 12 மணிக்கு ரெடியா இருக்கோ!”னு வீ கே புரம் மாமி குண்டை தூக்கி போட்டா. நானும் நாளைக்கு எதோ ஜெர்மன் பீச்சு போலருக்கு, ‘ஹைய்ய்யா ஜாலி!’னு நினைச்சுண்டு இருந்தேன். கடைசில பாத்தா பாலைவன சவாரிக்கு பொட்டல்புத்தூர் கோவில் யானைக்கு 4 சக்கரம் மாட்டின மாதிரி பொதிகாசலமா ஒரு கார் வந்து நின்னுண்டு இருக்கு. வீ கே புரம் மாமி & மாமா, தஞ்சாவூர் மாமா & மாமி பின்னாடி சீட்ல சாமான் மூட்டை மாதிரி பத்ரமா உக்காசுண்டு இருந்தா. டிரைவருக்கு பக்கத்து சீட்ல அடியேன் நெட்டுவாங்கம். சிட்டியை தாண்டர வரைக்கும் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு!’னு வண்டியை ஒழுங்கா ஓட்டின அந்த டிரைவர் பிரகஸ்பதி திடீர்னு 140 கிலோமீட்டர் வேகத்துல வண்டியை ஓட்ட ஆரம்பிச்சுட்டார்.



பாலைவன சவாரி!!

மத்த ரெண்டு வண்டில பலிகிடாவா முதல் சீட்டுல கருங்குளம் மாமாவும், மெட்ராஸ் மாமாவும் உக்காசுண்டு இருந்தா. 30 - 40 அடி உயரமான மணல் மேடுலேந்து செங்குத்தா வண்டியை ஓட்டிண்டு வந்தா. க.குளம் மாமா பெருமாள் கோவில் துவஜஸ்தம்பத்துல பாதி ஒசரம் இருக்கர்தால அவருக்கு இதெல்லாம் சாதாரணமா இருந்தது. நானும் மெட்ராஸ் மாமாவும் தான் ‘அம்மா’வோட கலெக்டர் மீட்டிங்க்ல ஓ. பன்னீர்செல்வம் மாதிரி ‘திக் திக்’னு நெஞ்சு படபடக்க முழிச்சுண்டு இருந்தோம். ஒரு மாதிரியா கடைசில கடலுக்கு பக்கத்துல போய் எங்கையோ எல்லாரையும் இறக்கிவிட்டா. தப்பிச்சோம் பொழச்சோம்!னு ஓடி போய் கொஞ்ச நேரம் மண்ணுல உக்காசுண்டு ஆசுவாசபடுத்திண்டோம். அதுக்கப்புறம் மாமாக்கள் எல்லாம் வட்டசட்டமா உக்காச்சுண்டு, அமெரிக்க பொருளாதாரம்,மெட்ராஸ்ல சதுர அடி விலை நிலவரம்,ஐஸ்குட்டிக்கு என்ன குழந்தை பிறக்கும்,கனிமொழி,ராஜா,ஜெயலலிதா,அழகிரி மாதிரியான உலக விவகாரங்களையும். மாமிகள் எல்லாம், ‘தங்கம் விலை கூடிண்டே போகர்து பாத்தியோ!’ ‘உங்காத்துல வாஷிங்மெஷின் யாரு போடுவா?’ ‘ஹாவ் யூ சீன் தட் ஏழாம் அறிவு மூவி?’ ‘சுடிதார் மெட்டீரியல் மெட்ராஸ்ல எங்க நன்னா இருக்கும்?’ ‘எங்காத்து மாமா டால் ப்ரை பிரமாதமா பண்ணுவார்.’ மாதிரியான சம்பாஷனைகள்ல பிஸியா இருந்தா.

ராத்ரி அங்க சாப்பாடு கிடைக்கர்துக்குள்ள ப்ராணன் போயிடுத்து. தஞ்சாவூர் மாமா அவாத்து மாமியோட ஹேண்ட் பாங்கை ஸ்டைலா போட்டுண்டு குறுக்கையும் நெடுக்கையுமா போயிண்டு இருந்தார். மத்த மாமாக்கள் எல்லாம் அவரை கூப்பிட்டு ஜாரிச்சதுல அவாத்து டீலிங் வெளிய வந்தது. அவரோட மூனு வயசு பிள்ளை மாமியை மாதிரியே பாக்கர்துக்கு(மட்டும்) பயங்கர சாதுவான பிள்ளை, ஆனா சட்டை/ட்ராயர்/சாக்ஸ்/செருப்பு போட்டாலும் கத்துவான் அவுத்தாலும் கத்துவான். அதனால ஒருத்தர் பையனை வெச்சுண்டா இன்னொருத்தர் ஹேண்ட் பாக்கை வச்சுக்கனும். உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சு கூடன்குளம் மேட்டர்ல அம்மா 'பல்டி' அடிச்ச மாதிரி கொஞ்ச நேரத்துலயே அவரோட ஒரு கைல பையனையும் இன்னொரு கைல ஹேண்ட்பாக்கையும் மாட்டிவிட்டுட்டு மாமி தோழிகளோட உலாவ போயிட்டா.

ராத்ரி 9 மணியோட திருப்பி கார்ல ஏறி சிட்டிக்கு போயிண்டு இருக்கும் போது அந்த டிரைவர் கிட்ட என்னோட ‘பட்லர்’ அரபில பேச ஆரம்பிச்ச உடனே அவரும் ரொம்ப குஷியாகி அவரோட ‘பட்லர்’ இங்கிலிபீஸ்ல பேய் கதை எல்லாம் சொன்னார். “போனவாரம் பாதிராத்ரி திரும்பி போகும் போது பாலைவனத்துக்கு நடுல வச்சு வெள்ளைகலர் டிரெஸ் போட்ட ஒரு பொம்ணாட்டி வண்டியை நிப்பாட்டி லிப்ஃட் கேட்டா?”னு ராமநாராயணன் மாதிரி அடிச்சுவிட்டார். எங்க வண்டில இருந்த ரெண்டு மாமிகளும் பயந்து நடுங்கிண்டு “பேய்/பிசாசெல்லாம் வருமா? உங்களுக்கு பயம் இல்லையா?”னு அவாளோட ரங்கமணிட்ட கேட்டா. “சமத்து! பேய் பிசாசெல்லாம் வெறும் பொய்! நீ இருக்கும் போது இன்னொரு பேய் இங்க வரமுடியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி பேய்க்கு கொஞ்சம் பயந்தேன், கல்யாணத்துக்கு அப்புறம் பேய்/பிசாசெல்லாம் பழகி போச்சு”னு வீ கே புரம் மாமாவும் தஞ்சாவூர் மாமாவும் flow-ல கோல் போட்டுண்டு இருக்கும் போதே ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தோம்.

Thursday, November 3, 2011

சாந்தி மிஸ்

“பூரா துனியாமே சிர்ஃப் ஏக் கஹானிஹை!”னு மத்யமமான குரல்ல சாந்தி மிஸ் வாசிக்க ஆரம்பிச்சாலே எனக்கு கை கால் எல்லாம் உதறல் எடுக்கும். அவாளோட நவாப்பழ கண்ணை உருட்டி உருட்டி முழிச்சுண்டு "இது முதல் கா-வா இல்லைனா இரண்டாவது கா-வா?" கேட்கும் போது, “நாலு ‘கா’ நாலு ‘தா’ எல்லாம் எந்த பிரகஸ்பதி கண்டுபிடுச்சான்!”னு மனசுக்குள்ள திட்டிண்டே அழர்துக்கு தயார் ஆயிடுவேன். சாந்தி மிஸ் என்னோட இரண்டாம் கிளாஸ் ஹிந்தி மிஸ். ஹிந்தியோட அருமை பெருமை எல்லாம் தெரியாத அந்த சின்ன வயசுல சாந்தா மிஸ்ஸை பாத்தாலே கோவம் கோவமா வரும். என்னை மாதிரியே ஹிந்தியை கச்சுவிஷமா பாவிச்ச ரகுதாத்தாக்கள் எல்லாருக்கும் ஹிந்தி பீரியடுக்கு முன்னாடி திடீர் திடீர்னு வயத்துவலி வரும். கொஞ்ச நாளைக்குதான் அந்த நடிப்பு செல்லுபடியாச்சு அதுக்கு அப்புறம் மாத்தி யோசிக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம்.

சாந்தி மிஸ் பாக்கர்துக்கு அகஸ்தியராட்டம் இருந்தாலும் கைல இருக்கும் விரல் எல்லாம் உடும்பு. நம்ப தொடைல வச்சு நிமிட்ட ஆரம்பிச்சானா ‘ஆ’-ல ஆரம்பிச்சு சிலுக்கு மாதிரி ‘ஹாஆஆஆ!’ வரைக்கும் கத்தி அழுதாலும் விடமாட்டா. என்னோட அண்ணா போட்டுண்டு குடுக்கும் பழைய யூனிபார்ம் ட்ராயர் தான் நான் போட்டுப்பேன். 5 வருஷ பழைய ட்ராயர்ங்கர்தால அது 90-ல வந்த படங்கள்ல கிளைமாக்ஸ்ல ஹீரோவோட அம்மாவையும், ஆத்துக்காரியையும் நடு ஹால்ல கட்டி வச்சுட்டு, வில்லன் ப்ளூ லேபில் பாட்டில்ல விட்டு வச்ச நன்னாரி சர்பத்தை குடிச்சுண்டு இருக்கும் போது ‘ஜிகுஜிகு’ லைட்டுக்கு நடுல ஜிங்க் ஜிங்குனு ஆடும் ‘டிஸ்கோ’ சாந்தியோட டைட் டிராயரை இரவல் வாங்கிண்டு வந்து போட்டுண்ட மாதிரி இருக்கும். அர்ஜுனனோட கண்ணுக்கு எப்பிடி கிளியோட கண்ணு மட்டும் தெரியுமோ அதே மாதிரி சாந்தி மிஸ்ஸுக்கும் என்னோட தொடைதான் எப்போதும் தெரியும்.



சந்தோஷ காலங்கள்!! :))

எத்தனை நாளைக்கு தான் வலியை தாங்கமுடியும். நாங்க படிச்ச அந்த நர்சரி ஸ்கூலுக்கு ஒரு பாரம்பரியமே உண்டு. காலேஜ் முடிச்சுட்டு “குரு திசை வந்தவிட்டு வரன் பாக்கலாம் ஓய்ய்!”னு கோட்டை தெரு ஜோசியர் சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு 'பாங்க்' மாப்பிள்ளை வரவரைக்கும் கல்யாணத்துக்கு வரன் பாக்கர்தை நிப்பாடி வச்சுருக்கும் அக்ரஹார அக்காக்கள் தான் பெரும்பாலும் அங்க டீச்சரா இருப்பா. சம்பளம்னு ஒன்னும் பெரிசா வந்துடாது. தேங்காய்மூடிக்கு பதிலா 200 ரூபாய் குடுத்தா பெரிய விஷயம். ஆனா நல்ல மனசோட கரசேவை பண்ணர மாதிரி இந்த ஸ்கூல்ல ஏ பி சி டி சொல்லி குடுத்த எல்லா டீச்சராக்காவுக்கும் ஒழுங்கா சந்தியாவந்தனம் பண்ணி சனிக்கிழமை சுந்தரகாண்டம் வாசிக்கர நல்ல குணமான ‘சுந்தரபாண்டியபுரம் ஸ்டேட் பாங்க்’ மாப்பிள்ளையோ இல்லைனா ‘கருங்குளம் ஆடிட்டர்’ மாப்பிள்ளையோ நிச்சயமா வந்து கல்யாணம் பண்ணிண்டு போய் ராணி மாதிரி வச்சு காப்பாத்துவா. மத்த மிஸ் மாதிரி சாந்தி மிஸ் கல்யாணம் ஆகி போயிடுவானு காத்துண்டு இருக்கர்துலையும் பிரயோஜனம் இல்லை. ஏன்னா சாந்தி மிஸ்ஸாத்துல எல்லாரும் பீஷ்மருக்கு தூரத்து சொந்தக்காரா. வேற வழியில்லாம பள்ளிக்கூடத்தையே மாத்திட்டேன்.

ஆரம்பத்துலேந்தே எனக்கு வராத விஷயம் எல்லாம் எங்க அண்ணாவுக்கு ரொம்ப நன்னா வரும். வயத்தெரிச்சலை கிளப்பர்துக்குன்னே எதாவது பண்ணுவான். அவன் என்னவோ பெரிய அயோத்தி ராமன் மாதிரியும் நான் அயோக்யராமன் மாதிரியும் வச்சுண்டு,"உங்க அண்ணாவ மாதிரி இருந்தா என்ன?"னு எல்லாரும் கரிச்சுகொட்டுவா. அவன் ஹிந்தில பெரிய்ய்ய அப்பாடேக்கர். தமிழ் நாட்டுக்கு கவர்னரா வரப்போர பஞ்சாப் சிங்குக்கு இவன் தான் பக்கத்துல இருந்து மொழிபெயர்த்து சொல்ல போகர மாதிரி ஹிந்தியை பயங்கரமா படிச்சான். கேட்டா மத்யமா/தோசமானு பரிட்சை பேர் சொல்லி பிலிம் காட்டுவான். நமக்கு ஹிந்திதான் வராதே தவிர தமிழ்ல நல்ல பிடித்தம்/படித்தம் உண்டு. “வாசனை ரோஜா வாடிப் போகலாமா?”வை "வாடி சரோஜா! ஓடி போகலாமா?"னு செயப்பாட்டுவினையா மாத்தி காமிச்சு வினையை விலைகுடுத்து வாங்கின சமயங்கள் ஏராளம்.

படிப்பெல்லாம் முடிச்சு கல்லிடையோட எல்லையை தாண்டி பெண்களூர் வந்ததுக்கு அப்புறம் தான் ரஹதாதாவோட அருமை புரிஞ்சது. இனிமே புரிஞ்சு என்ன பண்ண. எங்க தெரு சினிமா மாமி சொல்ர மாதிரி " நேத்திக்கு சாயங்காலம் கிளம்பி போன நெல்லை எக்ஸ்பிரஸுக்கு இன்னிக்கு டிக்கெட் எடுக்கலையேனு வருத்தப்பட முடியுமோ!"னு எனக்கு நானே சமாதானம் சொல்லிப்பேன். பெண்களூர் ஆபிஸ்ல முக்கால் வாசி பேர் அச்சாஹை! குச்சாஹை!னு தான் பேசிண்டு இருப்பா. அவா எல்லாரையும் ஹை ஹை!னு வாயப்பாத்துண்டு இருப்பேன். அதுவும் குஜாராத் குமரிகள் கொஞ்சி கொஞ்சி ஹிந்தில அகவும்போது தான் எங்க அண்ணாச்சி எதுக்கு ராப்பகலா கண்முழிச்சி ஹிந்தி படிச்சான்னு விளங்கும். பட்லர் ஹிந்தியை வச்சுண்டு ‘டிகே டிகே!’னு சொல்லி ஓட்டிண்டு இருந்தேன்.

சப்பாத்தி பிகர்களும் மாக்கான்களும் என்ன பேசிண்டு இருந்தாலும் கடைசில மங்களம் பாடர்துக்கு மொஹபத்து! மொஹபத்து!னு தான் முடிப்பா. எனக்கு எங்க ஊர் பெருமாள் கோவில்ல நடக்கும் ராபத்து, பகல்பத்து உத்ஸவம் தான் தெரியும். இது என்னவோ புதுசா மொஹபத்து மொஹபத்து!னு பேசிக்கராளே?னு ஆத்மவிசாரம் பண்ணிப்பேன். ஒருவேளை குஜராத்ல இருக்கும் அவா ஊர் பெருமாள் கோவில்ல நடக்கர உத்ஸவமா இருக்குமோ?னு எனக்கு நானே சமாதானம் பண்ணிப்பேன். என்னோட ஆபிஸ் கேஃப்ல கேப் இல்லாம ரொம்ப செளஜன்யமா பக்கத்துல உக்காசுண்டு வரும் ஒரு பம்பாய்காரி ஹிந்தியை மழை மாதிரி பொழிவா. முதல் நாளே அவள்ட , “அம்மாடி கோந்தை! நாங்கெல்லாம் ஹிந்தியை எதிர்த்து ரயில் வராத தண்டவாளமா பாத்து தலையை வச்சு போராட்டம் பண்ணின வீரபரம்பரைல வந்தவா அதனால வெள்ளக்காரன் பாஷைலயே நாம பேசிக்கலாம்”னு சொல்லிட்டேன். புரிஞ்ச மாதிரியே மண்டையை மண்டையை ஆட்டினாளே தவிர விளங்கின மாதிரி தோனலை. ஆரம்பகாலங்கள்ல இங்கிலிபீஸ்ல கிராமர்ல கொஞ்சம் சந்தேகமா இருந்தா அதை கட் பண்ணிட்டு விஷயத்தை மட்டும் தான் சொல்லுவேன்(ஏன்னா வளவளனு பேசர்து நமக்கு பிடிக்காதே). "ஐ டாக்! யூ டாக்! ஒய் மிடில் மிடில் ஹிந்தி டாக்?"னு சொன்னா புரியர்துல என்ன கஷ்டம்னு நேக்கு தெரியலை.

மத்தவா மாதிரி கேலிபண்ணாம நம்ப பம்பாய்காரி நித்யம் ஒரு ஹிந்தி வார்த்தை புதுசா சொல்லிதருவா. அந்த டீலிங் எனக்கு கொஞ்சம் பிடிச்சுருந்தது. இதே மாதிரி சாந்தி மிஸ்ஸும் சொல்லிகுடுத்து இருந்தா நான் எதுக்கு பள்ளிகூடம் மாறபோறேன்? லடுக்கா லடுக்கி!னு தடுக்கி தடுக்கி ஹிந்தி சொல்லிகுடுத்தா. "மேரா ஹாத்து மே தேரா ஹாத்து ஹை! நடுல எவனாவது வந்தா சாத் சாத்னு சாத்து ஹை!!" அப்பிடின்னு கவிதை சொன்னா நம்ப ஆசான் ரசிச்சு கேட்டுப்பாங்க. 5 வருஷம் கம்பவுண்டரா வேலை பாத்தவா டாக்டர் ஆகர மாதிரி அந்த ஹிந்தியை வச்சுண்டு காலஷேபம் பண்ணிண்டு இருக்கேன்.

கழிஞ்ச ஆகஸ்ட்ல எங்க ஊர் பெருமாள் கோவில் கருடன் சன்னதி பக்கத்துல வச்சு சாந்தி மிஸ்ஸை பாத்தேன். “ஜி ப்ரணாம்!”னு அவாளை பாத்து சொன்னவுடனே மிஸ்ஸுக்கு பயங்கர ஆச்சரியம். “கலிகாலம்ங்கர்து சரியாதான் இருக்கு தக்குடு! நீ கூட உருப்படியா ஆயிட்டையே?”னு சொன்னா. அடுத்த க்ஷணமே ‘உங்க அண்ணா செளக்கியமா?’னு ஆர்வமா கேட்டா. ‘ம்ம்! ம்ம்!’னு சொல்லிட்டு நகர்ந்தேன். “அண்ணா செளக்கியமா? ஆட்டுக்குட்டி செளக்கியமா?” மட்டும் நன்னா கேக்க தெரியர்து. என்ன இருந்தாலும் பாம்பே பாம்பே தான்!

