Friday, December 31, 2010

என் இனிய தமிழ் மக்களே...




ஹலோ, வெயிட்டீஸ்! வெயிட்டீஸ்! இந்த சிங்கப்பூர் சமையல் மாமிகள் மாதிரி
Puliyodarai is tempting di!
mouth watering di!
draging my legs to your blog di!நு கமண்ட் போட்டுட்டு ஓடாம ஒழுங்கா தீர்த்தத்துக்கு கீழ க்ளிக் பண்ணினா ஒரு விஷயம் கிட்டும்!...:)



இங்கதான் க்ளிக் பண்ணனும்.


Wish you a happy new year

Thursday, December 23, 2010

ப்ளவுஸ் சங்கரன்

கல்லிடைல இருந்த தோழர்கள் படைல ‘ப்ளவுஸ்’ சங்கரன் ரொம்ப முக்கியமான ஒரு ஆள். அவனோட பேரை பாத்துட்டு அவன் எதோ பாக்யராஜ் ரசிகனோ?னு எல்லாம் தப்பா நினைக்க வேண்டாம். மன்மோஹன்சிங் மாதிரியே அவனும் பரமசாது. நார்த்தங்காய் ஊறுகாய் பாட்டில்ல இருக்கும் கரண்டியும் கடைசி துண்டு ஊறுகாயும் மாதிரி நானும் சங்கரனும் அவ்ளோ தோஸ்த். எங்களுக்குள்ள பல ஒத்துமை உண்டு. ரெண்டு பேருக்குமே கணக்கு சுத்தமா வராது, பொங்கல் புளியோதரை குடுக்காத சமயங்கள்லையும் கோவில்லயே தான் எப்போதும் குடி இருப்போம். இந்த மாதிரி சொல்லிண்டே போகலாம். பரிட்சை சமயத்துல ரெண்டு பேரும் பக்கத்துல தான் உக்காருவோம். பரிட்சை எல்லாம் ஒரு டீம் Effort-டோட எதிர்கொள்ளனும்ங்கர நல்ல எண்ணம் தான் அதுக்கு காரணம்.



நண்பேன்ன்ன்டா!!....:)

அவனோட அம்மா மாதிரி வேகமா யாராலையும் தெலுங்கு பேசவே முடியாது, அதுலையும் பக்கத்து தெருல அவாளோட யாரோ ஒரு தூரத்து சொந்தம், நெருங்கின சொந்தம் கூட கிடையாது, ஆச்சாளுக்கு பீச்சா மதினிக்கு உடப்பொறந்தா தான். அந்த மாமியும் இந்த மாமியும் தெருல வெச்சு பாத்துட்டா போதும் "அக்கட போயிஸ்தானு! இக்கட போயிஸ்தானு!"னு ஒரே தெலுங்கு மழை தான் அப்புறம். நாக பஞ்சமி!னு ஒரு விஷேஷம் இருக்கர்தே அந்த மாமியாத்துல அஞ்சு விதமான கொழுக்கட்டை, கடலைபருப்பு பாயாசம் சாப்டதுக்கு அப்புறம் தான் தெரியும். கொழுக்கட்டைல தெலுங்காளை அடிச்சுக்கவே முடியாது. எக்ஸ்ட்ரா கொழுக்கட்டைக்கு ஆசை பட்டுண்டு பக்கி மாதிரி "மாமி! ஹேப்பி நாகபஞ்சமி!"னு எல்லாம் சொல்லி(வழிஞ்சி) நின்னது உண்டு.

வெயில் அடிச்சா வயித்து வலி/ தலை வலினு சொல்லி லீவு போடுவான், மழை பெஞ்சுதுன்னா காய்ச்சல்! ஜலதோஷம்!னு சொல்லி லீவு போடுவான். பாவம் அவன் உடம்பு வாக்கும் அப்பிடி தான். இதுல சுவாரசியமான விஷயம் என்னன்னா தலைவர் அதிதீவிர ஆஞ்சனேய பக்தர். தீபாவளிக்கு முந்தின நாள் அவாத்து பட்டாசாலைல அல்வா கிண்டர்துக்கு எல்லா சாமனையும் எடுத்து வெச்சுட்டு பக்கத்தாத்து வரைக்கும் அவனோட அம்மா போயிருந்த சமயம், கொல்லைபக்கம் வழியா 4 குரங்கு உள்ள வந்துடுத்து, காவலுக்கு இருந்த சங்கரன் ஆஞ்சனேயரை பாத்த பக்தி பரவசத்துல இருந்தப்பவே நெய் பாக்கெட்,பொறிகடலை (டப்பாவோட) எடுத்துண்டு போயிடுத்து. திருப்பி வந்து பதறி போய் நின்ன அவன் அம்மா கிட்ட, "அம்மா, ஆஞ்சனேயர் ஒச்சாயினு!ஒச்சாயினு!"னு சொல்ல, கடுப்பான அந்த மாமி இவனை அடி நொறுக்கிட்டா.