குறிப்பு - தீபாவளிக்கு ஏது போஸ்ட் போடலை தக்குடு!னு நிறையா பேர் ஜாரிச்சா. தீபாவளி/பொங்கலை ஒட்டி புது போஸ்ட் எதுவும் போடர்து இல்லை. ஏன்னா, மோட்டுவளையை பாத்து நாம கஷ்டப்பட்டு ரூம் போட்டு யோசிச்சு புது போஸ்ட் போட்டா அங்க வந்து “இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!”னு எல்லாரும் சொல்லிட்டு போவா. அதுக்கு பழைய போஸ்ட் போறாதோல்லியோ!! :))

Thursday, October 6, 2011

மாமி..... சுண்டல்!!!

புது போஸ்ட் உம்மாச்சி ப்ளாக்கில் வெளியிடப்பட்டுள்ளது!

அனைத்து வாசக/வாசகிகளுக்கும் தக்குடுவின் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!




அப்ப்ப்ப்ப்ப்ப்பாடி! இருங்கோ கொஞ்சம் மூச்சு விட்டுக்கறேன். 9 நாளா மூச்சு விடக்கூட நேரமில்லை கேட்டேளா? எல்லாராத்துலையும் நவராத்ரி நன்னா கழிஞ்சுதா? நம்பாத்துலையும் சூப்பரா கழிஞ்சது. தக்குடு உங்காத்துல கொலு வெச்சேளா?னு உடனே கேக்காதீங்கோ. என்னோட ரூம்ல தினமுமே கொலுதான். வச்சது வச்சபடிக்கு ஆடாம அசையாதைக்கி இருந்தா கொலு தானே? :) 'இந்த தீபாவளியை போத்திஸில் கொண்டாடுவோம்'னு மூக்கும் முழியுமா இருக்கர எதாவது ஒரு குஜராத்தி பிகர் டிவி விளம்பரத்துல சொல்லற மாதிரி நாங்க எல்லாம் 'இந்த நவராத்ரியை கருங்குளம் மாமாவாத்துல கொண்டாடுவோம்'னு சொல்லாமையே கொண்டாடிட்டோம். ஒன்பது நாளும் அவாம் அமர்களப்பட்டது. அவாத்து வாசல்ல ‘கருங்குளம் அன்னசத்திரம்’னு ஒரு போர்டு மட்டும் தான் மாட்டலையே தவிர முழூ நேர சத்திரமாவே மாத்திட்டோம்.

பூமாதேவியை நேர்ல பார்கனும்னா அவாத்து மாமியை பாத்தாபோதும். ‘ஜாடிக்கேத்த மூடி’னு சொல்லுவாளே அதை மாதிரி ஜோடி. மாமா ஒரு காரியத்தை மனசுல நினைச்சாலே போதும் சொல்லாமையே அந்த மாமி பண்ண ஆரம்பிச்சுடரா. எல்லாராத்து மாமிகளும் பண்ணற மாதிரி மாமாவோட நைஸ் வேஷ்டியை நைஸா விரிச்சு அழகா கொலு வச்சுருந்தா. ‘ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்’ங்கர கதையா இவாத்துல கொலு வெச்சதுக்கு தக்குடுவுக்கு ஒன்பது நாளும் ராத்திரி சுண்டல் & ஆஹாரம். இவாத்து ஜோசியரும் எதாவது 'அப்பிராணி' பண்டாரத்துக்கு ஆஹாரம் போடச் சொல்லியிருப்பாரோ?னு கொஞ்சம் சம்சியம் தான். நடுல ஒரு வெள்ளிக்கிழமை 10 - 15 பேரை கூப்பிட்டு அவாளுக்கும் மம்மு போட்டதுக்கு அப்புறம் தான் சந்தேகம் தெளிஞ்சது. வந்த மாமிகள்ல இரண்டு மூனு பேர் கல்யாண ஆத்து கட்டுசாதகூடை மாதிரி டப்பால வேற கட்டி எடுத்துண்டு போயிட்டா. ஒரு கரண்டி மம்மு போட்டாலே அவா தாயாருக்கு சமானம்!னு சாஸ்திரத்துல இருக்கு. மாமி கையால ஒன்பது நாள் மம்மு சாப்பிட்டதால வாய் நிறைய அம்மா!னே கூப்பிடலாம். “நவமி அன்னிக்கி பூர்த்தி ஆகர்தே என்ன ஸ்வீட் பண்னனும் தக்குடு?”னு என்கிட்ட மாமி கேட்டதால “மட்டா கொஞ்சமா திரட்டிப்பால் வேணும்னா பண்ணிக்கோங்களேன்!”னு சொல்லிட்டேன். சுலபமா பண்ணலாமேனுதான் சொன்னேனேதவிர, நீங்க எல்லாரும் நினைக்கர மாதிரி எனக்கு பிடிச்ச வஸ்து!னு சிபாரிசு பண்ணலை.



குட்டி அம்பாள் ..:))

பூஜை மாதிரியான புண்ணிய காரியங்கள் பண்னும் போது ‘நான் பண்ணறேன்’ அப்பிடிங்கர எண்ணமே வரகூடாது. அதே மாதிரி பூஜைக்கு நடுல நாம மத்தவாளுக்கு செளபாக்கிய வஸ்துக்கள் தரும் போது ‘நான் குடுக்கறேன்!’ ‘அவா வாங்கிக்கறா!’ அப்பிடிங்கர பா(bha)வம் மனசுல வந்ததுன்னா அந்த ஷணமே நம்மோட பூஜாபலன் பூஜ்ஜியம் ஆயிடும். மேல இருக்கர படத்தை பாத்த உடனே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. தரக்கூடியவாளோட கை கீழ இருக்கு & வாங்கிக்கக் கூடிய அந்த குட்டி அம்பாளோட குஞ்சுக்கைகள் மேல இருக்கு. அதுலையும் இன்னும் விஷேஷமா வாங்கிண்டு ஆசிர்வாதம் பண்ணர மாதிரி நம்மோட கண்ணுக்கு தெரியர்து. இந்த பா(bha)வம் & சிரத்தை தான் பூஜைல ரொம்ப முக்கியம்.

சின்னப்பையனா இருந்த போது எங்க தெருல சுண்டல் வாங்கர்து அவ்ளோ ஜாலியா இருக்கும். சில மாமிகள் கை நிறையா தருவா! சில மாமிகள் கரண்டியை கரண்டியை காட்டுவா!! கரண்டியை காட்டர மாமி ஆத்துக்கு எல்லாம் மாமி இல்லாத நேரமா போய் மாமாட்ட வசூல் பண்ணிடுவோம். மாமூல் வசூல் பண்ண போகும் தாதா மாதிரி கோஷ்டி கோஷ்டியா தான் போவோம். வாங்கின சுண்டலை அங்க வெச்சே சாப்பிடமுடியாது. எல்லாராத்து சுண்டலையும் ஒன்னு சேர்த்து நிறையா இருக்கர மாதிரி ஆக்கிட்டு சாப்பிடர்துல ஒரு அல்ப சந்தோஷம். ஒன்னு ரெண்டு மாமிகள் ஆத்துல ரெண்டாம் தடவை போனா பலன் இருக்கும், ஆனா அப்போ கூட்டம் சேர்க்காம போகனும். ப்ளவுஸ் சங்கரனும் நானும் தான் எப்போதுமே செட்டு. கடலைபருப்பு பொட்டலம் பண்ணி வந்த காலி ப்ளாஸ்டிக் பையை கைல வச்சுப்போம். அவன் ஒரு அனுமார் பைத்தியம்ங்கர்தால அனுமார் படம் போட்ட எதாவது ஒரு கடலைமாவு காலி கவரை தூக்கிண்டு வருவான். அதனால அவனோட கவர்ல போட்ட எல்லா சுண்டலுமெ எப்போதும் ஒரு கடலைமாவு வாடையோடையே இருக்கும். சில சமயம் அம்பானி பிஸினஸ் மாதிரி கலெக்ஷன் ஓஹோ!னு ஆகி கவர் எல்லாம் ரொம்பி வழிய ஆரம்பிச்சுடும். அந்த மாதிரி சமயத்துல என்ன பண்ணர்துன்னு தெரியாம ப்ளவுஸ் சங்கரன் திருதிருனு முழிப்பான். நான் எப்போதுமே முன் ஜாக்ரதையா ரெண்டு பக்கமும் கால்படி சுண்டல் கொள்ர மாதிரி பாக்கெட் உள்ள டவுசர் தான் போட்டுண்டு போவேன். “ராத்திரி எலி வந்து கடிக்கபோகர்துடா!”னு அம்மா சத்தம் போடர்தை காதுல வாங்கிக்காம ஜாஸ்தியா வர சுண்டலை எல்லாம் டவுசர் பாக்கெட்ல போட்டுப்பேன்.

எல்லா மாமியும் போன உடனே சுண்டலை எடுத்து தந்துடமாட்டா. நெத்தி வேர்வை நிலத்துல சிந்த பாடுபட்டாதான் பட்டானி சுண்டலை ருசிபாக்கமுடியும். இந்த மாமிகள் “முதல்ல அகிலா மாமியாத்துல வாங்கிண்டு வா!” ‘அகரம்’ கோமு மாமியாத்துல வாங்கியாச்சா?னு ஆயிரத்தெட்டு பிசுக்காரம் பண்ணிப்பா. உடனே ரோஷம் வந்து அவாத்துல வாங்காம போயிடகூடாது! வியாபாரத்துல பொறுமை அவசியம். எங்க அண்ணாவுக்கு வேற நான் பங்கு குடுக்கனும். ‘கிடைக்ககூடிய எல்லா சுண்டலையும் அண்ணாவுக்கு பங்கு குடுத்தா படிப்பு நன்னா வரும்!’னு சொல்லி என்னை ரொம்ப நாளைக்கு ஏமாத்தி வச்சுருந்தான். நானும் லூசு மாதிரி ரொம்ப வருஷம் குடுத்துண்டு இருந்தேன். இந்த பொண்கொழந்தேளை பாத்தா எங்களோட வானரபடைக்கு பொறாமையா இருக்கும். அவாளை மட்டும் பலகாய்ல உக்காசுக்க சொல்லி தாம்பூலம் குடுத்து சுண்டலை கவர்ல போட்டே குடுப்பா. கொசு அடிக்கர மாதிரி தொடைல ‘டப் டப்’னு அடிச்சுண்டு கட்டத்தொண்டையும் நெட்டத்தொண்டையுமா ‘லம்போதர லகுமிகரா’னு பாடவேற ஆரம்பிச்சிடுவா. ஒரு தடவை ரொம்ப எரிச்சலா போஸ்டாபிஸ் ஹரி ‘போரும்டீ! சீக்கரம் முடிங்கோ!’னு கத்திட்டான்.

அந்த மாமி கோபம் வந்து “நீங்களும் ஒரு பாட்டு பாடினா தான் உங்க எல்லாருக்கும் புட்டு!னு சொல்லிட்டா. அந்த மாமியாத்துல உருப்படியா இருக்கர ஒரே வஸ்து அந்த புட்டு தான், சுண்டல் எதுவும் வாய்ல வெக்கர்துக்கு விளங்காது. எங்களோட புட்டு ஆசைல அநியாயமா இப்படி ஒரு லோடு மண்ணை அள்ளிகொட்டின ஹரிகுட்டியை அடிச்சி துவம்சம் பண்ணலாம்னு எங்களுக்கு தோனித்து. ஆனா திடீர்னு ஹரிகுட்டியே ‘அஹஹம்!’னு தொண்டையை சரி பண்ணிண்டான். எங்க எல்லாருக்கும் பயங்கர ஆச்சர்யம் வால் இல்லாத வானரங்கள் ஒன்னுகூடி அமைச்ச ‘வால்லில்லா வானரப்படை’யான நம்ப ‘வால்’குடிக்கு நடுல ஒரு ‘லால்குடியா’னு ஷாக் ஆயிட்டோம். நின்னுண்டு பாடலாமா? உக்காசுண்டு பாடலாமா?னு மேல மேல ஹரிக்குட்டி பாம் போட்டான். நாட்டைல பாடட்டுமா இல்லைனா நாட்டைகுறிஞ்சில பாடட்டுமா?னு அடுத்த சந்தேகம் அவன்டேந்து. “முதல்ல மூக்கைஉறிஞ்சாம பாடுலே!” னு பொண்கொழந்தேள் நக்கல் அடிச்சது. மாமியாத்து டோங்கா கிண்ணத்துல இருந்த புட்டு கிடைச்சுடும்னு முழூ நம்பிக்கையோட ஹரிக்குட்டியை பாத்தோம்.

அ..அ..அ...!னு சுருதிப் பெட்டி எபக்ஃடை முதல்ல குடுத்துட்டு "வாடி என் கப்பக்கிழங்கே!"...னு கீர்த்தனையை ஆரம்பிச்ச உடனே எல்லாரும் 'க்ளுக்'னு சிரிச்சோம். பெரிய ஜேசுதாஸ் மாதிரி அந்தப் பய கண்ணை மூடிண்டு ‘வாடி! ஆ ஆ வாடி! வா வா வாடி!’னு ப்ருக்கா எல்லாம் போட்டான். என்ன தோணித்தோ தெரியலை அந்த மாமிக்கும் சிரிப்பு வந்துடுத்து. “வள்ளி மாமிக்கு....னு வந்து பொறந்துருக்கு பாரு!”னு சொல்லிண்டே எங்க எல்லாருக்கும் சின்னக்குழந்தை பாரக்ஃஸ் சாப்பிடர ஸ்பூனால இக்கினி இக்கினி!யா 2 ஸ்பூன் புட்டு போட்டா. “இந்த ஸ்பூன்ல குடுத்தா அடுத்த நவராத்ரிக்கும் இதே புட்டை வச்சு ஓட்டிடலாம் மாமி!”னு ‘சக்கப்பழம்’ ஹரிஷ் கமண்ட் அடிச்சுட்டு வந்துட்டான். அடுத்த நாள்லேந்து யாரும் ஹரிக்குட்டி கூட சுண்டல் வாங்க போகர்துக்கே தயங்கினா. ஏடாகூடமா ஆம்பூர் கோமு மாமியாத்துல வச்சு “நேத்து ராத்திரி யம்ம்ம்மா!”னு பாடி தொலைச்சான்னா அந்த மாமி அருமாமனைல வச்சு எங்க எல்லாரையும் நறுக்கிடுவா!ங்கர பயம் தான் காரணம்.............:)

நவராத்ரிக்கு மாமிகள் ஜாக்கெட், பாவாடை, புடவை குடுக்கர மாதிரி சிவராத்ரிக்கு ஏன் மாமாக்கள் யாரும் ‘வைக்கிங்’ முண்டா பனியன், வார்வச்ச டிராயர், வேஷ்டி எல்லாம் குடுக்கமாட்டேங்கரா??னு சமுதாய அக்கறையோட பலதடவை நானும் எங்க அண்ணாவும் பேசிண்டதுண்டு..........:)

Thursday, September 22, 2011

கல்லிடை காஸ்மோபொலிடன்

முந்தைய பாகங்கள் படிக்க Part 1 Part 2

'பெங்களூர்ல எங்க தங்கினாய்?'னு யாரோ போன போஸ்ட்ல கேட்டு இருந்தா. ஒரு அக்காவாத்துல தான் தங்கி இருந்தேன். என்னோட சொந்தக்காராளாத்துல கூட அவ்ளோ அழகா உபசாரம் பண்ணுவானு சொல்லமுடியாது. இந்த அக்கா & அத்திம்பேர் ரெண்டுபேருமே ஓசி பேப்பர் வாசிக்கரவா. “போஸ்ட் & கமண்ட் எல்லாம் படிச்சுட்டு சிரிப்போம், ஆனா கமண்ட் போடமட்டும் மறந்துபோயிடர்து தக்குடு!”னு சொல்லுவா. மத்தியானத்துக்கு அழகா பொரிச்சகுழம்பும் தேங்காயிட்ட கீரையும் பண்ணியிருந்தா. “கமண்ட் எல்லாம் வேண்டாம் அக்கா, அதுக்கு பதிலா அடுத்த தடவையும் இந்த பொரிச்சகுழம்பு & தயிர் கிச்சடியை மறக்காம பண்ணிடுங்கோ!”னு சொல்லிட்டேன். சிருங்கேரினு சொன்னாலே என்னோட உடம்பும் மனசும் புத்துணர்ச்சி ஆயிடும். பெங்களூர்ல இருந்த வரைக்கும் வருஷத்துக்கு 2 தடவையாவது போயிட்டு வந்துண்டு இருந்த ஒரு ஸ்தலம். சில சந்தோஷங்களை வார்த்தையால வர்ணிக்கமுடியாது, அதை அனுபவிச்சாதான் புரியும். சிருங்கேரி அந்த வகையை சேர்ந்தது. சிருங்கேரியின் சிறப்பை தனி பதிவா உம்மாச்சி ப்ளாக்ல போடலாம்னு இருக்கேன்.

சிருங்கேரிலேந்து மறுபடியும் பெண்களூர் வந்தேன். பெங்களூர்ல இருந்தது 2 நாள் ஆனா 4 நாளைக்கு பண்ண வேண்டிய வேலையை ப்ளான் பண்ணிண்டு போயிருந்தேன். கடைசில எங்க தாத்தா அடிக்கடி சொல்லும் மலையாள வசனமான "பட்டி சந்தைக்கு போன கதை" ஆயிடுத்து. சந்தைக்குள்ள நாய் இடுப்பை இடுப்பை ஆட்டிண்டு அவசர அவசரமா போகுமாம், ஆனா அது வாங்கவும் செய்யாது, விற்கவும் செய்யாது. அது மாதிரி சிலபேர் கைவீச்சும் கால்வீச்சுமா போவா ஆனா ஒரு காரியமும் பாக்காம திரும்பவருவா. என்னோட கதையும் அப்பிடி ஆயிடுத்து. பெங்களூர்ல இருக்கும் ஆழ்வார்குறிச்சி மாமா & வி. கடவுள் ஆத்துக்கு ஆசை ஆசையா கூப்பிட்டு இருந்தா. இந்த களோபரத்துல ரெண்டு பேராத்துக்கும் போகமுடியலை. ஆழ்வார்குறிச்சி மாமா “எங்காத்து பிளாட்டுலேந்து பாத்தா ஸ்விம்மிங் பூல் தெரியும் தக்குடு!”னு ஸ்பெஷல் ‘ஹிண்ட்’ எல்லாம் குடுத்து இருந்தார். ஹும்ம்ம்ம்ம்! அவாத்து மனுஷாளை பாக்கர்த்துக்காக இல்லாட்டியும் அந்த ஸ்விம்மிங் பூலுக்காகவாவது ஒரு எட்டு போயிட்டு வந்து இருக்கலாம். என்ன பண்ணர்து.... எங்க ஊர் கோமா மாமி சொல்ற மாதிரி "ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க". அடுத்த தடவை பெங்களூர் போகும் போது என்ன ஆனாலும் அந்த ஸ்விம்மிங் ஃபூலுக்கு... oopss!! மன்னிக்கவும், அந்த மாமாவாத்துக்கு போயிட்டுதான் வரணும்.