சங்கரனுக்கு இங்க்லிபீஸ்ல க்ஷேக்ஸ்பியரோட சித்தி புள்ளை மாதிரி அப்பிடி ஒரு பாண்டித்யம். 5 ஆம் கிளாஸ்ல முதல் தடவையா லீவு லெட்டர் எழுத சொல்லி குடுத்ததுலேந்து எல்லாரும் இங்கிலிபீஸ்லதான் லெட்டர் எழுதனும்னு டீச்சர் சொல்லிட்டாங்க. பாவம் சங்கரன் தான் ரொம்ப கஷ்டப்பட்டான். மாசத்துல ஒழுங்கா 8 நாள் தொடர்ச்சியா அவன் லீவு போடாம ஸ்கூலுக்கு வந்ததா சரித்திரமே கிடையாது. ராமஜெயம் நோட்டு மாதிரி ஒரு குயர் நோட்ல எப்போதும் ஒரு ஸ்டேன்டேட் பார்மெட்ல 10 லெட்டர் எழுதி அவனோட நைனாட்ட கையெழுத்து வாங்கி ரெடியா வெச்சுருப்பான். இந்த அதிரடி உத்தரவுக்கு அப்புறமும் அவன் அதே முறையை தான் பாலோ பண்ணினான். AS i am suffering from feverகு பதிலா suffering from அத்தை பொண்ணு கல்யாணம், As i am suffering from மாமா பையன் உப நயனம்-னு போட்டு பட்டையை கிளப்பிட்டான். இதெல்லாம் விட பெரிய காமெடி am suffering from குலதெய்வம் கோவில் கொடை விழா/னு ஒரு தடவை எழுதி டீச்சரை கலங்கடிச்சுட்டான். அதே மாதிரி எப்போதுமே grand me 3 days leaveநு தான் கேப்பான். “ரொம்ப கிராண்டான கல்யாணம் போலருக்கு!”னு டீச்சரும் தலைல அடிச்சுப்பா.



கவாஸ்கர் தொப்பி!...:)


எங்க தெருலையே ஒரு அண்ணாட்ட மட்டும் தான் நெஜமான கிரிக்கெட் மட்டை உண்டு, மத்தவா கிட்ட எல்லாம் பீமன் கைல இருக்கும் வஸ்து மாதிரி தான் இருக்கும். அந்த அண்ணா கிட்ட ஒரு கவாஸ்கர் தொப்பியும் உண்டு, யாரு பேட்ஸ்மேனுக்கு பின்னாடி நின்னுன்டு கீப்பிங் பண்ணறாளோ அவா மட்டும் தான் அந்த தொப்பி போட்டுக்கலாம். இந்த கூத்துக்காகவே கீப்பிங் பண்ணர்த்துக்கு சுண்டல் வாங்கர்த்துக்கு நிக்கர மாதிரி எல்லாரும் வரிசையா நிப்பா. ‘ரொட்டி சால்னா’ சேகருக்கும் ‘சக்கப்பழம்’ ஹரீஷுக்கும் இந்த விஷயத்துல அடிக்கடி சண்டை வரும். இருந்தாலும் ரொட்டிசால்னா மேல சக்கப்பழத்துக்கு கொஞ்சம் பயம் உண்டு. இந்த மாதிரி இருந்தப்பதான் ஒரு சமயம் பொத்தை(ஈடன் கார்டன் மாதிரி அது ஒரு பெரிய மைதானம்) மாட்ச்ல க்ளவுஸ் (கையுரை) போட்டு கீப்பிங் பண்ணின ஆளை முதல்தடவையா சங்கரன் நேர்ல பாத்தான். அந்த ஆளு சுச்சா போகர்த்துக்கு போன கேப்ல அந்த க்ளவுஸை ஒரு தடவை கைல போட்டுண்டு 2 - 3 ஓவர் கீப்பிங் பண்ணி பாத்துட்டான். சங்கரனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