கிஷ்கிந்தா காண்டம் முடிஞ்சு சுந்தர காண்டம் வந்த கதையா நானும் பத்து நாள் சதுர்த்தி உத்ஸவத்துக்கு நடுல கல்லிடையை பார்க்கும் ஆர்வத்தோட கல்லிடை காஸ்மோபொலிடனை நோக்கி பிரயாணத்தை தொடர்ந்தேன். அடியேன் போய் சேரும்போதே இரண்டாவது நாள் சதுர்த்தி உத்ஸவம் நடந்துண்டு இருந்ததால தெரு முழுசும் பெரிசு பெரிசா கன்யா கோலம் & பாதி தெருவுக்கு பந்தல்னு ஒரே அமர்களமா இருந்தது. “துபாய்க்கும் கல்லிடைக்கும் சீஸன் டிக்கெட் எடுத்துருக்கையாடா தக்குடு!”னு ஒரு மாமி வயத்தெரிச்சல் பட்டா. நானும் லக்ஷத்தி எட்டாவது தடவையா “நான் இருக்கர்து துபாய் இல்லை தோஹா!”னு அந்த மாமிட்ட சொல்லிண்டு இருக்கும் போதே “துபாய்லேந்து எப்ப வந்தைடா?”னு ‘சூப்பர்’ மாமா கேட்டார். அவாத்து மாமி யூஸ் பண்ணர பினாயிலை கூட “சூப்பர் பினாயிலாக்கும்”னு பீத்தர்தால அந்த மாமாவுக்கு ‘சூப்பர் மாமா’னு பத்து வருஷம் முன்னாடி எங்க தெருல பேர் வச்சா.



கன்யா கோலம்!!

தெருல ஒரு கோட்டை வம்பு இருந்தது. உள்ளதுலையே டாப் மோஸ்ட் ‘சந்தனகும்பா’ மாமியாத்து சண்டை தான். நம்ப ‘சந்தனகும்பா’ மாமிக்கும் அவாளோட நாட்டுப்பொண்னுக்கும் சண்டை மண்டை உடையர்து. மே மாசம் கூட ரெண்டு பேரும் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாதிரி கழுத்தை கட்டிண்டு இருந்தா, இப்ப என்னவோ ஜெவும் விஜயகாந்தும் மாதிரி இருக்கா. “நான் அடிச்சா தாங்கமாட்ட நாலு நாளு தூங்கமாட்ட!”னு வீரவசனம் எல்லாம் இரண்டு பேரும் பரஸ்பரம் பரிமாறிக்கரா. இவா ரெண்டு பேரோட சத்தம் ஜாஸ்தியா இருந்ததாலையோ என்னமோ இந்த தடவை கூம்பு ஸ்பீக்கர் & மைக் செட்டு எதுவுமே பந்தல்ல கட்டலை. காத்தால சமயம் எல்லாம் ‘காவிய புதன்’ மாதிரிதான் ரெண்டு பேரும் நடமாடரா, சாயங்காலம் ஆயாச்சுன்னா ‘அதிரடி’ வியாழனா மாறிடரா. பகவான் தான் காப்பாத்தனும் அவாத்து ஆம்பிளேளை. தெருல இருக்கும் மாமா மாமிகள் எல்லாம் திருமதி. செல்வம்,அத்திப்பூக்கள், நாதஸ்வரம் சீரியல்ல வரும் கதையை பேசிக்கர மாதிரியே இவா கதைல இன்னிக்கி என்ன திருப்பம்?னு பேசிக்கரா.

தெருக்குள்ள மெட்ராஸ் ஐ மாதிரி ஒரு வியாதி எல்லா மாமிகள்கிட்டயும் பரவி இருக்கர்தால நம்ப ‘குண்டல’ கோமா மாமி பயங்கர மூடவுட்ல இருந்தா. எல்லா மாமிகளும் ஆளுக்கு ஒரு ஜிமிக்கியை போட்டுண்டு லாந்தர்து தான் கோமா மாமியோட மூடவுட்டுக்கு காரணம். ‘ஜிமிக்கி போட்டா 10 வயசு குறைச்சு காட்டும்’னு ம@#$ர் மலர்ல யாரோ கிளப்பிவிட்டதை நம்பி எல்லா மாமிகளும் ‘உஜாலாவுக்கு மாறிட்டோம்’ மாதிரி மாறியிருக்கா. ‘கட்டுகுட்டு’னு இருக்கரவா எல்லாரும் எப்பிடி நமிதா ஆகமுடியாதோ, அதேமாதிரி குண்டலம் போட்டவா எல்லாரும் கோமா மாமி ஆகமுடியாது!”னு சொன்னதுக்கு சன்மானமா எனக்கு மாமி கையால கோகுலாஷ்டமி பக்ஷணமும், முதுகுல இரண்டு அடியும் கிட்டினது. அவாத்து மாமா அப்பிடியேதான் இருக்கார். அப்புறமா வாய்கால்ல வெச்சு ‘குசுகுசு’ குரல்ல “நமிதாவை பத்தி மாமிட்ட என்னவோ சொல்லிண்டு இருந்தியே?”னு ரொம்ப ஆர்வமா கேட்டார். “துபாய்ல தான் எங்க அக்காபொண் ஹரிணி இருக்கா, நீ அவாத்துக்கு போயிட்டு வாயேன்!”னு ஒரு மாமி நீட்டிமுழக்கினா. ‘துபாய்க்கு போகர்துக்கு விசா/பிசா எல்லாம் வாங்கனும் மாமி’னு சொன்னாலும் அவாளுக்கு புரியமாட்டேங்கர்து. “உங்க ஊருக்கு பக்கத்துலதான் துபாய்!னு சொன்னியே தக்குடு!”னு அவாத்து மாமா விடாம கேட்டார். “ஆமாம் மாமா அப்பிடிதான் சொன்னேன், ஆனா ரெண்டும் வேறவேற தேசம்!”னு சொல்லியும் சமாதானம் ஆகலை. ‘அவாத்துக்கு போ! இவாத்துக்கு போ!’னு வாய்கிழிய சொல்லுவாளே தவிர ஒருத்தராவது விலாசமோ போன் நம்பரோ தந்துடமாட்டா. ‘அக்காபொண்ணு ஹரிணி’னு கூகிள்ல அடிச்சுபாத்தா இவாளோட ஆத்து அட்ரஸை கண்டுபிடிக்கமுடியும்.

அடியேன் கல்லிடை போன சமயம் இங்க தோஹால இருக்கும் கருங்குளம் மாமா & குடும்பம் இந்தியா வந்திருந்தா. மாமி ஊர்ல இல்லாத சமயத்துல மாமா பில்டர் அடிச்சு ஒரு காப்பி போடுவார் பாருங்கோ!! அதை அங்கவஸ்தரத்துல அலுங்காம வாங்கி உறியர்துக்குனு இங்க தோஹால ஒரு வெட்டிகூட்டமே இருக்கு. அவாத்து மாமிக்கு கல்லிடைங்கர்தால அவாளையும் “ஒரு நாளைக்கு கருங்குளத்துலேந்து கல்லிடை வாங்கோளேன்!”னு அழைச்சுருந்தேன். கோவில்/பூஜைனு எது சொன்னாலும் “ஓ வரோமே!”னு ஒன்னுபோல சொல்லும் லட்சிய தம்பதிகள். அவாத்து மாமா நடக்கர்தே ஓடரமாதிரி தான் இருக்கும், காந்தியடிகளோட தண்டியாத்திரைக்கு பின்னாடி ஓடினவா மாதிரி மாமி ஓட்டமும் நடையுமா மாமா பின்னாடி வந்தா. கல்லிடைல முக்குக்கு முக்கு மாமியை நிப்பாட்டி எல்லாரும் பழைய கதையெல்லாம் பேச ஆரம்பிச்சதுல சாயங்காலம் 5 மணிக்கு வந்த மாமாவோட கார் கல்லிடைலேந்து திரும்பி போகும் போது ராத்ரி மணி 10.

போன தடவை அடியேன் யானைல கும்பம் கொண்டு வந்தபோதே ஒரு அம்பிக்கு அவன் ஏறமுடியலையே!!னு ரொம்ப குறை. அதனால இந்தவாட்டி அவனை யானை மேல ஏத்திவிட்டு வேடிக்கை பாக்கர்து!னு முடிவு பண்ணி கழுத்துல மாலையை போட்டு ஏற சொல்லிட்டோம். யானையோட பக்கத்துல போய் பாத்தா, போன தடவை காலால ‘ஓம்’ போட்ட அதே யானை. அவனுக்கு யானை கிட்ட போனதும் பயத்துல கையும் காலும் நடுங்க ஆரம்பிச்சுடுத்து. யானையோட காலை கட்டிண்டே நிக்கரானே தவிர ஏறமாட்டேங்கரான். அப்புறம் முக்கிமுனகி மேல ஏறி பின்பக்கத்தை பார்த்து உக்காச்சுண்டுட்டான். “திரும்பி நேரா உக்காருடா அம்பி!”னு சொன்னா “இனிமே எல்லாம் என்னால திரும்ப முடியாது வேணும்னா யானையை திருப்புங்கோ!”னு சொல்றான். பயங்கர காமெடியா இருந்தது அந்த அம்பியோட. இனிமே ஜென்மத்துக்கும் யானை பக்கமே வரமாட்டான்.

பெரிய பெரிய ஹோமங்கள், பதினாலு விதமான புஷ்பங்கள், கரையை தொட்டுண்டு ஓடின தாமிரபரணி, தரையை மூடின பச்சை வயல்கள், பெரிய பெரிய கோலங்கள்,அம்மா கையால் சமைத்த பருப்புருண்டை குழம்பும் கொல்லைபுரத்து கீரை, கணக்குவழக்கில்லாமா நொசுக்கின எல்லா மாமியாத்து கொழுக்கட்டை & கோகுலாஷ்டமி பக்ஷணம், பழைய தோஸ்துகளோட திண்ணைல அரட்டை & ‘டோங்கா’ கிண்ணத்துல சாப்பிட்ட கோவில் பிரசாதம் எல்லாம் எண்ணத்துல நிறைஞ்சு வண்ணத்துபூச்சியாய் திரும்பி வந்தேன்.......... (சுபம்)

Thursday, September 15, 2011

ஹலோவ்வ்வ்வ்...........

Part 1

ஒரு வழியா பொட்டியெல்லாத்தையும் எடுத்துண்டு மீனம்பாக்கத்துலேந்து வெளில வந்தேன். அதிகாலைல முதல் ஆளா வாசல் பெருக்கி தெளிக்கும் எங்க தெரு 'கொட்டடாகுடையடா' மாமியாத்து வாசல் மாதிரி ஒரு மிதமான மழை பெஞ்சு எல்லா இடமும் வாசல் தெளிச்ச மாதிரி ஈரபதத்தோட இருந்ததால மெட்ராஸ்ல வந்து இறங்கினோனே எப்போதும் வரும் எரிச்சல் இந்த தடவை வரலை.

மரியாதை நிமித்தமான சிலபல சந்திப்புக்கள் சென்னைல இருந்ததால் சென்னை வந்து பெண்களூர் போகற மாதிரி ஆயிடுத்து. மெட்ராஸ்ல இருக்கர மனுஷாளை விட மூனு மடங்கு ஜாஸ்தியா செல் போன் இருக்கும் போலருக்கு! அட ராமச்சந்திரா!!! அதுல என்ன தான் பண்ணுவாளோ! பகவானுக்கு தான் வெளிச்சம்! “இந்தோ வந்துண்டே இருக்கேன்! ரயிலுக்குள்ள ஏறியாச்சு! சீட்ல உக்காந்தாச்சு! கொட்டாவி விட்டேன்! கொய்யாபழம் சாப்பிட்டேன்!” இந்த ரீதில எல்லா சமாசாரத்துக்கும் சம்சாரத்துக்கு ஒரு கால். “உன்னோட அதிகார மயி@ எல்லாம் உங்க அப்பன்கிட்ட வெச்சுக்கோ!!” “சேலத்துல சகளையோட மூத்த மவளுக்கு வர வெள்ளிக்கிழமை சடங்கு!”னு கிராமிய மணம் கமழும் சம்பாஷணைகள் ஒரு பக்கம். “நீ எப்போதுமே இப்படி தான், ‘உம்மா’ தா!னு கேட்டா தரவே மாட்டே!” “நான் இப்போ என்ன கலர் சட்டை போட்டுண்டு இருக்கேன் சொல்லு பாப்போம்!!”னு எவனோ ஒரு அம்பிகாபதி அமராவதிக்கு சேதி சொல்லிண்டு இருக்கான். “இனிஷியல் பூட்டிங்க்ல பிரச்சனை இருந்தாலும் இருக்காலாம் எதுக்கும் நீங்க ரீபூட் பண்ணி பாக்கலாமே! yeppp! தரமணி கிட்ட வந்திட்டேன்!”னு நெட்வொர்க் அட்மினோட கால் ஒரு பக்கம் ஓடிண்டு இருக்கு.

இது எதுவும் இல்லைனா காது செவிடானவா மாதிரி சதாசர்வ காலமும் ஒரு மானம் கெட்ட ஹெட்போனை மாட்டிண்டு பாட்டு கேட்கவேண்டியது! பாட்டு கேக்கர்து நல்ல விஷயம் தான், நான் இல்லைனு சொல்லலை, அதுக்காக காதை திறக்காம எப்பபாத்தாலும் இசை மழையா? பொறுக்க முடியாம என்னோட பக்கத்துல இருந்த ஒருத்தர்கிட்ட நிஜமான குழந்தை அழர்து, கிளி கொஞ்சர்து எல்லாம் நீங்க கேட்டு இருக்கேளா?னு பேச்சு குடுத்தேன். ஒரு பக்க ஹெட்போனை கழட்டிட்டு "அது அடுத்த டிராக்ல ரிக்கார்ட் பண்ணி வெச்சுருக்கேன், எப்பையாவது கேப்பேன்"னு பதில் சொல்லிட்டு 'படக்'னு செவிட்டு மிஷினை மாட்டிண்டுட்டார். யாராவது டாக்டருக்கு படிக்கறவா இருந்தேள்னா அவா எல்லாரும் எண்டு டாக்டருக்கு (ENT) படிங்கோ! நிச்சியமா இன்னும் 5 வருஷத்துல முக்கால்வாசி ஆட்கள் செவிடாதான் அலையப்போறா.

இவாளோட ரிங்டோன் எல்லாம் கேட்டா கொஞ்சம் சிரிப்பும் வரத்தான் செய்யர்து. " நெஞ்சை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி" அடிச்ச உடனே பல்லெல்லாம் வாயா ஒரு அண்ணா அவரோட டாவு கூட பேசரார். "சட்டி சுட்டதடா கை விட்டதடா!" பாட்டு வந்து கரெக்டா ‘புத்தி கெட்டதடா’ னு டி.எம்.எஸ் இழுக்கும் போது போனை எடுத்து “வீட்டுக்கு தான் வந்துண்டு இருக்கேன்மா, வரும்போது அரை கிலோ புளி வாங்கிண்டு வரனுமா? வேற எதுவும் வேண்டாம்லா?னு பேசிட்டு விரக்தியா போனை கட்பண்ணர்து கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆன யாரோ ஒரு அப்பாவி ரங்கமணி. சரவணா ஸ்டோர்ஸையே வாங்கி வீட்டுல வெச்சாலும் இந்த பொம்ணாட்டிகளுக்கு ஆத்துக்கார் ஆபிஸ்லேந்து வரும் போது போன் பண்ணி “பால் வாங்கிண்டு வாங்கோ! குக்கருக்கு காஸ்கெட் வாங்கிண்டு வாங்கோ! பூ வாங்கிண்டு வாங்கோ! புண்ணாக்கு வாங்கிண்டு வாங்கோ!!”னு பிச்சுபிடிங்கி எடுக்கர்துல ஒரு தனி சுகம்.



தா! தை! திக்கி! தை! :)

ரொம்ப நாளாவே இந்தியாவுக்கு எப்ப வருவை? எப்ப வருவை? ஒரு அக்கா கேட்டுண்டு இருந்தா. பரத நாட்டியத்துக்கு பேர் போன ஒரு இடத்துக்கு பக்கத்துல இருக்கும் அந்த அக்காவோட ஸ்பெஷாலிட்டியே அவா சொல்லும் “ஹலோவ்!”தான். நான் தங்கி இருந்த இடத்துலேந்து 15 நிமிஷம் தான் அவாளோட வீடு, அதானால அவாத்துக்கு கிளம்பி போய், அவாத்து பக்கத்து பஸ் ஸ்டாண்ட்லேந்து கால் பண்ணினேன். 3 நிமிஷத்துல வந்து ஸ்கூட்டில என்னை ஏத்திண்டா. வண்டி கிளம்பினது மட்டும் தான் எனக்கு தெரியும். அம்ம்ம்ம்ம்மாடி! ஜாக்கிசான் வேகத்துல வண்டி ஓட்டறா. நடுல நடுல ‘தக்குடு இருக்கையா! தக்குடு இருக்கையா!’னு செக் பண்ணிண்டா. எல்லாம் முடிஞ்சு அவாளோட அப்பார்ட்மெண்ட் பார்கிங்ல சுவருக்கும் ஒரு தூணுக்கும் நடுல ஜேம்ஸ்பாண்ட் சண்டைகாட்சில வரமாதிரி புகுந்து ஒரு ப்ரேக் பிடிச்சா பாருங்கோ!! 1983-ல காலமான எங்க தாத்தா கண்ணுல தெரிஞ்சார்.

எதிர்காத்துல வந்ததால என்னோட ரெண்டு கண்ணுலையும் ஜலம். "ஆத்துக்கு வந்த மனுஷாளை பஸ்ஸ்டாண்ட்லேந்து பிக்கப் பண்ணினதுகெல்லாம் கண் கலங்க கூடாது கோந்தை"னு சொல்லிண்டே அவாத்துக்கு கூட்டிண்டு போய் லெமன் ஜூஸும் சிந்தூர நிறத்துக்கு சுடச்சுட கேசரியும் தந்தா. கேசரி ‘சூப்பரா இருக்கு!’னு சொன்னதுக்கு அப்புறம் மெதுவா “நான் தான் பண்ணினேன்!”னு சொன்னா எனக்கென்னவோ அவாளோட மாமியார் தான் பண்ணியிருப்பாளோ!னு ஒரு சம்சியம். ரொம்ப நேரம் அவாத்து மனுஷாளோட பேசிண்டு இருந்தோம். பிஸ்கெட் எனக்கு அவ்வளவா பிடிக்காதுங்கர்தாலா பேருக்கு அஞ்சே அஞ்சு ‘குட்டே’ பிஸ்கட் மட்டும் நொசிக்கினேன். அவாத்துல இருக்கும் போதே நம்ப பாங்க்’ மாமிக்கும் போன்ல பேசினோம். ‘ஆத்துக்கு வா தக்குடு!’னு ரொம்ப வாஞ்சையோட கூப்பிட்டா. “நான் ஸ்கூட்டில கூட்டிண்டு வரேன் மாமி!”னு இந்த அக்கா போன்ல சொன்னதுக்கு அப்புறம் பாங்க் மாமியாத்து விசிட்டையே நான் மறந்துட்டேன். திரும்பி ஆத்துக்கு கிளம்பர்துக்கு முன்னாடி அவாத்து பூஜைரூம்ல உள்ள உம்மாச்சிக்கு "பத்திரமா கை/காலோட என்னை திருப்பி அனுப்பி வை பெருமாளே"னு வேண்டிண்டு சேவிச்சேன். சேவிச்சு எழர்துக்குள்ள “அத்திம்பேர் அடுத்த வருஷம் ‘ஆல்டோ’ கார் வாங்கி தரர்தா சொல்லி இருக்கார் தக்குடு!”னு குண்டை தூக்கி போட்டா நம்ப அக்கா.