அடுத்த நாள் நாங்க எல்லாரும் முடுக்கு மூச்சா மாமாவாத்து திண்ணைல உக்காச்சுண்டு பேசிண்டு இருக்கும் போது சங்கரன் தடாலடியா பேச ஆரம்பிச்சான். “நம்ம டீமுக்கு எப்பிடியாவது ஒரு ப்ளவுஸ் வாங்கனும்டா, ஒன்னு வாங்கினா கூட போதும் எல்லாரும் மாத்தி மாத்தி போட்டுக்கலாம்"னு அவன் முடிக்கவும் எங்க எல்லாருக்கும் ஒன்னுமே புரியலை, இருந்தாலும் காட்டிக்காம “ப்ளவுஸ் எல்லாம் ரெடிமேட்ல கிடைக்கர்தா என்ன? அதுவும் போக ஒரே டிசைன் எல்லாருக்கும் பிடிச்சி வரவேண்டாமா”னு அவன் வாயை பிடிங்கினோம். “எங்க வாங்கினாலும் ப்ளவுஸ்ல ஒரே டிசைந்தான் கிடைக்கும் அதுவும் போக ரெடிமேட்லதான் நன்னா இருக்கும்”னு சங்கரன் சளைக்காம பதில் சொன்னான். பசங்க விடாமா "ப்ளவுஸ் போட்டுண்டு தெருல எல்லாம் விளையாட முடியுமாடா? தெருல உள்ள மாமிகள் எல்லாம் சண்டைக்கு வரமாட்டாளோ?"னு கிண்டிவிட்டானுங்க, " இந்த மாமிகளுக்கு வேற ஜோலியே கிடையாது, நாம ப்ளவுஸ் போட்டுண்டு விளையாண்டா அவாளுக்கு என்ன வந்தது? யார் என்ன கேக்கறா?னு நான் பாக்கறேன். நாம பயந்து பயந்து நடுங்கர்துனால தான் மாமிகள் எல்லாம் நம்ப கணக்கு டீச்சர் மாதிரி ரொம்ப பாடாபடுத்திண்டு இருக்கா நான் போட்டு விளையாடி காட்டரேன் பாருங்கோ!"னு ஒரு வீரசபதமே போட்டான் சங்கரன்.



கிரிக்கெட் க்ளவுஸ்..:) (RVS அண்ணா! நீங்க என்ன படம் எதிர்பார்த்தேள்னு எனக்கு தெரியும்!..:P)

ஜன்னல் வெச்சதா? ஜன்னல் இல்லாததா? ஜன்னல் வெச்சதுன்னா தாத்தா டெயிலர் கிட்ட தைக்கலாம், ஜன்னல் இல்லாத சாதா டிசைனுக்கு மணி டெய்லர்தான் பெஸ்ட்!”னு ஹரிகுட்டி சொன்னப்பதான் சங்கரனுக்கு மெதுவா புரிஞ்சது, இனிமே புரிஞ்சு என்ன பிரயோஜனம்? அந்த சுபவேளைலேந்து சங்கரனோட பேருக்கு முன்னாடி ‘ப்ளவுஸ்’ அடைமொழி அட்டையா ஒட்டிண்டுருத்து. அதுக்கு அப்புறம் வாசல்ல புடவைகாரர் ராஜேந்திரன் வந்தா போதும், எல்லா பயலுகளும் “சங்கரா, புது குஷ்பு டிசைன் ப்ளவுஸ் வந்துருக்காம்! வாங்கிக்கோடா!”னு அவனை அழ அழ விட்டு வேடிக்கை பாத்துண்டு இருக்கர்துதான் முக்கியமான பொழுது போக்கே!..:)

எல்லாருக்கும் ஹேப்பி கிறிஸ்த்மஸ்!!

Thursday, December 16, 2010

கணக்கு பண்ணும் துறை

முடி வெட்டுர கடைலேந்து டீ கடை வரைக்கும் இப்போ இதுதான் பேச்சு, //ராஜா, ஸ்பெக்ட்ரம், நிராடியா,கனிமொழி// இது போக இப்போ பரவலா புழக்கத்தில் அடிபடும் ஒரு வார்த்தை மத்திய தணிக்கை துறை(CAG). என்னடா இது தக்குடுவுக்கு என்ன ஆச்சு? நு எல்லாரும் முழிப்பேள்னு எனக்கு தெரியும். பொதுவா இதெல்லாம் எழுதர்துக்குன்னே பல ஜாம்பவான்கள் இருக்கா, குறையொன்றும் இல்லை பாட்டை எப்படி எம் எஸ் அம்மா பாடி கேட்டா தான் நன்னா இருக்குமோ அது மாதிரி இதெல்லாம் அவா எழுதி படிச்சா தான் நன்னா இருக்கும், அதனால நான் எழுதர்து கிடையாது.

அப்போ இப்ப என்ன ஆச்சு கோந்தைக்கு?னு கேக்காதீங்கோ! சமீபத்துல உச்ச நீதிமன்றத்துல நடந்த ஒரு வாக்குவாதத்துல ராஜாவோட வக்கீல் ஒரு விஷயத்தை சொல்லி இருக்கார். “CAG அறிக்கை யூகத்துல எழுதினது, உண்மை கிடையாது" அப்பிடின்னு, அதுக்கு தான் இந்த பதிவு.

நம்ப சர்க்கார்ல உருப்படியா இருக்கற சொச்சம் அமைப்புல மத்திய தணிக்கை துறை முதன்மையானது. சொல்லப்போனா அசோகதூண்ல இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நாலாவது சிங்கங்கள்ல இவாளும் ஒன்னு. இது 1935 தனி நாடாளுமன்ற சட்டம் மூலமா உண்டாக்கப்பட்டது. இது எந்த இத்தாலிய உளவாளிகளுக்கும் சலாம் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. (இதே மாதிரி இருக்க வேண்டிய CBI இப்போ congress investigation bureau வா இருக்குனு எல்லாருக்கும் தெரியும்)




தனித்தன்மை வாய்ந்த ஒரு அமைப்பு, இதோட அறிக்கை நாடாளுமன்றத்துல மட்டும் தான் சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கைல இருக்கும் விஷயத்தை ஆடிட் பாயிண்ட் அப்பிடின்னு சொல்லுவா. மத்திய சர்க்காருக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாமே இவாளோட தணிக்கைக்கு உட்பட்டவாதான். மாநிலங்களுக்கு குடுக்கும் நிதியோட அடிப்படைல அதையும் தணிக்கை பண்ணுவா.

தனி தனி குழுவா தணிக்கை பண்ணர்த்துக்கு அனுப்பிவைப்பா. அதுக்கு மூனு மூத்த அதிகாரியும்,2 செக்ஷன் அதிகாரியும், 1 ப்ரதான அதிகாரியும் இருப்பார். மத்திய தணிக்கைத்துறையோட தலைமை அதிகாரி உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு சமமான அந்தஸ்து உள்ளவர். நம்ப பக்கமெல்லாம் ஆவின் சொசைட்டி/ வேளாண்விற்பனை வாரியம் இதுக்கு எல்லாம் ஆளுங்கட்சியோட கடாமீசை உள்ள வட்டத்தையோ மாவட்டத்தையோ தான் தலைவரா நியமனம் பண்ணுவா அதை மாதிரி இது கிடையாது, தணிக்கை துறையில் குறைஞ்சபட்சம் 25 வருஷம் அனுபவம் இருக்கும் ஒரு திறமையான முக்கியமா நேர்மையான தணிக்கை அதிகாரியை தான் தலைமை அதிகாரியா நியமிக்க முடியும்.

தணிக்கை முடிஞ்சு இவாளோட அறிக்கை முதல்ல உயரதிகாரிகிட்ட சமர்ப்பிக்கப்படும், இதை மாதிரி 10 நிலைகள் தாண்டி தான் இறுதி அறிக்கை நாடாளுமன்றத்துக்கு வரும். அறிக்கையோட நம்பகத்தன்மை,துல்லியத்தன்மை எல்லாத்தையும் பொறுத்து ஆரம்ப அறிக்கைல 10 பாயிண்டோட ஒரு அறிக்கை போனா கடைசி நிலைல 2 பாயிண்ட்டுக்கு இறுதி நிலை ஒப்புதல் கிடைச்சாலே பெரிய அதிசயம்.

இது எதுக்குன்னா நாடாளுமன்றத்துல சமர்ப்பனம் பண்ணினதுக்கு அப்புறம் யாரும் நாக்கு மேல பல்லை போட்டு பேசிட கூடாதுனு தான். இதன்படி ஒரு பாயிண்ட் அறிக்கைல பிரசுரமாகர்துன்னா அது 100% உறுதியான ஊழல் அபாய அறிவிப்புனு அர்த்தம். எல்லா விதத்துலையும் புரியும் படியும், சகல விதமான ஆதாரத்தோடும் அந்த அறிக்கை இருக்கும். சில கோபாலபுரத்து கோமகன்கள் எழுதும் நெஞ்சுக்கு நீதி! குஞ்சுக்கு பீதி! எல்லாம் இந்த அறிக்கையோட ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.