அடுத்த நாள் காத்தால நான் பெண்களூர் கிளம்பி போயாச்சு. பங்காரபேட்டை ஸ்டேஷன் தாண்டும் போதே மனசுக்குள்ள ஒரு இனம்புரியாத சந்தோஷம்! இருக்காதா பின்ன? தக்குடு இந்த லோகத்தை தெரிஞ்சுண்ட புண்ணிய ஷேத்ரமாச்சே! பெண்களூர்ல ஏகப்பட்ட மாற்றங்கள். அவுட்டர் ரிங்க் ரோட்ல எல்லாம் திடீர் திடீர்னு மேம்பாலம் வருது. மெட்ரோ ரயில் வேலை மும்மரமா நடக்கர்து, வால்வோ ஏசி பஸ்ல வண்டி வண்டியா கூட்டம் ஏறர்து, எல்லாரோட கைலயும் ஆப்பிள் ஐபோன் இருக்கு. ஹோட்டல்ல எல்லாம் விலைவாசி தங்கம் மாதிரி ஏறி இருக்கு. ஒரு மசால் தோசை + ஒரு ஜோடி சாம்பார் வடை + ஒரு காபி சாப்பிட்டதுக்கு 110 ரூபாய் பில்லு, பில்லை பாத்துட்டு ஆத்த்த்த்தாடி!னு வாய்விட்டே சொல்லிட்டேன். “ஆத்தாடியாவது! காத்தாடியாவது! ஒழுங்கா பைசாவை எடு!”னு சொல்லர மாதிரி சர்வர் முறைச்சார். வேலை பாத்த பழைய கம்பெனிக்கு போய் சகாக்களை எல்லாம் பாத்தேன். அந்த ‘டெக் பார்க்’ல அடா அடா அடா! என்ன ஒரு சூழ்நிலை தெரியுமோ! கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் கலர் கலரா ரகம்ரகமா..... பூ செடி இருந்ததுனு சொல்லவந்தேன். ஆபிஸ்ல இருந்த கன்னடத்து பைங்கிளிகளோட ரொம்ப நாளைக்கு அப்புறம் சத்தமா கன்னடத்துல பேசி சிரிச்சோம்.

பெண்களூர் போயிட்டு அங்க உள்ள மால் எதையும் பாக்காம வந்தா ஊருக்கு போன பலன் கிட்டாது!னு ஊர் பெரியவால்லாம் சொல்லி இருக்கர்தால பழைய ப்ரண்டை கூட்டிண்டு ஃபோரம் மால் போனேன். போகும் வழில மாரத்தஹல்லில ஒரு பாணிபூரிகாரர் “வட்டத்துல ஒரு கை குறையர்து”னு சொன்னதால நானும் சேர்ந்துண்டேன்.. மாலுக்கு போனதுக்கு அப்புறம் நானும் எங்க அண்ணாவும் ஜோடியா உக்காசுண்டு உலகத்தோட மாயாவினோதங்களை அலசி ஆராய்ஞ்ச மாடிப்படில போய் திரும்பி ஒரு தடவை உக்காசுண்டு பாத்தேன். அங்க உள்ள செண்ட்/பவுடர்/சாம்பூ மணம் மாறாம இருந்தாலும் பிகர்கள் எல்லாம் நல்ல முன்னேறி இருக்கா. அவா போட்டுண்டு வளையவந்த டிரெஸ் நார்மல் சைஸ்னு கணக்குல எடுத்துண்டா எங்க ஊர்ல இருக்கும் குழந்தேளுக்கான 'மம்மிடாடி' ரெடிமேட் ஷோரூம்ல இருக்கும் மூனு வயசு குழந்தையோட கவுன் சைஸ் XL-நு தான் சொல்லனும். நிறையா பிகர்கள் அவாளோட 10ஆவது பிறந்த நாளுக்கு அவாத்துல எடுத்துகுடுத்த டிரஸ்ஸை எல்லாம் 20 வயசுல போட்டுண்டு கிழக்கையும் மேற்கையும் போயிண்டு இருந்தா. இன்னொரு அவதாரம் போட்டுண்டதுக்கு அப்புறம் தைச்ச மாதிரி இருந்த ஒரு டவுசரை போட்டுண்டு லாந்தினது. என்னோட ப்ரண்டோட ரொம்ப மும்மரமா பேசிண்டு இருந்ததால இந்த விஷயம் எதையுமே நான் கவனிக்கலைனு உண்மையை சொன்னா நீங்க எல்லாரும் “நம்பிட்டோம்!”னு தான் கமண்ட் போடுவேள்.

திடீர்னு மெட்ராஸ் அக்காடேந்து ஒரு கால், "ஹலோவ் தக்குடு, ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன்டா கோந்தை! அங்க வந்த பொம்ணாட்டிகள் எல்லாம் டிசைன் டிசைனா ஜன்னல் வச்ச @#$% போட்டுண்டு வந்தா, உன்னை தான் நினைச்சுண்டேன்!”னு வம்புக்கு இழுத்தா. ‘இதுக்கு எதுக்கு என்னை நினைச்சுக்கனும்!’னு மனசுல யோசிச்சுண்டே “அக்கா, கவலையேபடாதீங்கோ! மெட்ராஸ்ல ஜன்னலை மூடின பகவான் பெண்களூர்ல கதவையே திறந்துட்டார்!”னு சொல்லி சமாதாபடுத்தினேன்..........:)

குறிப்பு - போன போஸ்ட்லையே எல்லாரும் பல்லாவரம் பல்லாவரம்!னு சொல்லிண்டு இருந்தா, அது தமிழ் நாட்ல இருக்கா இல்லைனா கேரளால இருக்கனு கூட எனக்கு தெரியாது! அடுத்த போஸ்ட் சிருங்கேரி & கல்லிடை மாமா/மாமிகளுடன் கொண்டாடிய சதுர்த்தி உத்ஸவ ஸ்பெஷல் ரிப்போர்ட்........

Thursday, September 8, 2011

அதாகப்பட்டது................

பாலக்காடு தொடங்கி பனாமா கால்யாய் பர்யந்தம் ஜீவிச்சு இருக்கும் எல்லா ஓமணக்குட்டிகளுக்கும்/சேட்டன்களுக்கும் மனசு நிறைஞ்ச ஓணம் ஸத்யா


Itடது Butடானால் Whatடென்ன Sirஐயா-னு பெரியவா எல்லாம் சொன்ன மாதிரி ஊருக்கு போனாதான் நாலு வார்தை நம்பளால எழுத முடியர்து. மத்தவா எல்லாம் புத்தக விமர்சனம், உண்மையின் நிதர்சனம், ஏழையின் கரிசனம், ஆலய தரிசனம்னு நன்னா கோர்வையா எழுதிட்டு போயிடரா, இலை போடாத பந்தில உக்காந்த மாமி எதிர்த்த பந்தில பால்பாயாசத்தை நக்கி ஏப்பம் விடர மாமியை ஏக்கமா பாக்கர மாதிரி எல்லாரோட போஸ்டையும் பாத்துண்டு இருந்தேன். “எலேய் தக்குடு! ஒட்டகம் மேய்ச்சதெல்லாம் போதும் கல்லிடை காஸ்மோபொலிடனுக்கு போய் தொப்பையப்பனுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லிட்டு வா!”னு ஷேக்கு சொல்லிட்டார். பக்கதாத்து பொண்ணுக்கும் சேர்த்து பிள்ளையார் கோவில் சுவத்துல உக்காச்சுக்க இடம் போட்ட மாதிரி 2 மாசம் முன்னாடியே துண்டை போட்டு பிளைட்ல ஜென்னலோரமா ஒரு டிக்கெட் போட்டு வைச்சது கொஞ்சம் செளகர்யமா தான் இருந்தது. ஏர்போர்ட்ல 8 சாஸ்தா ப்ரீதிக்கு சேர்ந்த கூட்டம் மாதிரி ஜனபிரவாஹம்.

இந்த தடவை ஏர்போர்ட்ல ஆரம்பிச்சு காஸ்மோபொலிடன் வரைக்கும் எங்கையும் வம்பை விலைக்கு வாங்கப்பிடாதுனு ஒரு சங்கல்பத்தோட தான் கிளம்பினேன். 4 சீட்டுக்கு நடுல உக்காசுண்டாதான் வம்பு வருதுனு ஒரு அனாலிஸிஸ் பண்ணி இந்த தடவை டபுள் சீட்டர்ல டிக்கெட் போட்டு வெச்சுருந்தேன். சீட்டை தேடி கண்டுபிடிக்கர்த்துக்குள்ள இந்த ஏரோப்ளேன் பொம்ணாட்டிகள் 3 தடவை இடிச்சுட்டு போயாச்சு. இப்பெல்லாம் பொம்ணாட்டிகள் தான் ஆம்பிளேளை இடிக்கரா, ஹும்ம்! எல்லாம் கலி காலம். அடுத்த இடி அவா இடிக்கர்த்துக்குள்ள சீட்டை கண்டுபிடிச்சு போய் உக்காச்சுண்டுட்டேன்.





பயணங்கள்.....


பக்கத்து சீட்டுகாரன்/காரி நல்லபடியா அமையனுமேனு கொஞ்சம் கவலையாதான் இருந்தது. நம்பளை மாதிரியே அமைதியான(?!) சுபாவமா இருந்தா பிரச்சனை இல்லை. சிலபேருக்கு நாலு சீட் தள்ளி அவாளோட சகா யாராவது இருப்பா, அவாளை கூப்பிடறேன் பேர்வழினு நம்ப காதுல வந்து கத்திண்டு இருப்பா. இப்படியெல்லாம் யோசிச்சுண்டு இருக்கும் போதே ஜிப்பா போட்ட ஒரு வெள்ளக்கார மாமி சொல்லி வெச்ச மாதிரி சப்பரமா வந்து பக்கத்துல உக்காந்தா. திருனவேலி பஸ்ஸா இருந்தா “பொம்பளையாள் வந்துருக்கு பக்கத்து சீட்ல மாறி உக்காருங்க அண்ணாச்சி!”னு சொல்லி சீட்டு கொள்ளாம உக்காசுண்டு இருக்கும் ஒரு கிடாமீசை அண்ணாச்சிக்கு பக்கத்துல நம்மை கண்டக்டர் மாத்தி விட்டுடுவார்.


ஒரு ஹாஆஆய்! சொல்லிட்டு அவாளோட இடத்துல செட்டில் ஆயிண்டா அந்த வெள்ளக்கார மாமி. ப்ளைட்ல ஏறின உடனே எந்த படமும் பாக்க ஆரம்பிக்க கூடாது. ப்ளைட் கிளம்பர வரைக்கும் நடுல நடுல நம்ப ஹெட்போன்ல கேப்டன் மாமா “ப்ளைட் நகர்ந்துண்டுருக்கு! பறக்க போகர்து! சீட்டை கெட்டியா புடிச்சுக்கோங்கோ! பக்கத்துல பிகர் இருந்தா அதோட கையை புடுச்சுக்கோங்கோ! பறக்க தொடங்கியாச்சு! டயர் உள்ள போகர்து! கக்கூசுக்கு போனவா மறக்காம ஜலம் விடுங்கோ!”னு எதாவது அனோன்ஸ்மென்ட் பண்ணி பண்ணி ப்ராணனை வாங்குவார். அதனால ப்ளைட் கிளம்பர வரைக்கும் நாம எதாவது புஸ்தகம் படிக்கர்துதான் தேவலை. நான் கைல கொண்டு போன புஸ்தகத்தை வாசிக்க ஆரம்பிசேன். அந்த வெ.மாமியும் புஸ்தகம் வாசிக்க ஆரம்பிச்சா.


கொஞ்ச நேரம் கழிச்சு பிரட்ல பட்டர் தடவும் போதுதான் நமக்கும் அந்த வெ.மாமிக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்னு தெரிஞ்சது. அவாளோட கைல ஹாரி பாட்டர், என்னோட கைல அபிராமி பட்டர். அழகா வெஜிடேரியன் சாப்பாடு சொல்லி வச்சு வாங்கி சாப்பிட்டா என்னோட சாம்பார் அவ்ளோ சோபிதம் இல்லாததால அந்த அம்மா அவாளுக்கு சொல்லி வெச்சுருந்த பெரும்பயறு டால்ல ஒரு கரண்டி எனக்கும் விடச்சொன்னா. இந்தியா பத்தி அவ்ளோ சமாசாரம் அவாளுக்கு தெரிஞ்சுருக்கு. அவாளோட குடும்ப கதையெல்லாத்தையும் என்கிட்ட சொல்ல ஆரம்பிச்சுட்டா. அந்த அம்மாவோட ரெண்டு புள்ளையாண்டான்கள் அமெரிக்காலையும் ஐரோப்பாலையும் இருக்கா. வெ.மாமி மெட்ராஸ்ல வேலை பாக்கராளாம். அவாளோட ஆத்துக்காரர் உன்னிகிருஷ்ணன்னு ஒரு மலையாளி. “அப்போ ஃபாரின் க்ளோப்ரேஷன்னு சொல்லுங்கோ!”னு பழக்க தோஷத்துல ‘படக்’னு சொல்லிட்டேன். நல்லவேளை அவா தப்பா எடுத்துக்காம ரசிச்சு சிரிச்சா. திருவண்ணாமலை, ரமணாஸ்ரமம் பத்தி எல்லாம் பேசினா. “ஊர்ல இருக்கர பண்டாரம்/பரதேசி,ஞானப்பழம்/வாழைப்பழம் எல்லாரும் சொல்லிவெச்ச மாதிரி உன்கிட்ட வந்து சவகாசம் வெச்சுக்கறாளே அது எப்பிடிடா மாப்ளே?”னு எங்க அண்ணா என்னை எப்போதும் கேட்பது ஞாபகம் வந்தது. “நீ என்ன புஸ்தகம் வாசிக்கறாய்?”னு கேட்டா. “இவரும் அல்மோஸ்ட் ஒரு இந்தியன் ஹாரிபாட்டர் தான் ஆனா இவரோட பேர் அபிராமி பட்டர். 100 பாட்டு பாடி அக்னிலேந்து தப்பிச்ச 'தி கிரேட் எஸ்கேப் ஸ்டோரி”னு அவாளுக்கு புரியரமாதிரி சொன்னேன்.


'திருவண்ணாமலைல பெளர்ணமி அன்னிக்கு வரக்கூடிய லக்ஷக்கணக்கானவா ஏன் கிரிவலபாதை முழுசும் எதையாவது சாப்டுண்டே போறா? போன்ல வேற பேசிண்டே இருக்காளே?'னு ஏகப்பட்ட சந்தேகம் வெ.மாமி கேட்டா. வாஸ்தவமான கேள்விதான். எனக்குமே முக்தி தலத்துல போய் “பொண்டாட்டியை குடு! புள்ளை குட்டியை குடு! மூட்டை மூட்டையா ஐஸ்வர்யத்தை குடு!”னு வேண்ட்ரவாளை பாத்தா பரிதாபமா இருக்கும். அதுலையும் திருவண்ணாமலைல குபேர லிங்கம் சன்னதில கூட்டம் அலைமோதும், வாயு லிங்கம்,யமலிங்கம் எல்லாம் காத்தாடும். “திருவண்ணாமலைல ரமணாஸ்ரமம் தவிர வேற எங்கையும் போயிடாதீங்கோ மாமி! குண்டலினி/ஜிமிக்கினு கலர் கலரா ரீல்விடும் தலப்பா கட்டின ஃப்ராடு பயலுக ஜாஸ்தி!”னு வெ.மாமியை உஷார் படுத்தினேன். ஒரு டகால்டி ஸ்வாமிகள் கிட்ட போய் ஒருத்தன் "ஸ்வாமி! அடியேனுக்கு எப்போது ஸித்தி கிட்டும்?"னு கேட்டானாம். என்ன சொல்லர்துன்னு தெரியாம 2 நிமிஷம் கண்ணை மூடி இருந்துட்டு "உங்க அப்பா எவ்வளவு சீக்கரம் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கறாரோ அந்த க்ஷணமே உனக்கு சித்தி கிட்டும்"னு ஸ்வாமிகள் சொன்ன கதை தான் ஞாபகத்துக்கு வந்தது.


பேச்சுக்கு நடுல வெ.மாமி கல்யாணம் ஆகி 16 வருஷத்துக்கு அப்புறம் டைவர்ஸ் ஆயிடுத்து!னு சாதாரணமா சொன்னா. ‘நீங்க பண்ணினேளா? அவர் பண்ணினாரா?’னு எங்க தெரு ‘வம்பு’ வைதேகி மாமியா இருந்தா கேட்டு இருப்பா. நான் அதெல்லாம் கேட்கலை.”பொதுவா வெள்ளக்காரா ஆத்து கதவு நம்பரை கேட்டாளே ‘மைண்ட் யுவர் சொந்த பிசினஸ்’னு சொல்லிடுவாளே, நீங்க உங்காத்து மாமா சமாசாரம் எல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றேள்?”னு கேட்டதுக்கு “நீ என்னோட ரெண்டாவது புள்ளையாண்டான் மாதிரியே இருக்கைடா கோந்தை!”னு சொல்லிட்டா. மனசுக்குள்ள தலைவரோட ‘அம்மா என்றழைக்காத’ பாட்டை ஓட விட்டு முகத்துல ‘ஆஆஆஆ!’னு கமல் பீலிங் குடுக்க நான் ப்ரயத்தனம் பண்ணர்துக்குள்ள “அவனும் உன்னை மாதிரியே சம்பந்தா சம்பந்தம் இல்லாம தத்துபித்துனு உளறிண்டே இருப்பான்”னு சொல்லி கடைசில என்னை வடிவேலாட்டம் ‘அவ்வ்வ்வ்வ்!’னு சொல்ல வெச்சுட்டா அந்த வெ.மாமி.


அதாகப்பட்டது, நாம என்ன தான் அமைதியா இருக்கனும்னு முயற்சி பண்ணி வாயை கட்டி வெச்சுருந்தாலும் வலியவந்து நம்ப கிட்ட பொலம்பக்கூடியவா பொலம்பத்தான் செய்வா. கடைசில நாம தான் இஷ்டப்பட்டு பேசின மாதிரி அக்ஷதையை நம்ப தலைல போட்டுடுவா. ஜாதக ராசியை திடீர்னு எல்லாம் மாத்த முடியாது. இமிக்ரேஷன்ல சீல் வாங்கர்துக்கு மெட்ராஸ் ஏர்போர்ட்ல நிக்கும் போது பின்னாடிலேந்து யாரொ பிராண்டரமாதிரி ஒரு பீலிங். திரும்பினா குட்டியூண்டு கருப்புகலர் ஸ்டிக்கர் பொட்டு வெச்ச ஒரு அக்கா " நீங்க என்னோட சித்தி புள்ளை சைச்சு மாதிரியே இருக்கேள்"னு ஆரம்பிச்சா (“அய்யைய்ய்ய்ய்யோ! மறுபடியும் முதல்லேந்தா?”னு மனசுக்குள்ளே கேட்டுண்டேன்)........................................


குறிப்பு – (It = அது, but = ஆனால், what = என்ன, sir = ஐயா ) அடுத்த போஸ்ட் சென்னை, பெண்களூர் & கல்லிடை காஸ்மோல சந்தித்த சில சுவாரசியமான விஷயங்கள் :))

Thursday, July 14, 2011

கண்டக்டர்


வரலெக்ஷ்மி பூஜை ஸ்பெஷல் போஸ்ட் சுந்தரி உம்மாச்சி ப்ளாக்ல படிக்க தவறாதீகள்!!


Part 1 Part 2

பெண்களூர்ல நாங்க தங்கி இருந்த வீட்டை சுத்தி நாலு நாலு சப்பாத்தி பிகர்களா சேர்ந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தா. அதுவும் இல்லைனா 10 - 12 பிகர்களை உள்ளடக்கிய பேயிங் கெஸ்ட்டா இருக்கும். பொறாமை பிடிச்ச சில பேர் நாங்க தான் இதுக்கு நடுல தங்கினோம்னு மாத்தியும் சொல்லர்து உண்டு. எங்களோடுது வீடுனு சொல்லர்தை விட மொட்டை மாடில வடிவமைக்கப்பட்ட அழகான கிளி கூண்டுனு சொல்லலாம். வீட்டோட சொந்தக்காரர் ரெட்டிகாரு! ஒன்னாம் தேதிலேந்து அஞ்சாம் தேதிக்கு உள்ள ஏழுகுண்டலவாடுவை பாத்துட்டு வந்து நமக்கு லட்டு ப்ரசாதமும் தருவார். திருப்பதில கோஷம் போடற மாதியே எங்களையும் பக்திபரவசத்தோட கூப்பிடுவார். எங்க அண்ணா பேரையும் என் பேரையும் முழுசா கூப்பிடர்துல அவருக்கு சொல்லமுடியாத ஆனந்தம்.

அதுக்காக வாடைகையை கம்மி பண்ணிடலை, எப்போதும் எங்க அண்ணாவுக்கு விண்டு குடுக்கும் லட்டுல கூட கொஞ்சம் லட்டு கிட்டித்து அவ்வளவுதான்!. ரெட்டி எப்போதுமே துட்டு விஷயத்துல ரொம்ப கெட்டி. வாரக் கடைசில எங்களுக்கு ஒரே போக்கிடம் பக்கத்துல இருந்த போஃரம் மால் தான். போகும் போது நிச்சயமா எங்க அண்ணா நடத்தி தான் கூட்டிண்டு போவான். திரும்பி வரும் போது சில சமயம் நல்ல மனசு இருந்தா பஸ்ல ஏறுவான். ஆனா அந்த ஊர்ல நடந்து போகர்தும் ஒரு தனி சுகம் தான் தெரியுமோ! அந்த ஊர்ல தொடர்ந்து பத்து நிமிஷம் நடந்தேள்னா நிச்சயமா ஒரு பார்க் வந்துடும். எங்க ஆத்துலேந்து நாங்க நடந்து போகும் முப்பது நிமிஷத்துக்குள்ள இரண்டு பார்க் வரும்னா பாருங்கோளேன். ‘மாப்ளே! மாப்ளே!’னு இரண்டு பேரும் மாறி மாறி பேசிண்டே நடந்துடுவோம்.

அவா ஊர்ல சாயங்கால சமயம் நாம மணி பாக்கர்துக்கு கடிகாரத்தை பாக்கனுங்கர அவசியமே இல்லை. பார்க்ல இருக்கரவா உக்காசுண்டு இருக்கும் பொஷிஷனை வெச்சே கண்டு பிடிச்சுடலாம். ரோட்லேந்து பாத்தேள்னா பார்க்ல இருக்கும் சிமெண்ட் சார்ல ஜோடிகள் கலகலனு சிரிச்சு பேசிண்டு இருந்தா அஞ்சரை மணினு அர்த்தம். ஆறு மணினா பையன் பொண்ணோட கையை புடுச்சுண்டு ஜோசியம் சொல்லிண்டு இருப்பான். ஒருத்தர் மடில ஒருத்தர் தலை வெச்சு தாசுண்டாச்சுன்னா ஆறறை மணி ஆயாச்சுனு அர்த்தம். ‘அதுக்கப்புறம்! அதுக்கப்புறம்!’னு ஏழு மணியை பாக்கர்த்துக்கு எல்லாரும் நாக்கை சப்பு கொட்டாதீங்கோ! ஏன்னா ஏழு மணிக்கு அந்த ஜோடி கிளம்பி போய் அடுத்த ஜோடி வந்துடும். "ஹே தக்குடு! இதை எல்லாம் எதுக்கு நீ பாத்துண்டு இருந்தாய்?"னு சிரிக்காதீங்கோ! எதிர்காலத்துல பொதுஅறிவு சம்பந்தமா எழுதனுமேங்கர கடமை உணர்ச்சிதான் காரணம். இதை விட சுவாரசியமான விஷயம் என்னன்னா, ஏகப்பட்ட பேர் அந்த சமயம் பார்க்ல அரை டவுசரை போட்டுண்டு கைவீச்சும் கால்வீச்சுமா வாக்கிங் பண்ணிண்டு இருப்பா. எதுவுமே நடக்காத மாதிரி வளையவரும் மத்திய மந்திரிகள் மாதிரி இதை கண்டுக்கவே மாட்டா.

மால்ல போய் நின்னுண்டு வேடிக்கை பாக்கர்து ஒரு நல்ல பொழுதுபோக்கு! அப்போ அங்க போய் ஒன்னுமே வாங்கமாட்டேளா?னு தானே கேக்கறேள்.எனக்கு வேண்டிய சாமான்செட்டு எதுவுமே அங்க கிட்டாது. நம்ப சாமான்செட்டெல்லாம் கல்லிடை காஸ்மோபொலிடன்ல மட்டும் தான் கிட்டும். பத்து ரூபா சாமானை ஐனூறு ரூபாய் குடுத்து லூசுதான் வாங்கும். ஒரு ரூபாயை ஒரு ரூபாயா பாக்கக் கூடாது, அதுக்குள்ள 20 ஆரஞ்சு மிட்டாய் இருக்குங்கற ஓர்மை வேணும்னு என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரனும் நானும் அடிக்கடி சின்னவயசுலையே சொல்லிப்போம். சப்பாத்தி பிகர்கள் & பிகர்களோட மண்டகப்படி உபயதாரர்(அதான்பா பாய் ஃப்ரண்ட்)அடிக்கும் லூட்டி காமெடியா இருக்கும். அந்த பிகர் “ஏ சாய்யே! ஓ சாய்யே!”னு கண்ணுக்கு தெரியர எல்லா வஸ்துவையும் வாங்கி தரசொல்லும். பிகரை கூட்டிண்டு வந்த மாக்கானும் சிரிக்கர மாதிரியே முகத்தை வெச்சுண்டு மனசுக்குள் கதறி அழுதுண்டே வாங்கி குடுப்பான். சில ஜோடிகளை பாத்தாக்க பையன் நல்ல வாட்டசாட்டமா கடோத்கஜன் மாதிரி இருப்பான், ஆனா அந்த பிகர் "என்னை தூக்கி விடு! எங்க அக்காளை ஏத்தி வுடு!"னு சொல்லும்படியா இருப்பா.

அதென்னவோ இந்த பொண்கொழந்தேளுக்கு கரடி பொம்மையை பாத்தாக்க ஏன் தான் இப்படி ஒரு பைத்தியமோ. ஒருவேளை அவாளோட அப்பா மாதிரியே இருக்கர்தால இருக்குமோ? “சோஓஓஓஒ ச்வீட்ட்ட்ட்ட்ட்ட்!”னு சொல்லிண்டு அதை கட்டிபுடிக்கர அழகை பாக்கனுமே! பேசாம கரடியா பொறந்துருந்தா ஜென்ம சாபல்யம் கிடைச்சுருக்கும்!னு அதை வாங்கிகுடுக்கும் பையன்கள் பரிதாபமா முழிப்பான். கரடி வாங்கமுடியாட்டியும் ஒரு நாகுட்டி பொம்மையாவது வாங்காம விடமாட்டா. அனேகமா எல்லா பைத்தியங்களும் இப்போ குங்க் ஃபூ பாண்டா கரடி பொம்மைக்கு shift ஆகி இருக்கும்னு நினைக்கறேன்.



பர்ர்ர்ர்ர்ர்கர்....;)

அங்க வியாபாரம் பண்ணும் பர்க்கர் பிசா பக்கத்துல எல்லாம் தலை வெச்சு கூட படுக்கமாட்டோம். நாலு பன்-னை ஒன்னு மேல ஒன்னு அடுக்கி வச்சு அதை ஒரே கடில கடிக்கர்துக்கு ஒவ்வொருத்தரும் வாயை பொளப்பா பாருங்கோ!!! பகவானே! வாயா இல்லைனா கொல்லம் ரயில்ல வரும் மலை குகையா!னு நமக்கு சந்தேகமா இருக்கும். இதே மாதிரி எப்ப பாத்தாலும் வாயை பொளந்துண்டு இருந்தாக்க ராமாயணத்துல வரும் கபந்தன் மாதிரி வாய் ஆயிடாதோ?னு எங்க அண்ணா கிட்ட சந்தேகம் கேப்பேன். பர்க்கர்,பிசா எல்லாம் வெள்ளக்காராளோட தேசத்துல உள்ள சீதோஷணத்தை மனசுல வெச்சுண்டு ஸ்ருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்கள். நம்ப ஊர்ல அடிக்கர வெயிலுக்கும் மழைக்கும் ஏத்த மாதிரியான இட்லி தோசை தான் நமக்கு சரியா இருக்கும். ஒரு விஷயம் கவனிச்சேளோ? நம்ப ஊர்ல இருக்கும் சமத்துகள் எல்லாம் பிசா,பர்க்கருக்கு ஆளா பறக்கர்து. கனடால இருக்கர சிலபேருக்கு இட்லி மாவு பொங்கலையே!னு கவலை பிடுங்கி திண்கர்து. ஹம்ம்ம்ம்ம்ம்! என்ன பண்ணமுடியும். அவாஅவா பண்ணின கர்மா....:))



பஸ்ல வரும் பராசக்தி!!

எல்லா கூத்தையும் பாத்துட்டு மாலுக்கு போய் திரும்பி வரும் போது பஸ்ல வருவோம். இந்த ஊர்ல பொம்ணாட்டி கண்டக்டர்கள் ஜாஸ்தி. பாரதி கண்ட புதுமை பெண்களா நம்ப கண்ணுக்கு அவா தெரிவா. கூட்டமா இருந்தா தாண்டி வந்து டிக்கெட் வாங்கமாட்டானு நினைச்சா நாம தான் ஏமாறுவோம். எப்பேர்பட்ட கூட்டமா இருந்தலும் நடுல புகுந்து வந்துடுவா. மரியாதை தெரியாத மெட்ராஸ்ல இருக்கறவா பேசற மாதிரி நீ! வா! போ!னு ஒருமைல பேசினா கர்னாடகாகாரா நம்ப கடவா பல்லை பேத்துடுவா. நம்ப ஊர்ல இருக்கர மாதிரியே பொம்ணாட்டிகளுக்கு தனியா 10 சீட் உண்டு. அது போக மிச்சம் உள்ள சீட்லையும் அவா பாட்டுக்கு வந்து உக்காச்சுப்பா. உங்களுக்கு அன்னிக்கி யோகம் நன்னா இருந்தா ஆரஞ்சு கலர் டீசார்ட் போட்ட ஒரு மார்டன் டிரெஸ் மகாலெட்சுமி உங்க பக்கத்துல வந்து உக்காசுண்டு எம்.பி த்ரீ ப்ளேயர்ல அழகா தலையை ஆட்டி ஹிந்தி பாட்டு கேட்டுண்டு இருக்கும். நாம ஏவிஎம் சரவணன் அப்பச்சி மாதிரி சமத்தா கையை கட்டிண்டு உக்காசுண்டு இருக்கனும்.

கண்டக்டர்கள் அடிக்கடி ‘உளக்கடே பன்ட்ரிரி'னு சொல்லிண்டே இருப்பா. ஆரம்பத்துல அதுக்கு “பன்னி மாதிரி வழியை அடச்சுண்டு நிக்காதீங்கோ!”னு சொல்லறார்தா அடிச்சு விட்ட எங்க அண்ணாவோட கப்சாவை அப்படியே நம்பிட்டேன். கன்னடம் தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அதோட அர்த்தம் பிடிபட்டது. சேஞ்ச் கொட்ரிரீ!னு ஆம்பளை கண்டக்டர் & பொம்ணாட்டி கண்டக்டர் இரண்டு பேர்கிட்டயும் மரியாதையா நாம கேக்கலாம். முதல் தடவை நான் ஒரு பொம்ணாட்டி கண்டக்டர் கிட்ட திடீர்னு “சேஞ்ச் கொட்ரிரீ!”னு கன்னடத்துல பேசி சில்லரை வாங்கினதும் எங்க அண்ணா பயந்து போயிட்டான். அதுலேந்து என்னோட சேர்ந்து உக்காசுக்க மாட்டான். நாலு சீட்டு தள்ளியே தான் நிப்பான். என்னைக்காவது ஒரு நாள் ஒரு பொம்ணாட்டி கண்டக்டர் கையாள ‘திருசாத்து’ வாங்குவேன்னு எப்போதும் ஆவலா எதிர்பாத்துண்டு இருப்பான். பகவானோட புண்ணியத்துல கடைசி வரைக்கும் அந்த மாதிரி ஆகலை.

பெண்களூர் வாழ்க்கைல மறக்க முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அதுல பல விஷயங்கள் ரயில் பெட்டியின் ஜன்னலோரத்துல எதிர்பக்கமா வேகமா ஓடும் மரங்கள் மாதிரி மறந்து போயிடர்து. ஆனா சில விஷயங்கள் மட்டும் ஜன்னலை தாண்டி முகத்துல தெளிச்ச மழைச்சாரலா நினைவுல நிக்கர்து........

நினைவுகள் உள்ள வரை கனவுகள் தொடரும்..........

Thursday, July 7, 2011

பண்டாரம்

லோக விவஹாரங்களில் சிக்கித் தவிக்கும் ஆத்மா கூட ஒரு வகையில் பண்டாரம் தான். பரமாத்மாவின் பரபிரம்ம ஸ்வரூபத்தில் லயிப்பதற்கு பண்டாரமான ஜீவாத்மா பாடாய்படுகிறது.... இப்படி எல்லாம் எழுதர்துக்கு நான் என்ன மாதங்கி மேடமா?..:P தலைப்பு & ஆரம்ப வரியை பாத்துட்டு பயந்து ஓடிராதீங்கோ! அகிலா மாமி சொல்ற மாதிரி "கெட்டிக்காரன் பொய் எட்டு நாளைக்கு" . வரப் போகும் மேட்டர் என்னவோ உங்களுக்கு பழக்கமான விஷயம் தான் எப்போதும் பழைய ஹார்லிக்ஸ் பாட்டில்ல வரும் அம்மாவோட நார்தங்காய் ஊறுகாய் சில தடவை காம்ப்ளான் பாட்டில்ல போட்டு வருதோல்லியோ! அதை மாதிரி வெச்சுக்கோங்கோளேன்!..:)

ஒருத்தர் பார்த்த உடனே சிரிச்ச முகத்தோட செளக்கியமா இருக்கேளா? ஆத்துல எல்லாரும் செளக்கியம் தானே?னு வாஞ்சையோட ஜாரிச்சாக்க அவா திருனெல்வேலிக்காரா!னு ரொம்ப ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். இன்னிக்கும் எங்க தெருலேந்து பெங்களூருக்கு கல்யாணம் ஆகி போன ஒரு மாமி ஊருக்கு வந்தாக்க, தெரு முக்குலேந்து அவாத்தை கார் தொடர்துக்குள்ள சுமாரா ஒரு 50 செளக்கியமாவது கேட்டுட்டு தான் ஆத்துக்குள்ள காலடி எடுத்து வைப்பா. மிச்சம் மீதி இருக்கும் ‘செளக்கியமா?’ சாயங்காலம் தொடரும். செளக்கியமா கேக்கும் போது அவாளோட வலது உள்ளங்கை ஆசிர்வாத அபினயத்துல இருக்கும். "செளக்கியமா மாமி!"னு அவாளுக்கு ஒரு பட்டப்பெயரே உண்டு. இந்த மாதிரியான மாமிகளால் சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்டதாலையோ என்னமோ எனக்கும் இந்த வியாதி உண்டு. “ஹே! வாட்ஸ் அஃப்?”னு கேட்டாலும் “நான் செளக்கியம்! உங்காத்துல எல்லாரும் செளக்கியமா!” தான் பதிலா டைப் அடிப்பேன்.

இப்ப இருக்கர ஜோலில வந்து சேரும் போது என்னொட உயரதிகாரி ஒரு தமிழர்னு தெரிஞ்ச போது கொஞ்சம் ஆசுவாசமா இருந்தது. இருந்தாலும் என்னோட தலைவர் ஆபிஸ்ல வெச்சு தமிழ்ல பேச மாட்டார். வெள்ளக்காரன் பேசக்கூடிய 'அக்மார்க்' இங்கிலீஷ்ல தான் சம்சாரிப்பார். அபூர்வமா சில சமயம் தமிழ்ல ரெண்டு வார்த்தை பேசுவார். அதுவும் வில்லங்கமா தான் இருக்கும். கரெக்டா சுச்சா போகர இடத்துல வெச்சுதான் “டிபன் சாப்பிட்டையா தக்குடு?”னு செந்தில் மாதிரி ஜாரிப்பார். ஒரு தடவை அவர் கேக்கர்துக்கு முன்னாடி முந்திண்டு நான் "இன்னிக்கி என்ன டிபன்?"னு கேட்டதுக்கு அப்புறம் அவர் கேக்கர்து கிடையாது. மத்தவா யார் கிட்டையும் “செளக்கியமா?” இங்க்லீஷ்ல கூட கேக்க முடியாது. அரபில கேகர்துக்கு நேக்கு அரபி தெரியாது. இருந்தாலும் நித்யம் ஒரு ஷேக்கும் நானும் (அசடுவழிஞ்சுண்டு) சிரிச்சுப்போம். அதுக்கு அப்புறம் நம்ப சூடான் சிங்கத்துகிட்ட கேட்டு அரபில "செளக்கியமா இருக்கேளா? உங்காளோட ஆத்துக்காரி(கள்)& குழந்தேள் எல்லாம் செளக்கியமா?"னு அவா பாஷைல கேக்கர்துக்கு பழகிண்டேன்.

ஒரு நாள் திடீர்னு தலைவர் என்கிட்ட வந்து “நாளைக்கு மத்தியானம் நம்பாத்துல சாப்பிட வந்துடு தக்குடு! அக்கா சொல்ல சொன்னா!”னு சொன்னார். “ஓஓஓ! அதுக்கென்ன பேஷா வந்துடலாமே!”னு சொல்லிட்டு அடுத்த நாள் அவாளுக்கும் எனக்கும் தெரிஞ்ச இன்னொரு பாச்சிலரையும் சேர்ந்து அழைச்சுண்டு ஒரு டஜன் வாழைப்பழத்தோட அவாத்துக்கு போனேன். அவாத்துக்கு போனதுக்கு அப்புறம் தான் தெரியர்து அவரோட தங்கமணி திருனெல்வேலி ஜில்லா!னு. அப்புறம் என்ன, 'அக்க்க்க்க்க்க்கா!' 'தம்ம்ம்ம்ம்ம்ம்பி!'னு ஒரே பாசமழைதான் போங்கோ! டென்னிஸ் மாட்ச் அம்பையர் மாதிரி என்னோட தலைவர் எங்க ரெண்டு பேர் முகத்தையும் மாத்தி மாத்தி பாத்துண்டு இருந்தார். வெறும் நெத்தியா சாப்பிட உக்கார வேண்டாமே!னு கால் அலம்பிட்டு நெத்தி நிறைய விபூதி இட்டுண்டு சாப்பிட ஹாலுக்கு போனா "அச்சு அசல் அதே மாதிரி இருக்கான் கோந்தை"னு அந்த அக்கா தனக்கு தானெ சொல்லிண்டா. ஒருவழியா திருனெல்வேலி கதை எல்லாம் பேசி முடிச்சுட்டு சாப்பிட போன இடத்துல நாலடி நீளத்துக்கு ஒரு இலை எனக்கு போட்டு இருந்தா அந்த அக்கா, இலையோட ஒரு பக்கத்துல 2 பேர் உக்காசுண்டு அடுத்த பக்கத்துல சாப்பிடர மாதிரி அகலம். எங்க ஊர் அக்காக்களுக்கே அபாரமான சகோதர பாசம் உண்டு.