இதுவரைக்கும் இவாளோட அறிக்கையால வெளிச்சம் காட்டப்பட்ட முக்கியமான முறைகேடுகள்,

1) போப்பர்ஸ் பீரங்கி ஊழல் 2) மாட்டுத் தீவண ஊழல் 3) காமென்(காங்கிரஸ்) வெல்த் கேம்ஸ் 4)ஸ்பெக்ட்ரம் இது தவிர எண்ணிக்கைல அடங்காத பல முக்கிய ஊழல்கள்.

இதெல்லாம் தக்குடுவுக்கு எப்பிடி தெரியும்னு யோசிக்காதீங்கோ! நான் மேய்க்கர அரசாங்க ஒட்டகத்துல சவாரி பண்ணின இந்திய அதிகாரிகள் சொன்ன விஷயம் இது. இவாளோட திறமை,துல்லியத்தன்மை எல்லாம் பாத்துட்டு வளைகுடா நாடுகள் எல்லாத்துலையும் ரொம்ப வருஷமாவே இவாளுக்கு ராஜ உபசாரம். ஐக்கிய நாடுகள் சபையோட பெரும்பாண்மையான தணிக்கை பொறுப்பும் இவாளோட கைலதான் இருக்கு என்பது உபரி தகவல்.

இவ்ளோ கஷ்டப்பட்டு இந்தியால இவா கண்டுபிடிச்சு அறிக்கை குடுத்தாலும் எடுக்க வேண்டிய நடவடிக்கை எல்லாம் தேசத் துரோகிகளோட பொதுக்குழுலையும் செயற்குழுலையும் தீர்மானம் பண்ணர்தை பாக்கும் போதுதான் வயத்தெரிச்சலா இருக்கு. அதிசயமா இந்த தடவை உச்ச நீதிமன்றம் தலையிடர்துனால கொஞ்சம் குடைச்சலா இருக்கு இந்த மானம் கெட்ட ஜென்மங்களுக்கு.




வளைகுடா நாடுகள்ல இருக்கும் தலைமை தணிக்கை துறைக்கு “திவான் மஹாசபை”னு பேரு. இங்க இருக்கும் அதிகாரிகளை பாத்தாலே அரசாங்க நிறுவன தலைமை நிதி அதிகாரிகளுக்கு சிம்மசொப்பனம். ஏன்னா நம்ப ஊர் மாதிரி அறிக்கையை வாங்கி @#துக்கு அடில போட்டுண்டு ஆட்சியாளர்கள் உக்காசுக்க மாட்டா. நடவடிக்கை எல்லாம் அதிரடியா இருக்கும்.. ஜனநாயகம்! வெங்காயம்!னு சொல்லிண்டு இந்தியால நாம பல்லை இளிச்சுண்டு இருக்க்கர்துனால தான் இப்போ உலகமே நம்மை பாத்து சிரிக்கர்து!..:((

Thursday, December 9, 2010

யானை! யானை! - II

Part I
நானும் என்னோட நண்பனும் முன் பக்கமும் பின் பக்கமுமா சரி பண்ணி உக்காந்து பாத்தும் மனசுக்கு திருப்தியாவே இல்லை. நாங்க சரி பண்ணி உக்காசுக்க ட்ரை பண்ணிண்டு இருக்கும் போதே யானை மெதுவா நகர ஆரம்பிச்சது. எங்க ரெண்டு பேருக்குமே வயத்தை கலக்க ஆரம்பிச்சது. என்னோட கைல வெள்ளிக்குடம், அவனோட கைல ஒரு பெரிய கோவில் குடை. நான் மெதுவா யானையோட கழுத்துல இருந்த ஒரு பள்ளத்துல குடத்தை வச்சுண்டு நன்னா கெட்டியா கட்டிப்புடிச்சுண்டேன்.



யான் ஏறிய யானை!!..:)