அவாளொட ரங்கமணிக்கு டிபன் இலை மாதிரி ஒன்னை போட்டுட்டு "இலையவா சாப்பிடபோறேள்!"னு சொல்லி அவரோட வாயை அடச்சுட்டா. பால் பாயாசம் சகிதமா பிரமாதமான சாப்பாடு. எல்லாம் நல்லபடியா போயிண்டு இருக்கும் போது எங்க தலைவர் “பட்டூ! திடீர்னு எதுக்கு தக்குடுவை சாப்பிட கூப்பிட்டை?”னு கேட்டார். அந்த சமயம் நான் தக்காளி ரசத்துக்குள்ள முங்கி குளிச்சுண்டு இருந்தேன். “என்னோட ஜாதகத்துல கேது திசை நடக்கர்தாம், அதனால இந்த மாசம் உடம்பை படுத்தும்!னு ஆத்து ஜோசியர் சொல்லி இருக்கார். பரிஹாரமா திருவண்ணாமைல இருக்கும் ரெண்டு பண்டாரத்துக்கு என்னோட கையாலையே அன்னதானம் பண்ணனுமாம், திடீர்னு பண்டாரத்துக்கு எங்க போகர்து?னு கவலையா இருந்தது அப்போ தான் தக்குடு ஞாபகம் வந்தது!”னு அக்கா முகமலர்ச்சியோட சொல்லவும் என்னோட கூட வந்த புள்ளையாண்டானுக்கு புரை ஏறிடுத்து. அதோட சாப்பாட்டை நிப்பாட்டிட்டு "அப்ப நான் தான் அந்த ரெண்டாவது பண்டாரமா?"னு கேக்கர மாதிரி என்னை பாத்து முறைச்சான். பார்வையாலையே பால்பாயாசத்தை காட்டி " "நன்ன்ன்னா இருப்பை! நான் இன்னும் பாயாசம் விட்டுக்கலை, காரியத்தை கெடுத்துடாதே!"னு சொன்னேன். “எக்கேடும் கெட்டு போ!”னு சொல்லர மாதிரி என்னை பாத்துட்டு அவன் அமைதி ஆயிட்டான். அந்த "அச்சு அசல்" டயலாக்கோட தாத்பர்யம் எனக்கு அப்பதான் விளங்கித்து.



என்னைப்போல் ஒருவர்..:)

நான் கொஞ்சம் நிதானமாதான் சாப்பிடுவேன். முதல் பந்தில உக்காசுண்டா இரண்டாம் பந்தில உள்ளவா கூடதான் தச்சுமம்மு சாப்பிட முடியும். நிதானமா நான் சாப்பிட்டு முடிக்கர நேரம் அந்த அக்கா “நோக்கு திரட்டிபால் பிடிக்குமா?”னு கேட்டுண்டே வந்து இலைல போட்டா. “நன்னா கேட்டேள்! சாப்பாட்டுக்கு பதில் அதையே போட்டு இருந்தா கூட சாப்பிடுவேன்!”னு சொல்லிண்டே பெருமாள் கோவில் தீர்த்தம் மாதிரி மூனு தடவை வாங்கி நொசுக்கிண்டு இருக்கும் போது என்னோட தலைவர் கை அலம்பிட்டு வந்தார். “பட்டூ! எனக்கு திரட்டிபாலை கண்ணுலையே காட்டலையேடீ!”னு பரிதாபமா என்னை பாத்துண்டே கேட்டார். அக்கா அதை காதுலையே வாங்கிக்கலை. "கேது திசைக்கு 48 நாளைக்கு ஒரு பண்டாரத்துக்கு பால்கோவா கிண்டி குடுக்கனும்னு ஒரு பரிஹாரம் உண்டே உங்காத்து ஜோசியருக்கு தெரியாதா அக்கா?"னு கேட்டுபாக்க ஒரு நப்பாசை இருந்தாலும் என்னோட உயரதிகாரிக்கு பயந்து வாயை திறக்கலை.

அந்த அக்காவுக்கு நல்ல கைராசி! எந்த நேரத்துல "ஸ்டார்ட் மியூசிக்" பண்ணினாளோ, இப்ப வாராவாரம் அன்னதானம் நடக்கர்து. கருங்குளம் மாமாவாத்துல மாமி ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாத்தர அன்னிக்கு எல்லாம் எனக்கும் சாப்பாடு போடரா, என்ன விஷயம்னே புரியமாட்டேங்கர்து. "என்ன்னமோடா கோந்தை! ஆஞ்சனேயர் பூஜைல நீ வந்து சாப்பிட்டா மனசுக்கு ஒரு திருப்தி!"னு அந்த மாமி சொல்லிண்டு இருக்கும் போதே "ரெண்டே ரெண்டு வடை போடுங்கோ!"னு சொல்லி நைசா அஞ்சாவது வடைக்கு அடி போட்டுருவேன்..:) "கோந்தை!அடுத்த வாரம் சாப்பிட வந்துடு கேட்டையா!”னு பாலக்காடு மாமி ஒரு பக்கம் போன் பண்ண, போதாகுறைக்கு இப்ப கல்லிடைலேந்து வேற ஒரு அக்கா லிஸ்ட்ல சேர்ந்துருக்கா. எப்பிடியோ போங்கோ! பகவான் படி அளக்கறார்!..:)

போன வருஷம் சதுர்த்திக்கு பெங்களூர்லேந்து கல்லிடை வந்த “செளக்கியமா மாமி”யோட கார்ல ஓடிண்டு இருந்த பாட்டை கேட்ட உடனே தெருல எல்லாருக்கும் சிரிப்பு வந்துடுத்து. நித்யஷ்ரீ மஹாதேவனோட கனீர் குரல்ல "செளக்கியமா? கண்ணே செளக்கியமா?"னு பாடித்துன்னா எல்லாரும் சிரிக்க மாட்டாளா!!!

Thursday, June 30, 2011

மூன்றாம் பிறை...

சிலபல ஆபிஸ் பஞ்சாயத்துகளால மூனு வாரம் எழுத முடியலை. அதுக்கு தக்குடுவை எல்லாரும் மன்னிச்சுக்கோங்கோ! கோந்தைக்கு என்ன ஆச்சு? என்ன ஆச்சு?னு மெயில் மேல மெயில் போட்டு ஜாரிச்ச அண்ணா/அக்காமார்களுக்கு அன்பு வணக்கங்கள்!ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி என்னோட தோஸ்த் கோபிகா ஒரு தொடர் பதிவு எழுத சொல்லி இருந்தாங்க. ஒரு வழியா இப்ப எழுதலாம்னு நினைக்கிறேன்.



மீண்டும் JKB....:)

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

i) குழந்தைகளோட அல்லது குழந்தை மாதிரி மனசு உள்ள நல்ல மனுஷா கூட சகவாசம்.
ii) எந்த விதமான பற்றும் இல்லாம, தெரியாத ஊர்ல தெரியாத மனுஷாளுக்கு நடுல பரதேசியாட்டமா நாலு முழ வேஷ்டி & துண்டுடன் மெளன நிலைல நடமாடர்து.
iii) அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாத இடத்துல உக்காசுண்டு கீச்சீடும் பறவை சத்தத்துக்கு நடுவில் ஆத்தங்கரைல இருக்கும் ஜலத்தை வேடிக்கை பார்ப்பது

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

i) சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசக்கூடிய பேச்சு.
ii) அழியக்கூடிய அற்பமான விஷயங்களில் அதிகம் நாட்டம் உள்ள படிச்ச மேதாவிகளோட சவகாசம்.
iii) அடுத்தவாளோட மனசு நோகும் படியான வார்த்தைகள்

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

i) டாக்டர் போடும் ஊசி (இதுனாலையே எங்க ஊர் டாக்டர் முத்துக்குமரனை 'குத்து'குமரன்னு தான் சொல்லுவேன்).
ii) நான் கார் ஓட்டும் போது ரோட்ல வரும் பெரிய கார்கள்.
iii) என்னோட கணக்கு வாத்தியாரரின் கோபம் (போன ஜென்மத்துல புரோட்டா கடைல மாஸ்டரா இருந்துருப்பார் போலருக்கு)


4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

i) +2-ல என்னோட கணக்கு வாத்தியார் நடத்தின கணக்கு.
ii) வெள்ளக்காரன் ஏன் கக்கா போனா ஜலத்தை உபயோகப்படுத்தாம பேப்பர்ல துடைச்சுக்கரான். (சிரிக்காதீங்கோ! நிஜமாவே புரியலை).
iii) பொம்ணாட்டிகள் ஏன் “அப்புறம் ஒன்னுமில்லை ஒன்னுமில்லை!”னு சொல்லிட்டு அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் பேசிண்டு இருக்கா!

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

i) ஒரு ஆரஞ்சு மிட்டாய்
ii) ஒட்டகத்துக்கு ஷாம்பூ வாங்கின கணக்கு எழுதின ஒரு பைல்
iii) அழி லப்பரோட கூடின ஒரு பென்சில்

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

i) கிரேஸிமோஹனின் வசனம்,டாம் & ஜெர்ரி, Mr. Bean
ii) அண்ணாபிள்ளையோட பேச்சு & சேட்டை
iii) கத்திரிக்காய்க்கு இங்கிலிஷ்ல என்னது?னு கேட்ட டீச்சர் கிட்ட, 'K A T H R I K A I'-நு பதில் சொன்ன என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரன்.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

i) கோபிகாவோட கேள்விக்கு பதில் எழுதிண்டு இருக்கேன்.
ii) ராக்ஸ்ஸ்ஸ் அக்காவோட தேங்கா சாத போட்டோவை பாத்து பொறாமை பட்டுண்டு இருக்கேன்.
iii) வெள்ளிக்கிழமை கருங்குளம் மாமா & கல்லிடை மாமியாத்து ஓசி சாப்பாட்டுல என்ன ஸ்வீட் போடபோறாளோ?னு யோசனையும் ஓடிண்டு இருக்கு

8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

i)நல்ல பிரகாசமான அறிவு இருந்தும் பண வசதி இல்லாததால படிக்கர்துக்கு கஷ்டப்படும் 4 குழந்தேளுக்கு உபகாரமா எதாவது செய்யனும்.
ii)குருனாதரிடம் வாங்கிண்ட உம்மாச்சி மந்த்ரம் இரண்டையும் அக்ஷரலக்ஷம் நிஷ்சிந்தையா ஜபம் பண்ணனும்.
iii)ஒரு புஸ்தகமாவது எழுதனும்

9) உங்களால் செய்யமுடியக்கூடிய மூன்று விஷயங்கள்?

i)நீங்க எவ்ளோ தூரத்துல இருந்தாலும் உங்காத்து ஹாலுக்கே வந்து நீங்க சந்தோஷிக்கும் படியா உங்க கூட செளஜன்யமா பேசர மாதிரியான உணர்வு வரும்படியா எழுத முடியும்.
ii)இனிமே ஒன்னுமே செய்ய முடியாது!னு தலைல கை வெச்சு உக்காந்த ஒரு ஆளை கூட படிப்படியான தேற்றுதல் மூலமா வாழ்க்கைல மறுபடியும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கும் படியா பேசவும் எழுதவும் முடியும்.
iii)எந்த இடத்துக்கு போனாலும் அந்த இடத்துல சந்தோஷமான ஒரு சூழலை உண்டாக்க முடியும். (“இன்னும் கொஞ்சம் பாயாசம் விடுங்கோ அக்கா!”னு கூச்சம் இல்லாம கேட்டு வாங்கி சாப்பிட தெரியும்)..:)

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

i) கர்ண கொடூரமா இருக்கும்படியான வரிகள் & இசை உள்ள பாடல்கள், ஸ்வரம் சரி இல்லாத மந்திரங்கள்
ii) தன்னம்பிக்கையை தளர்த்தும் படியான பேச்சுகள்
iii) நமக்காக ஒரு துரும்பை கூட நகர்தாத மனிதர்கள் செய்யும் தேவை இல்லாத உபதேசங்கள்

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

i) வயலின் வாசிக்கனும் ரொம்ப ஆசை உண்டு. கண்ணை உருட்டிண்டு & தலையை ஆட்டிண்டு மிருதங்கம் வாசிக்கவும் ஆசை...;)
ii) அரபி மொழி பேச & எழுத ஆசை.
iii) பொறுமை

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

i) ஸ்வீட் பத்தி தனியா கேள்வி இல்லாததால திரட்டிப்பாலை முதல்ல சொல்லிக்கறேன். (ஸ்வீட்லேந்து ஆரம்பிக்கனுமோல்லியோ!)
ii) அம்மா கையால செய்யும் அடை-அவியல்,புளிஉப்புமா,பொரிச்ச குழம்பு,தாளகம் & etc etc
iii) நல்ல பசில இருக்கும் போது பரிமாறும் தச்சு மம்மு + வத்தக் குழம்பு + வடு மாங்காய் (பக்கத்துல உக்காசுண்டு யாராவது தென்னையோலை விசிறியால அழகா வீசிவிட்டா இன்னும் செளக்கியமா இருக்கும்)

13) அடிக்கடி முனுமுனுக்கும் மூன்று பாடல்கள்?

i) எம் எஸ் அம்மாவோட ‘குறையொன்றுமில்லை’, மஹாராஜபுரத்தோட ‘ஜகதானந்தகாரகா’, ரஞ்ஜனி & காயத்ரியோட ‘என்ன சொல்லி அழைத்தால்’
ii) சுப்பிரமணியபுரத்துலேந்து "கண்கள் இரண்டால்"
iii) ஹே ஹேனதோ யாசுதே! - குரு(ஹிந்தி)ல வரும் அருமையான கஸல்

14) பிடித்த மூன்று படங்கள்?

i) திருவிளையாடல், எங்கவீட்டு பிள்ளை, நாயகன்
ii) லவுட் ஸ்பீக்கர்(மலையாளம்),மங்காரு மழே(கன்னடம்), மஹதீரா(தெலுங்கு)
iii) தாரே ஜமீன் பர், கிஸ்னா, Jeb we met (ஹிந்தி)

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூனு விஷயம்?

i)திருப்தியான மனசு
ii)மனசை வருடும் அருமையான சங்கீதம்
iii)கல்லிடை, தாமிரபரணியின் நினைவுகள் & ரசிப்புத் தன்மை உள்ள நண்பர்கள்

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

i) மன்னார்குடி மைனர் - ஒவ்வொரு வார்த்தைலையும் சுவாரசியம் சேர்க்க கூடிய சுவாரசிய திலகமான இவர் எழுதினார்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். அற்புதமான ‘கலா’ரசிகர் இவர்(இந்த இடத்தில கலா என்பது யாரையும் குறிப்பிடுவது அல்ல என்பதை ரசிகமணி அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்)..:)

ii) சிங்கப்பூர் ஜெய்ஷ்ரீ அக்கா - எங்க ஊர் பள்ளிக்கூட கெமிஸ்ட்ரி லாபுக்கு அப்புறம் அக்காவோட அடுக்களைதான் பல ஆய்வுகள் கண்ட ஒரு இடம். எப்போதும் “குங்குமபூ போண்டா செய்வது எப்பிடி?”னு எழுதும் இவர் “குங்க் ஃபூ பாண்டா” படத்துக்கு விமர்சனம் எழுதர மாதிரி நினைச்சுண்டு இந்த பதிவை நம்ப அக்கா எழுதனும்னு கேட்டுக்கறேன்.அக்காவோட கோஷ்டில இருக்கரவா எல்லாரும் இதை தொடர்ந்து எழுத ஆரம்பிச்சா 2 வருஷத்துக்கு எழுத ஆட்கள் வெச்சுருக்கா. (அடுத்த எலெக்ஷன்ல 'இலுப்பகரண்டி' சின்னத்தோட சிங்கப்பூர்ல நிக்க போகர்தா கேள்விப்பட்டேன்!..:) Based on your international readers, you can write it in english.

iii) மாதங்கி - 'ஓலை குடிசை! ஒற்றை ஜன்னல்!திடீரென்று மின்னல்!'னு கவிதை எழுதி எல்லாரோட கழுத்தை அறுக்கும் ஆட்களுக்கு நடுல இவா எழுதும் எழுத்து நடையே ஒரு கவிதை மாதிரி இருக்கும். ‘மேம் சாஃப்!’னு ரொம்ப மரியாதையா இவாளை கூப்பிடுவேன். "மேம் சாஃப்! இந்த பதிவை உங்க ஸ்டைல்ல நீங்க எழுதி அதை நாங்க எல்லாரும் படிக்கனும்

Thursday, June 2, 2011

அம்மா புடவை

மொத்தமே 4 அடி உயரம் கூட இருக்கமாட்டா அந்த மாமி. சதாசர்வகாலமும் மடிசார் புடவைதான் கட்டிண்டு இருப்பா. கொஞ்சம் கூட ஒரு படாடோபமே இல்லாதைக்கி ரெண்டு கைலயும் ஒரே ஒரு வளையல் தான் போட்டுண்டு இருப்பா. 60 வயசுனு சொல்லர்துக்கு இல்லாம 3 பேர் பாக்கர ஆத்து வேலையெல்லாம் தனி ஆளாவே பாத்துடுவா. அவாத்து மாமா வாத்தியார்(புரோகிதர்). அவாத்துல சட்னி எல்லாம் அரைச்சதுக்கு அப்புறம் தாளிச்சு கொட்டர்துக்கு கவலையே படவேண்டாம் கடுகையும் உளுத்தம்பருப்பையும் மாமாவோட முகத்துல போட்டாலே வெடிச்சுடும், அந்த அளவுக்கு கோபமே வராத மனுஷர். 6 பிள்ளைகள் 5 பொண்கொழந்தேள் 13 பேரன்கள் 12 பேத்திகள் ஆறு கொள்ளுப்பேரன்/பேத்திகள்னு பெரிய சம்சாரி.