ஒரு கையால யானை மேல போர்த்தி இருந்த துணியை பிடிச்சுண்டேன். அந்த சமயம் பாத்து வெடிக்காரன் ஒரு வெடியை கொளுத்தி வானத்துல விட்டான். 'டமால்'னு அது வெடிக்கவும் யானையோட நடைல ஒரு அதிர்வு தெரிஞ்சது. நாங்க ரெண்டு பேரும் பயந்து போய்ட்டோம். என்னல ஆச்சு யானைக்கு?னு என்கிட்ட கேட்டான். ‘யானை மனசுக்குள்ள சிரிக்கர்து போலருக்கு!’னு நான் பதில் சொன்னேன். இது வரைக்கும் ஒழுங்கா போயிண்டுருந்த யானையோட நடைல ஒரு வித்தியாசம் தெரிஞ்சது. வலது பக்க முன்னங்காலை ஒருமாதிரி வட்டம் போட்டு வட்டம் போட்டு நடந்தது. என்னடா மாப்ள இது!னு மறுபடியும் குடைக்காரன் தொணதொணத்தான். யானை ஓ! போடுதுடா மாப்ள!னு நான் பதில் சொல்லிண்டே கீழ இருந்த யானைப் பாகன்ட என்ன ஆச்சு?னு விசாரிச்சேன். ‘ஒன்னும் இல்லை தம்பி! முன்னங்கால் முட்டி கொஞ்சம் தேஞ்சுருக்கு, அதனால யானை இப்படித்தான் நடக்கும்!’னு சாதாரணமா பதில் சொன்னார். ‘இதெல்லாம் ஏறர்த்துக்கு முன்னாடி சொல்லமாட்டேளாடா!’னு மனசுக்குள்ள சொல்லிண்டேன்.



ஆரம்பமெல்லாம் நன்னாதான் இருக்கு...:)

இதுக்கு நடுல கூட வந்துண்டு இருந்த ஒரு மாமா, ‘ஸ்வாமியோட விஷேஷமே தனிதான்! கணபதி பிரணவ ஸ்வரூபம் இல்லையா, அதான் காலால ‘ஓம்’ போட்டு காமிக்கர்து யானை!’னு பிட்டு போட்டு மத்த மாமாக்களை உச்! கொட்ட வெச்சுண்டு இருந்தார். ‘மாமா! அடுத்த திருப்பத்துல நான் கீழ இறங்கிக்கறேன், நீங்க மேல வாங்கோ! மேலேந்து பாத்தா ‘ஓம்’ இன்னும் தெளிவா தெரியும்!’னு நான் சொன்னதுக்கு அப்பரம் பேசாம வந்தார். நேரம் ஆக ஆக எனக்கு பயம் ஜாஸ்தியாயிண்டே போச்சு. 'யானை சவட்டியதில் பச்சிளம் பாலகன் தக்குடு சட்னி'நு எதுகை மோனையோட தினமணில செய்தி வந்துருமோ?னு பயமா இருந்தது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுல ஒரு உருண்டை தான் வைரமுத்துவுக்கு உருண்டது, ஆனா எனக்கு 2 - 3 உருண்டை உருள்ற மாதிரி இருந்தது.

கணபதி உபனிஷத்ல ஆரம்பிச்சு ருத்ரம் சமகம்னு எல்லா ஸ்லோகமும் சொல்ல ஆரம்பிச்சேன். கணபதி பஞ்சரத்னம் மட்டும் சொல்லலை, ஏன்னா அதை சொன்னா பிள்ளையார் 'பாபா ப்ளக்க்ஷிப்' ரைம்ஸுக்கு குட்டிக் குழந்தேள் தலையை ஆட்டிண்டு ஆடரமாதிரி சந்தோஷமா ஆடிண்டே கேப்பாராம். அப்பரம் திவா அண்ணா ப்ளாக்ல இருக்கும் யானை மாதிரி குதிக்க ஆரம்பிச்சுதுன்னா என்ன பண்ணர்து! அதனால சொல்லலை.



பப்பு டார்லிங் ரெடி ஆயாச்சு!!..:)

ஒரு வழியா குத்துக்கல் தெருவுக்குள்ள வந்தாச்சு, அங்க இருந்த ஒரு பாலக்காட்டு மாமி ஆர்த்தி(ஆர்த்தி யாரு? நம்ப பாலக்காடு மாமியோட ஒரே பொண்ணா?னு வளிச்சுண்டு வந்து யாரும் சந்தேகம் கேக்காதீங்கோ!) எடுத்துட்டு சும்மா இருக்காம, ‘தக்குடு! ஆனன மேல உன்னைகாண்ரோது பந்தளராஜகுமாரனாட்டம் இருக்கை கேட்டையா!’னு போட்டா பாக்கனும் ஒரு பிட்டை. யானை எப்ப பந்தாடப்போர்தோ?னு பயந்துண்டு இருந்த நான் உடனே, ‘மாமி! ஆரத்தி தட்டை தள்ளி வெச்சுக்கோங்கொ! ஆரஞ்சு கலர் ரஸ்னா ஜூஸ்!னு நினைச்சு, ‘ஐ லவ் யூ ரஸ்னா!’னு சொல்லிட்டு யானை தும்பிக்கையால உறிஞ்சுடப்ப்போர்து!’னு சொன்னேன். ‘மாமி! நான்! நான்! எப்பிடி இருக்கேன்?னு சொல்லலையே?’னு குடைக்காரன் ஆரம்பிச்சான். ‘பரக்காதடா பரக்காவட்டி! நீ பந்தளராஜாவுக்கு குடை பிடிக்கரவன் மாதிரி லக்ஷணமா இருக்கை போதுமா!’னு அவனை சமாதானம் பண்ணினேன். இதுக்கு நடுல ஒரு நாதாரிப்பய சரவெடியை கொளுத்திப் போட்டு யானையை பதறடிக்க முயற்சி செஞ்சுண்டு இருந்தான்.

சன்னதி தெருல ருக்கு மாமி பாகன் கிட்ட மெதுவா, ‘யேன்டாப்பா! உன்னோட யானை கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் எல்லாம் சாப்டுமா?’னு விசாரிச்சுண்டு இருந்தா. நான் உடனே சுதாரிச்சுண்டு, ‘அதெல்லாம் நாங்க கீழ இறங்கினதுக்கு அப்பரம் தெருல வந்து குடுத்துக்கோங்கோ மாமி!னு சொல்லிட்டேன். அவாத்துல கிருஷ்ண ஜெயந்தி பக்ஷணம் எல்லாம் பாமாயில்லதான் பண்ணூவா. கண்றாவியா இருக்கும், வாயிலையே வெக்க முடியாது. கேட்டா, கிருஷ்ணருக்கு பாமாவைத்தான் ரொம்ப பிடிக்கும்டா கோந்தை!னு ஒரு நொண்டிச் சாக்கு சொல்லுவா. அவாத்துல யாரும் சாப்டாத பழைய பக்ஷண ஸ்டாக் எல்லாத்தையும் யானைட்ட குடுத்து க்ளியர் பண்ண பாக்கரா. அவாத்து மைசூர்பாவை வச்சு வாய்க்காலுக்கு சைடுல வெள்ளத் தடுப்புச் சுவரே கட்டிடலாம் அவ்ளோ ஸ்ட்ராங்! இதை எல்லாம் திண்ணுட்டு யானைக்கு எதாவது ஆச்சுன்னா அப்பரம் சேதாரம் எங்களுக்குத்தான்.

‘முடுக்கு’மூச்சா மாமா(அவாத்துல 3 டாய்லட் இருந்தாலும் அவர் மட்டும் முடுக்குல போய்தான் எல்லாம், அதனால இந்த பேர் அவருக்கு) ரொம்ப நாழியா யானை பின்னாடி & சைடுல வந்துண்டே இருந்தார். அடிக்கடி யானையோட வாலை பாத்துண்டே இருந்தார். இதை நான் கவனிச்சுட்டு ‘என்ன சமாசாரம் மாமா?’னு கேட்டதுக்கு, மோதரம் பண்ணி போட்டுக்க நீளமான ஒரு யானை முடியை புடுங்கர்த்துக்கு வால்ல தேடிண்டு இருக்கேன்டா கோந்தை!!னு சாதாரணமா சொன்னார். “@#%ரை புடுங்கர்த்துக்கு இதுவாவோய் நேரம்?”னு துபாய் பார்ட்டி நல்ல திட்டிவிட்டுட்டான்.

இதுக்கு நடுல என்னோட வேட்டி முடிச்சு என்னை மாதிரியே ரொம்ப லூசா இருந்தது. வேட்டியை இழுத்துகட்டனும்னா கும்பத்தை கீழ குடுத்தா தான் கட்டமுடியும். கீழ இருந்த கோவில் தர்மகர்த்தா கரகாட்டக்காரன்ல வரும் கனகாவோட அப்பா சண்முகசுந்தரம், “அம்மாடி காமாட்சி! இந்த கரகத்தை ஆட்டம் முடிஞ்சுதான் கீழ இறக்கனும்!”னு கனகாகிட்ட சொன்ன மாதிரி “கும்பத்தை கோவில் வாசல்லதான் இறக்கனும்!”னு உறுதியா சொல்லிட்டார். கோவில் வாசல்ல கும்பல் கும்பலா மடிசார் பொம்ணாட்டிகளும் அவாத்து பிகர்களும் நின்னுன்டு இருந்தா. எல்லாரும் ஆளுக்கு ஒரு ஜிமிக்கியை போட்டுண்டு மினிக்கிண்டு இருந்தா அவா எல்லார் முன்னாடியும் அவுந்த வேட்டியோட ‘சூப்பர்மேன்’ கோலத்துல(வேட்டியை கழுத்துல கட்டிண்டு குதிச்சா சூப்பர்மேன் தானே?) நிக்கப் போறேன்!னு மனசுக்குள்ள பயந்துண்டு இருந்தேன்.