இவ்ளோ பேர் இருந்தாலும் அந்த மாமி யார்கிட்டயும் அளவுக்கு அதிகமா பாசம் வைக்கமாட்டா. எல்லாரும் அவாளுக்கு ஒன்னுதான். அந்த மாமி பேசர்தை எல்லாம் பாத்தாக்க எதோ யோகி மாதிரி நமக்கு தோணும். விஷக்காய்ச்சலே வந்தாலும் அசராம 4.30 மணிக்கு வாசல் தெளிப்பா. அவாளோட மனோ வலிமை அசாத்யமானது. எனக்கு அந்த மாமியை ரொம்ப பிடிக்கும். என்னோட அம்மா மாதிரி உரிமையா அவாள்ட பேசுவேன். துண்டை கட்டிண்டு உடம்பு பூரா விபூதி இட்டுண்டு பண்டாரம் மாதிரி இருக்கும் என்னை பாத்தாக்க அந்த மாமிக்கும் சிரிப்பு சிரிப்பா வரும். ஆவணியாவட்டம் அன்னிக்கி வாத்யார் மாமாவை நமஸ்காரம் பண்ண போனா இந்த மாமி வாத்யார் மாமாவோட பையை நோண்டி ஒரு பத்து ரூபாயை அவருக்கு தெரியாம எட்டா மடிச்சு பழத்தோட அடில வச்சு ஆசையா தருவா. அவாத்து மாமா பூஜை பண்ணும் கோவிலுக்கு கொழக்கட்டை பண்ணினா தனியா 2 எடுத்து வெச்சுருந்து அவாத்தை நான் தாண்டி போகும் போது "இங்க வாடா கோந்தை"னு கூப்பிட்டு தருவா. அந்த மாமி ரொம்ப பிரமாதமான ருசியோட பண்ணியும் இருக்கமாட்டா, ஆனாலும் ஆசையோட அவா தரும் போது வாங்கிக்கவே ரொம்ப ஆசையா இருக்கும்.

சில வஸ்துக்களை நாம அதோட விலையை வெச்சோ,ருசியை வெச்சோ அளக்க முடியாது. அந்த வகைல அந்த மாமி பாசத்தோட தரும் மாத்ரு பாவம் தான் எனக்கு ரொம்ப ரொம்ப பெரிசா தெரியும். கல்யாணம் ஆகி ரொம்ப வருஷமா சந்தான பாக்கியம் இல்லாத ஒரு அம்மாவுக்கு ஒரு குழந்தையை பார்க்கும்போது அவாளோட கண்ணுல ஒரு அழகான வாத்சல்யம் தெரியும். வெறும் குங்குமம் மட்டுமே இட்டுக்கும் இந்த மாமியோட வதனத்திலும் அந்த பூரிப்பை உணர்ந்ததுண்டு.

அம்மா - எல்லா சாமானையும் எடுத்து வச்சுண்டையாடா? சோப்புடப்பா எடுத்துவைச்சையா? பெங்களூர்ல எப்போதுமே தனுப்பா இருக்குமாமே, ஸ்வட்டரும் ஷாலும் வெச்சுக்கோடா கோந்தை!

அப்பா - எப்போதும் குளுந்து விரைச்சாக்க பனியன் ஜட்டி எல்லாம் எப்பிடி காயும்? கூட ரெண்டு பனியன் ஜட்டி வெச்சுக்கோடா! பெரியவன் கொஞ்சம் கோவக்காரன், அவன் எதாவது சொன்னாக்க, சரி!னு கேளு! அவனை படுத்தாதைக்கி இரு! துட்டை பாத்து செலவழி!

அம்மா - சின்னவன்கிட்ட கோபப்படாதே! சத்தம் போடாதே!னு பெரியன்ட சொல்லி இருக்கேன் நீயும் சமத்தா இரு கோந்தை! துட்டை பத்தி பாக்காதே! வேளாவேளைக்கு ஒழுங்கா வயிறு நிறைய சாப்பிடு.

அப்பா - பட்டாசாலைக்கு போய் உம்புள்ளை என்னத்தையோ தூக்கிண்டு வருது பாருடீ!

மேல சொன்ன சம்பாஷனை எல்லாம் அடியேன் பெங்களூர் கிளம்பும் போது அம்மாப்பாட்ட இருந்து வந்தது. சம்பாஷனைக்கு நடுல கர்மஸ்ரத்தையா நான் தூக்கிண்டு வந்து பை உள்ள வெச்சுண்டது எங்க அம்மாவோட பழைய காட்டன் புடவை. இத்தனை வயசுக்கு அப்புறம் புடவைல தாச்சுண்டா பெங்களூர்ல இருக்கரவா எல்லாம் கேலி பண்ணமாட்டாளா கோந்தை?னு கேட்டுண்டு இருக்கும் போது அவளோட கண்ணுல ஜலம் வர ஆரம்பிச்சாச்சு. (வலது கண்ணுக்கு தெரியாம இடது கண்ணால எங்கையாவது கண்ணீர் விட முடியுமோ? அவள் கண் லவலேசம் மாறும் போதே நேக்கும் தெரிஞ்சாச்சு..)

ராத்ரி தூங்கர்துக்கு அம்மாவோட புடவையை விடவும் செளகர்யமான ஒரு வஸ்து லோகத்துலேயே கிடையாது. ராத்ரி படுக்கைல படுத்துண்டு அம்மா புடவையை மோந்து பாத்த உடனே ரம்யமா ஒரு தூக்கம் வரும் பாருங்கோ! அதுக்கு ஈடுஇணை கிடையாது. நன்னா பெருக்கி மொழுகின மண்வாசனை வீசும் கொல்லம் செங்கல் தரையும் அம்மா புடவையும் இருந்தாக்கா தூக்கம் வராதவாளுக்கு கூட வரும். அதனால தான் பெங்களூருக்கும் அதை தூக்கிண்டு போனேன். அதுல தாச்சுண்டா அம்மா மடில படுத்துக்கர மாதிரி ஒரு திருப்தி கிட்டும்.

போன வருஷம் தோஹாவுக்கு வந்த புதுசுல தனியா ஒரு வீட்ல தூக்கி போட்டுட்டா. பெரிய சூரப்புலியாட்டமா தலையை ரெண்டு பக்கமும் ஆட்டி அந்த வீட்டை ஒத்துண்டாச்சு ஆனா பேச்சுதுணைக்கு ஒருத்தரும் இல்லாம, சண்டை போட்டு செல்லமா 4 அடி குடுக்க அண்ணாவும் இல்லாம கோட்டி பிடிச்ச மாதிரி ஆயிடுத்து. அங்க இருந்த டிவியை நோண்டி பாத்ததுல ஒரே ஒரு ஹிந்தி சேனல் வந்தது. ராத்ரி சாப்டுட்டு படம் பார்க்க உக்காசுண்டா 'தாரே சமீன் பர்' அமீர்கான் நடிச்ச படம் போட்டான். அதுல ஒரு புள்ளையாண்டான் நம்பளை மாதிரியே படிக்காம ஊரை சுத்திண்டு தத்தாரியா வந்ததை பாத்த உடனே "என் இனமடா நீ"னு சொல்லிட்டு சுவாரசியமா பார்க ஆரம்பிச்சா அந்த புள்ளையாண்டனும் சரியான அம்மா கோண்டு!..:)



அம்மா கோண்டு....:)

ஆஹா இவன் நம்பளை அழவிட்டுருவான் போலருக்கே!னு நினைச்சுண்டு இருக்கும் போதே அந்த செல்லபையனை ஹாஸ்டல்ல விட்டுட்டு போகர்துக்கு மனசே இல்லாம அந்த அம்மா கார்ல போக, இந்த பக்கம் ஹாஸ்டல்ல அவாளோட செல்லக்குட்டி விக்கி விக்கி அழ, ஒரு பாட்டை வேற போட எல்லாத்தையும் பாத்த நம்ப மனசுல இடி! கண்ணுல மழை! ஓஓஓஓஓ!னு அழ ஆரம்பிச்சவன் தான் . அது ஏன் எல்லா சோதனையும் கடைசில பிறக்கும் கொழந்தேளுக்கே வருது?னு நினைச்சு நினைச்சு ஒரே அழுகை. ஒரு மாதிரி அந்த பையன் அவனோட அம்மாட்ட சேந்ததுக்கு அப்புறம் தான் மனசு சமாதானம் ஆச்சு.

மூனு நாள் முன்னாடி அம்மாட்ட போன்ல பேசிண்டு இருக்கும் போது, “வாத்யாராத்து மாமி போய்ட்டா கோந்தை!”னு எங்க அம்மா சொன்னது மட்டும் தான் காதுல விழுந்தது. கம்ப்யூட்டர் திரைல யாரோ ஜலத்தை வாரி விட்ட மாதிரி இருந்தது. என்ன??னு யோசிக்கும் போதே என்னோட கன்னத்துல தாரை தாரையா சில துளிகள் தரையை நோக்கி ஓடிண்டு இருக்கு. அப்புறம் என்ன? மூக்கு சிந்தி நிம்மதியா அழர்துக்கு ‘நின்னையே கதி என்று’ பாத்ரூமை தஞ்சம் அடைஞ்சேன்.

எல்லாம் இந்த அம்மா புடவையால வந்தது........................

Thursday, May 26, 2011

நேயர் விருப்பம்

லோகத்துல நல்லதுக்கே காலம் இல்லை கேட்டேளா? நாம பாட்டுக்கு பாணிபூரி,குலோப்ஜாமூன் அப்பிடின்னு எல்லா மனுஷாளுக்கும் பிரயோஜப்படும் படியான விஷயங்களை சொல்லிண்டு "சிவ சிவா ராம ராமா!"னு யார் வம்புக்கும் போகாம காலத்தை ஓட்டினாலும் தக்குடு வாயை பிடுங்கர்தே குறி!னு இருக்கரவாளை என்னனு சொல்லமுடியும்!! அவாளை சொல்லியும் குத்தம் இல்லை. எப்ப பாத்தாலும் பருப்பு கஞ்சியையும் சுட்ட அப்பளாமுமே சாப்டுண்டு இருக்கமுடியுமா? கொஞ்சம் ' நறுக்கு'னு காரம் சாரம் எல்லாம் வேண்டிதான் இருக்கு.

பல மாசமாவே "சமைத்துப் பார்", "சாப்பிட்டும் பார்", So & So அடுக்களை,Mrs. மடப்பள்ளி இந்த மாதிரி எந்த ப்ளாக் பக்கமும் தலை வெச்சே படுக்கர்து கிடையாது. So & So எதுக்கு போட்டு இருக்கை?னு யாரும் கேக்காதீங்கோ! நாம அஹஸ்மார்த்தா எதாவது பேர் போட்டா கூட அந்த பேர்ல ஒரு சமையல் ப்ளாக் இருக்க வாய்ப்புகள் அதிகம். இந்த ‘பாங்க்’ மாமி, ‘நைஜீரியா’ மாமி எல்லாரோட வாய்க்கும் நாம தான் அவல்.

சமையல் ப்ளாக் எழுதரவாளோட முக்கியமான பிரச்சனையே அவாளோட பதிவுக்கு போடும் போட்டோ தான். எல்லாரோட ஆத்துக்காரரும் பானோசானிக் / சோனி எல்லாம் வாங்கி தரமாட்டா, அதனால அங்க இங்கேர்ந்துதான் போட்டோவை ஆட்டையை போட்டு போஸ்ட் போட வேண்டி இருக்கு. இதுல சிலபல பஞ்சாயத்து எல்லாம் வந்துடர்து. பஞ்சாயத்துகளை தவிர்க்க சில யோசனைகளை பார்கலாம்.

‘தேங்காய் சாதம்’னு போஸ்ட் போடும் போது தேங்காயோட படம் எல்லாரும் போடத்தான் செய்வா, அதுக்காக “இந்த தேங்காயோட படம் என்னோட ப்ளாக்ல நான் போட்டது!”னு குழந்தையாட்டமா குத்தம் சொல்லகூடாது. போஸ்ட் போடறவாளும் கூகுளாண்டவர் கிட்ட ‘தேங்காய்’னு சர்ச்ச் குடுத்தாக்க பொள்ளாச்சில விளைஞ்ச தேங்காய்ல தொடங்கி பிலிபைன்ஸ்ல மூக்கு சப்பையா இருக்கும் ஒரு மாமா கைல வச்சுண்டு இருக்கும் தேங்காய் வரைக்கும் குடுக்கர்து. சமயத்துல பிள்ளையார் கோவில் வாசல்ல உடைச்ச சிதறு தேங்காய் படம் கூட வருது! அதுல எதாவது ஒன்னை எடுத்து போட்டுக்கோங்கோ!

இந்த டம்பளர் வசந்தபவனில் ஆட்டய போட்டது'னு பேர் எழுதி வெச்ச மாதிரி இருக்கும் போட்டோலையும் கை வைக்காம இருங்கோ. இதுல என்ன காமெடின்னா ஆத்து மனுஷாளை போட்டோ எடுத்து மூஞ்சி புஸ்தகத்துல போட்டாலும் சிலபேரோட போட்டோல "J@#i’s கிச்சன்" வாட்டர்மார்க் இல்லாம இருக்காது. “இந்த அக்கா எதுக்கு எல்லா போட்டோவையும் அடுக்களைல வெச்சே எடுத்துண்டு இருக்கா?”னு ரொம்ப நாளைக்கு புரியாம முழிச்சுண்டு இருந்தேன்.

பதார்தத்துக்கு பேர் குடுக்கும் போதும் எதாவது வித்தியாச குடுத்தாக்க பிரச்சனை வராது. பிள்ளையார் கோவில் விஷேஷத்துல ராத்ரி நோட்டீஸ் போர்டுல அதிகாலை "கஜ கிண்டி ஹோமம்"னு எழுதி வெச்சுட்டோம். காத்தால 5 மணிக்கு கோவில் வாசல்ல வழக்கம் போல ஒரே மடிசார் & பஞ்சகச்ச கூட்டம். கணபதி ஹோமம்தான் நடந்துண்டு இருந்தது. கணபதி ஹோமத்துக்கு யானை எல்லாம் வந்து இருந்தது. கூட்டத்துல இருந்த ஒரு மாமி மெதுவா “கஜகிண்டி ஹோமம்னு போட்ருக்கேளே?”னு இழுக்கவும், “ஆந்திரால எல்லாம் கணபதி ஹோமத்தை இப்படி தான் சொல்லுவா!”னு முகத்தை பாவமா வெச்சுண்டு சொன்ன போது கொஞ்சமா நம்பினாலும் அதுக்கு அப்புறம் கொஞ்சூண்டு ஒரு நமட்டு சிரிப்பு சிரிச்சு ‘போஸ்டாபிஸ்’ ஹரிகுட்டி காரியத்தையே கெடுத்துட்டான்.

பிலிப்ஸ் ரேடியோல திருனெல்வேலி ஸ்டேஷன்லேந்து அவசரமா இலங்கை ஸ்டேஷன் திருப்பின மாதிரி செல்லமா மன்னி நம்ப காதை முறுக்கிட்டா. ரெண்டு நாளைக்கு காது மடல்ல செம வலி. நிற்க! நீங்களும். இந்த மாதிரி ‘பிசிபேளாபாத்’ பத்தின போஸ்ட் போட்டாலும் ‘பகாளாபாத்'னு தலைப்பு குடுத்தாக்க கொஞ்சம் வித்தியாசமா இருக்குமோ இல்லையோ? அதுக்கு அப்புறம் கூகுள்ல ‘பகாளாபாத்’னு யாராவது தேடினா கூட நம்பளோடுது தான் முதல்ல வந்து நிக்கும். எதிகாலத்துல ‘பகாளாபாத்’னு போஸ்ட் போடும்போது பெயர் உபயம் தக்குடு!னு போடவேண்டிய அவசியம் ஏதும் இல்லை..:)



Mr. கஜராஜன்

எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா இந்த மாதிரி எந்த பொல்லாப்புலையும் மாட்டிக்கவே மாட்டா. “கார்திகை பொரிக்கு பாகு செலுத்துவது எப்பிடி”, “பிள்ளையார் கொழுக்கட்டைக்கும் பிடிச்ச கொழுக்கட்டைக்கும் என்ன வித்தியாசம்?” இந்த மாதிரி பதிவா போட்டு எல்லாருக்கும் ப்ரண்ட் ஆயிட்டாங்க. நோம்பு அடையை பத்தி சொல்லவே இல்லையே?னு யாரும் கேக்காதீங்கோ!..:)) சிங்கபூர்ல இருக்கும் இந்த ‘நோம்பு அடை’ அக்காவோட வீடு ‘சரவணபவன்’ ஹோட்டல் மாதிரி எப்ப பாத்தாலும் விருந்தாளிகளால ரொம்பி வழியர்தா அங்க உள்ள லோக்கல் நியூஸ் பேப்பர்ல வந்து இருக்கு. இப்ப எல்லாம் சிங்கபூருக்கு போறவா அந்த ஊர்ல இருக்கும் சிங்கத்துக்கு பக்கத்துல நின்னுண்டு போட்டோ எடுக்கராளோ இல்லையோ நேரா இவாத்து காலிங் பெல்லை அடிச்சு ஒரு வேளை சாப்பாடாவது இவாத்துல சாப்பிடாம வரர்து கிடையாது. யாராவது கெஸ்ட் வரர்தை பாத்தாலே இவாளோட ரங்கமணி(அதான் நம்ப அத்திம்பேர்) "மேடத்துக்கு ஒரு ரவாஆஆஆ தோசை"னு ராகமா சொல்லி நக்கல் சிரிப்பு சிரிச்சுட்டு போறாராம்.

இன்னொரு அக்காவோட பானகம் போஸ்டை பத்தி ஒன்னுமே சொல்லலையே தக்குடு?னு ‘பாங்க்’ மாமி வம்புக்கு இழுத்தாலும் நான் எதுவும் வாயை திறக்க மாட்டேன்பா! பானகம் போஸ்டை எல்லாம் நக்கல் அடிச்சாக்க ராமர் உம்மாச்சி ராத்ரி ஸ்வப்னதுல வந்து கண்ணை குத்துவார்! அவாளோட ப்ளாக்ல அனேகமா கோகுலாஷ்டமிக்கு 'சுக்கும் சக்கரை' போஸ்ட் வந்தாலும் வரலாம், வந்தாக்க ஒரு வார்தை எனக்கும் சொல்லுங்கோ!..:)

குறிப்பு - இந்த போஸ்ட் சும்மா 'லூலூவாயிக்கு'தான். அதனால பத்தினி தெய்வங்கள் யாரும் தக்குடுவை திட்டி தீர்க்காதீங்கோ! அப்பிடியே திட்டினாலும் சம்பந்தப்பட்டவா மட்டும் திட்டுங்கோ,”ஒரு பிள்ளைபூச்சி சிக்கியிருக்கான் சும்மா இருந்தா வாடி!”னு அடிக்கர்துக்கு உங்க ப்ரண்டையும் போன் போட்டு கூட்டிண்டு வராதீங்கோ!...:) எல்லாரோட அர்சனையையும் நைஜீரியா மாமிக்கு அனுப்பி வைங்கோ!...:)

Thursday, May 19, 2011

வேலை தேடும் வேலை

Part 1 படிங்கோ முதல்ல

நாளும் பொழுதும் வேகம் வேகமா ஓடித்தே தவிர உருப்படியான வேலை எதுவும் கிடைக்கலை. நானும் எத்தனை நாளைக்கு தான் பாணி பூரி சாப்பிடரவாளோட வாயை பாத்துண்டு பொழுதை கழிக்கர்து? சொல்லி வச்ச மாதிரி எல்லா கம்பெனிலையும் எனக்கு தெரியாத கேள்வியை மட்டுமே கேட்டுண்டு இருந்தா. (இருக்காதா பின்ன, ஊர்ல உள்ள மாமா/மாமிகளோட எல்லா சாபத்தையும் மொத்த கான்ட்ராக்ட் எடுத்து வெச்சுருக்கேனே!) ஒரு கட்டத்துல ராத்ரி தூக்கத்துல கூட “ஐ யம் தக்குடு! தின்னவேலி வெட்டி ஆபிசர், லுக்கிங் பார் ய குட் ஜாப்! மேனஜர் போஸ்ட் ஆல்ஸோ ஓக்கே!”னு பொலம்ப ஆரம்பிச்சுட்டேன்.

அம்மன் கோவில் கொடைவிழா பத்திரிக்கை மாதிரி என்னோட பயோடேட்டா இல்லாத கம்பேனியே இல்லைனு ஆயிடுத்து. ரகுமான் மியூஜிக் போட்டு குடுத்த ஒரு செல்போன் கம்பேனில சிம் கார்ட் விற்கும் வேலைக்கு கூட உள்ள நுழைஞ்சு பாத்தேன், கன்னடம் தெரியலைனு சொல்லி ' நோ' சொல்லிட்டா! லூசாடா நீ!னு எங்க அண்ணாச்சி காய்ச்சி எடுத்துட்டான். 'தாட்பூட் தஞ்சாவூர்!'னு கோவம் வந்தா கத்துவானே தவிர என் மேல அவனுக்கு பாசம் ஜாஸ்தி.

ஐயப்ப படி பூஜைல "ஒன்னாம் திருப்படி சரணம் பொன்னயப்பா"னு பாடர மாதிரி எங்க போனாலும் மொதல்ல ஒரு எழுத்து தேர்வு அப்புறம் 3 - 4 ரவுண்ட் நேர்முகம்/மறைமுகம் எல்லாம் வரும். ரெண்டு மாசமா படை எடுக்கர்தால உள்ள நுழைஞ்ச உடனேயே சரணம் போட ஆரம்பிச்சுருவேன். என்னிக்கும் இல்லாத திருநாளா ஒரு கம்பேனில எனக்கு தெரிஞ்ச கேள்வியை மட்டும் பிரிண்ட் பண்ணி குடுத்த மாதிரி ஒரு டெஸ்ட் குடுத்தா. "அகரமுதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி! டைண் டைண் டைண்!"னு எனக்கு பாடனும் போல இருந்தது. சீக்கரமே டெஸ்ட் எழுதி முடிச்சதால அங்க இருந்த ஹெச் ஆர் பிகர் ஏன் லைட்டா லிப்ஸ்டிக் அடிச்சுண்டு இருக்கா?னு ரொம்ப தீவிரமா யோசிச்சுண்டு இருந்தேன். ‘கிக் பாக்ஸிங்’ மாதிரி எல்லா ரவுண்டையும் முடிச்சு ஒரு பெரிய தலையோட பேசர்துக்கு போயாச்சு. பாக்கர்துக்கு நன்னா சிரிச்ச முகமா இருந்தார். என்னமோ காதலை சொல்ல தவிக்கும் காதலர்கள் மாதிரி ஹலோ! ஹவ் ஆர் யூ? எல்லாமே ரெண்டு பேரும் ஒரே சமயத்துல சொல்லிண்டோம். இது கதைக்கு ஆகாது!னு முடிவு பண்ணி, நீங்க முதல்ல சொல்லுங்கோ!னு கூலா சொல்லிட்டேன். அவருக்கு பயங்கர ஆச்சரியம் & சிரிப்பு.



பெரியதலை & தக்குடு...:)

உக்காச்சுண்டு இருத்த சேர்ல ஆடிண்டே நெஞ்சுல கை வெச்சுண்டு நர்சரி ஸ்கூல் குழந்தையாட்டமா அழகா சொன்னார். சிரிச்சமுகத்தோட டை கட்டின அந்த எஜமான் சொன்னதை எல்லாம் கை கட்டி உக்காசுண்டு இருந்த நான் ரசிச்சு கேட்டேன். அவர் சொன்னதுலேந்து அந்த ஆபிஸ்ல சுமாரா ஒரு 500 பேருக்கு அவர்தான் நாட்டாமைனு புரிஞ்சது. அவர் எல்லாம் சொல்லி முடிச்சதுக்கு அப்புறம் "ஹை! ஐ யம் சஞ்சய்ராமசாமி!" ஸ்டைல்ல நான் பேச ஆரம்பிச்சேன். எனக்கும் என்னோட தோஸ்த் ப்ளவுஸ் சங்கரனுக்கும் பொம்ணாட்டிகளுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கு ‘கைனகாலஜிஸ்ட்’னு கூட சொல்ல தெரியாது. என்னமோ ‘லேடிஸ்’ டைலர் மாதிரி ‘லேடிஸ்’ டாக்டர்னு தான் சொல்லுவோம் அந்த அளவுக்கு இங்கிலீபீஷ்ல பெரிய அப்பாடேக்கரா இருந்தாலும் அதை எல்லாம் வெளில காமிச்சுக்காம நம்ப விபா அக்கா மாதிரி "ஜப்பான்ல ஜாக்கிஜான் கூப்டாங்க, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்டாங்க!"னு அள்ளிவிட்டேன். எல்லாத்தையும் கேட்டுட்டு "செம்மொழி குறித்து தனிகுழு விவாதிக்கும்! கனிமொழி பற்றி பொதுகுழு முடிவெடுக்கும்!"னு நம்ப தாத்தா ஸ்டைல்ல எதோ சொல்லிட்டு ஹெச் ஆர் பிகரை பார்த்து கைகாட்டிட்டு அந்த பெரிய தலை போய்டார்.

காத்தால இருந்த அதே ஹெச் ஆரும் நானும் ஒரு கண்ணாடி கூண்டு மாதிரி இருந்த ரூம்ல சம்சாரிக்க ஆரம்பிச்சோம். இந்த தடவை ஒழுங்கா லிப்ஸ்டிக் அடிச்சுண்டு வந்துருந்தா என்பதை தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொல்ல தக்குடு கடமைபட்டுள்ளான். கூண்டுக்கு வெளில வைரமுத்து இருந்திருந்தா "கைவளை குலுங்கும் கண்மணியே! உனைகண்ணாடி கூண்டுக்குள் அடைத்தது யாரடி? யூகங்கள் பல செய்தும் பூகம்பம் மட்டும் எஞ்சுகிறது என் நெஞ்சில்"......னு பாட ஆரம்பிச்சு இருப்பார். இட்லி மாமியா இருந்தா ஒரு 'உ' கவிதையை அவுத்து விட்டுருப்பா..:)



கோட் போட்ட சப்பாத்தி...:)


“நீங்க என்ன எதிர்பாக்கறேள்?”னு கல்யாணப் பொண்ணோட தாய்மாமா மாதிரி அவங்க தான் ஆரம்பிச்சாங்க. “மூனு வேளை சாப்பாடு போட்டு முப்பது ரூபா தாங்கோ மூனு நாள் கண் முழிச்சு ஆணி பிடுங்கறேன்!”னு மனசுக்குள்ள சொல்லிண்டேன். அப்புறம் அவாளே ஒரு நல்ல தொகையை சம்பளமா சொல்லி தக்குடு வாழ்க்கைல விளக்கேத்தி வைச்சா. ‘செவ்வாய் புதன் வடக்க சூலம்’ அதனால வியாழக்கிழமைலேந்து வேலைக்கு வரட்டுமா?னு கேட்டேன் “பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது”(சோனா மிலேகா, புதவார் நயி மிலேகா) எல்லாம் அவாத்துல சொல்லிக்கமாட்டா போலருக்கு அதனால அவாளும் " வியாழக்கிழமை வாங்கோளேன்!!"னு சொல்லி வழியனுப்பி வைச்சா. வெளில வந்ததுக்கு அப்புறம் தான் நம்ப ஆபிஸ் எந்த இடத்துல அமைஞ்சுருக்குனு எனக்கு விளங்கித்து. வடக்கே இமயமலையும், தெற்கே இந்திய பெருங்கடலும்னு பள்ளிகூடத்துல நாம படிச்ச மாதிரி வலது பக்கம் சென்ட்ரல் மாலும், இடது பக்கம் கருடா மாலும்,ஒரு நடை எடுத்து வெச்சா பிரிகேட் ரோடு & கமர்ஷியல் தெரு என கலகலப்பான சூழ்நிலையோடு ரம்மியம் கொஞ்சும் அழகான ஒரு பிருந்தாவனம்னு சொன்னா அது மிகையாகாது.

இந்த மால் எல்லாமே புத்தி இல்லாம செலவழிக்கும் வடக்கத்தி சப்பாத்திகளை கணக்கு பண்ணி கட்டிவெச்சுருக்கும் மாயலோகம். 50 பைசாவுக்கு ‘வைராவி அண்ணா’ டெண்ட் கொட்டாய்ல அச்சுமுருக்கு வாங்கி சாப்பிட்ட நம்ப மாதிரி அரைடிக்கெட்டுகளுக்கு எல்லாம் ஒத்து/ நாயனம் எதுவுமே வராது. கரும்பு ஜூஸுக்கு 40 ரூபா குடுக்கர்துக்கு தக்குடு என்ன அகர்வாலாத்து சமத்துகுடமா? இருந்தாலும் பொழுது போகாதபோதெல்லாம் அங்க போய் எத்தனை சமத்துகள் காசை கரியாக்கிண்டு இருக்கு?னு பாத்துட்டு வருவோம். சுருக்கமா சொன்னா ‘சமைத்துப்பார்’ புஸ்தகம் மாதிரி தான், எந்த புஸ்தகத்துலையும் சமைச்சுட்டு சாப்பிடு!னு போடவே மாட்டான். லதாஜி நன்னா பாத்துக்கோங்கோ! இங்க சமையல் ப்ளாக் பத்தி தக்குடு எதுவும் சொல்லலை...:)

ஆபீஸுக்கு உள்ள எப்பிடி இருந்தது தெரியுமோ????.......

(கனவுகள் வளரும்)

Thursday, May 5, 2011

பாணி பூரி

சின்ன வயசுலேந்தே எனக்கு பெங்களூர்னா ஒரு இனம் புரியாத ஈர்ப்பு உண்டு. “யாம் அறிந்த மொழிகளிலே”னு கடையத்து மாப்பிள்ளை சொன்ன மாதிரி நமக்கு தெரிஞ்ச நகரங்கள்ல பெங்களூர் மாதிரி எதுவும் வராது. “தக்குடு! அது பெண்களூர்ங்கர்துனால தானே நோக்கு பிடிக்கும்?”னு சில மன்னார்குடிகாரா வலையை விரிக்க முயற்சி பண்ணலாம். ஆனா அது மட்டுமே காரணம் கிடையாது. எங்க தெருல கோடை விடுமுறைக்கு வரும் பெங்களூர்காராளோட "அங்க அப்பிடியே பாலும் தேனுமா கரைபுரண்டு ஓடர்து, குடிக்கர்துக்குதான் ஆளே இல்லை" மாதிரியான சம்பாஷனைகள் கூட ஒரு காரணமா இருக்கலாம்.

நான் போய் பெங்களூர்ல இறங்கின அன்னிக்கி வியாழக்கிழமை அதனால வெள்ளிக்கிழமை சாயங்காலம்தான் "வெளில போய் 4 கடை கன்னி எல்லாம் காட்டரேன்"னு சொல்லி எங்க அண்ணா கூட்டிண்டு போனான். நம்ப ஊர் மாதிரி வெள்ளிக்கிழமை இங்க கோவிலுக்கு எல்லா பயலும் படை எடுக்க மாட்டான். ஆனா சனிக்கிழமை எந்த கோவிலுக்கு உள்ளேயும் நுழைய கூட முடியாது. மூனு முக்கு தாண்டினா ஒரு அனுமார்கோவில் கட்டாயமா இருக்கும். சனிக்கிழமை அன்னிக்கி இந்த அனுமார் எல்லாம் சூப்பர்மேன்,ஸ்பைடர்மேன்,எக்ஸ்மேன் அலங்காரங்களில் 100 - 120 பூ மாலையுடன் காட்சி தருவார். எல்லா கோவில்லையும் பிரசாதம் கை நிறைய தருவா. சனிக்கிழமை சாயங்காலம் ஆனா நானும் எங்க அண்ணாவும் நாலு கோவிலுக்காவது கட்டாயமா போயிட்டு வருவோம்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை கோவில் எல்லாம் ஈ ஆடும். ஸ்வாமியும் எதோ விசு படத்துல வரும் கதானாயகி மாதிரி ஒரே ஒரு முழம் மல்லி பூவும் ஒத்தை ரோஜாவும் வெச்சுண்டு ரொம்ப விஷ்ராந்தியா இருப்பார். எல்லா கூட்டமும் மால் பக்கத்துலையும், தியேட்டர்லையும் கும்மி அடிச்சுண்டு இருக்கும். ‘திருச்சந்தூரில் கடலோரத்தில்’ பாட்டுல வரும் டி.எம்.ஸ் & சீர்காழி மாதிரி நானும் எங்க அண்ணாச்சியும் மால்ல போய் நிப்போம். சப்பாத்தி பிகர்கள் கும்பலா கடந்து போகும் போதெல்லாம் " “நம்பியவர் வந்தாஆஆஆர்! நெஞ்சுருகி நின்றாஆஆஆர்"னு எல்லாம் முகத்துல உணர்ச்சி பெருக்கை காட்டமாட்டோம்.



நானும் அண்ணாச்சியும்....:)

எஸ்கலேட்டர் பக்கத்துல நாம நின்னுன்டு இருக்கும் போது 40 படி இருக்கும் ஒரு மாடிப்படில ஒரு கொய்யாப்பழ மூட்டையோட ஏறிண்டு இருக்கும் போது 35வது படில வச்சு மூட்டை கைலேந்து தவறி மூட்டையோட வாய் திறந்து மூட்டைல உள்ளது எல்லாம் வெளில வந்து படில குதிச்சு வந்த மாதிரி எதாவது ஒரு அமீர்கான் படத்தை பாத்துட்டு 4வது ப்ளோர்லேந்து திடீர்னு ஒரு சப்பாத்தி கோஷ்டி அச்சாஹை! குச்சாஹை!னு பேசிண்டே நம்மை தாண்டி போகும். அதுக்கு எல்லாம் நம்ப மனசு கிலேசமடையக்கூடாது.

ஆரம்பத்துல இவாளோட கன்னட பாஷை ஒரு எழவும் புரியாம இரட்டை மரியாதையோட(திருதிருனு தான் எப்போதும் சொல்றோமே) முழிச்சுண்டு இருந்தேன், தொடர்ந்து முயற்சி பண்ணினா நாமளும் நன்னா கன்னடா பேசலாம். ஒரு சமயத்துல கோவில்ல ரெண்டு பொம்ணாட்டிகளுக்கு நடுல நடந்த சண்டையை தீர்த்து வச்சு மத்யஸ்தம் பேசர அளவுக்கு கன்னட மொழில புலமை பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சுடுத்துன்னா பாத்துக்கோங்கோளேன்.( என்னோட ஜாதக ராசி, அங்க போயும் பொம்ணாட்டிகள் சண்டைலதான் மத்யஸ்தம்). தமிழ் நாட்டுலேந்து இங்க பொழப்புக்கு வந்த பலபேர் என்னவோ பொறந்ததுலேந்தே பாணிப்பூரி, பேல்பூரியோட ரெட்டைபுள்ளையா ஒட்டி பொறந்த மாதிரி பொலந்துகட்டுவா. சில பேர் காணாதுகண்ட மாதிரி மத்தியானம் 12 மணிக்கு எல்லாம் 'லபக் லபக்'னு பேல்பூரியை வி@#ரோ ஆபிஸ் வாசல்ல நொசிக்கிட்டு அப்புறம் ரெஸ்ட்ரூம்ல போய் ஒரு மணி நேரமா 'டமால் டுமீல்'னு வெடிவழிபாடு பண்ணிண்டு இருப்பா( 'I am in the middle of one important meeting'-நு ரெஸ்ட்ரூம்லேந்து செல் போன்ல பேசி காமெடி பண்ணுவா).

பாணிபூரி சாப்பிடர்துக்கு எல்லாம் ஒரு சம்பிரதாயம் இருக்கு. தத்தியாட்டமா ஒரு தட்டுல 6 பாணிபூரியை வெச்சு ஒரு கிண்ணத்துல ஜீரக ஜலத்தை வெச்சுண்டு சாப்டரவாளை பாத்தாக்க எனக்கு சிப்பு சிப்பா வரும். கோரமங்கலால(பெண்களூர்ல ரம்மியமான ஒரு பகுதியோட பேர்) நாங்க இருந்த போது ராத்ரி 8.30க்கு மேல ஒரு வடக்கத்திக்காரர் அவரோட பாணிபூரி கூடையை கொண்டு வந்து அவுப்பார். கிருஷ்ணரை சுத்தி நிக்கும் கோபிகாஸ்த்ரீகள் மாதிரி முக்கால் காலுக்கு டவுசர் போட்ட சப்பாத்தி பிகர்கள் சுத்தி நிக்க ஆரம்பிச்சுடுவா. “ஒரு குலாப்ஜாமூனே பாணிபூரி சாப்பிடுகிறதே! அடடா ஆச்சரியகுறி”னு சொல்லும்படியா ஆசை ஆசையா சாப்டுவா. காய்ஞ்ச இலைல பண்ணின ஒரு தொண்னையை எல்லார் கைலயும் குடுத்துட்டு ஜல்ஜீரால முக்கி முக்கி வட்டமா எல்லாருக்கும் "அம்மாவுக்கு ஒரு வாய்! அப்பாவுக்கு ஒரு வாய்! கோந்தைக்கு ஒரு வாய்!" மாதிரி தொண்னைல போடுவார். அந்த குட்டி பூரிக்கு உள்ள இருக்கும் ஜலம் வெளில சிந்தர்துக்கு முன்னாடி நம்ப வாய்ல போட்டுக்கனும். நானும் எங்க அண்ணாவும் எதிர் எதிர் திக்குல இரண்டு சப்பாத்திக்கு நடுல போய் ஜோதில ஐக்கியமாயிடுவோம். நாம கொஞ்சம் சாப்பிட தெரியாம சிரமபட்டாக்க “ஏ நயி! ஓ நயி!”னு சப்பாத்தி பொண்ணு அழகா நமக்கு சொல்லி தரும். அது சொல்லி தர அழகுக்கே ஒவ்வொரு தடவையும் எங்களுக்கு எப்பிடி சாப்பிடனும்ங்கர விஷயம் மறந்து போயிடும்னா பாத்துக்கோங்கோ...:)



சப்பாத்திகள் சொக்கி விழும் வஸ்து....:)

பந்தில ‘கிள்ளு’ பாயாசம் விட்டு தயிர் பச்சடி வரர்துக்குள்ள வழிச்சு நக்கும் நம்மோட அசகாய வேகத்தை எல்லாம் பாணிப்பூரி சாப்பிடும் போது காட்டினாக்க ஜல்ஜீரா மூக்குல போய் பொரையேரிண்டு அப்புறம் ‘அம்மா நினைச்சுக்கரா! ஆட்டுகுட்டி நினைச்சுக்கர்து!’னு சொல்லிண்டு நமக்கு நாமே தலையை தட்டிக்க வேண்டி இருக்கும். அதுக்காக மோர் விடும் போது ரசத்துக்கு சாதம் கேக்கும் படியா மெதுவா சாப்டாக்கா பாணிபூரிகாரருக்கு கணக்கு ஒலம்பிடும். இயல்பான வேகத்துல சாப்பிடனும் (தெரியலைனா பக்கத்துல நொசுக்கும் குலாப்ஜாமூனை பாத்துக்கலாம்).

கனவுகள் தொடரும்....:)