தக்குடு 3 வருஷத்துக்கு முன்னால்...:)

போட்டோகாரன்கிட்ட யானை மேலேந்து இறங்கும் போது ஒரு ஸ்பெஷல் போட்டோ எடுத்து தாங்கோ!னு சொல்லியிருந்தேன், அதனால அவர் ஜூம்பண்ணர காமிராவோட ரெடியா இருந்தார். ‘சூப்பர்மேன்’ கோலம் அமெரிக்கா வரைக்கும் போகப்போகர்து!னு மனசுக்குள்ள ஒரே பதட்டம். ஒரு வழியா கோவில் வாசலும் வந்தது. வெள்ளிக் குடத்தை ஒரு மாமாட்ட குடுத்துட்டு மெதுவா கீழ இறங்கி பாஞ்சாலி மாதிரி ஒரு கையால அவுந்த வேட்டியை பிடிச்சுண்டு மின்னல் வேகத்துல ‘துபாய்’ காந்தி மாமியாத்துக்குள்ள புகுந்துட்டேன். அப்பரம் வந்து சொன்ன பேச்சை காப்பாத்தின யானையை ஒரு பிரதக்ஷிணம் பண்ணிட்டு தும்பிக்கையை தொட்டு வணங்கி ஷாஷ்டாங்கமா ஒரு நமஸ்காரமும் பண்ணினேன்.

இந்த வருஷம் தர்மகர்த்தா பூ மாலையை கைல வெச்சுண்டு, தக்குடு!னு கூப்டவுடனே S.V. சேகர் நாடகத்துல கதாபாத்திரங்கள் 'டஷ்ஷ்ஷ்ஷ்'னு காணாம போகர மாதிரி காணாம போய்ட்டேன். யானை மேல ஆள் ஏறினதுக்கு அப்பரம் தான் பக்கத்துலையே போனேன். துபாய் பார்ட்டி ஆத்தங்கரைக்கே வரலை, ‘தெருலயே நான் இருக்கேன்!’னு சொல்லிட்டான்

Friday, December 3, 2010

யானை! யானை!

எங்க ஊர் பிள்ளையார் கோவில்ல 10 நாள் சதுர்த்தி உத்ஸவம் உண்டு. பத்து நாளும் தெருவே சும்மா 'கலகல'னு இருக்கும். பத்து நாளுக்கு நடுல ஒரு 2 நாள் பெரிய லெவல்ல ஹோமம்,அபிஷேகம்,லக்ஷார்சனை இதை மாதிரி எதாவது இருக்கும். விஷேஷ நாள் அன்னிக்கி காத்தால தெருல இருக்கும் நண்டு நசுக்குலேந்து தொடங்கி 65 வயசு மாமா வரைக்கும் எல்லாரும்(ஆண்கள்) ஆத்தங்கரைக்கு அபிஷேக ஜலம் எடுத்துண்டு வரர்த்துக்கு போய்டுவோம். பொம்ணாட்டிகள் எல்லாரும் கால் வெக்கர்த்துக்கு கூட இடம் விட்டு வைக்காம தெரு முழுசும் கோலம் போட்டு கும்பத்தோட வரப்போகும் தெரு மனுஷாளை வரவேற்கர்த்துக்கு ஆர்த்தித்தட்டு சகிதமா ‘சரக் சரக்’னு சத்தம் வரும் மடிசார்/பட்டுப் பாவாடையோட வாசல்ல நின்னுன்டு இருப்பா. எல்லார் வீட்டு தங்கமணிகளும் அன்று மட்டும் ‘ஜில் ஜில்’ ரமாமணிகளாக மாறிடுவா.



கோவில் வாசல் கோலம்!!

பிகர்கள் எல்லாம் ‘தாவணி போட்ட தீபாவளி’யாக காட்சி அளிப்பார்கள். மடிசார் புடவைல எத்தனை கலர் உண்டு?னு உங்க யாருக்காவது சந்தேகம் இருந்தா ஒரு தடவை எங்க ஊருக்கு வாங்கோ!...:) மாமிகளோட மடிசாரை பாத்தே அவாளோட சாமர்த்தியம் எப்பிடின்னு சொல்லிடலாம், ஜவுளி கடை பொம்மைக்கு கட்டி விட்ட மாதிரி சில பேருக்கு இருக்கும், சிலபேர் மடிசாரை கட்டிண்டு வரமா சுத்திண்டு வந்துட்டு நிலால நடக்கும் நீலாம்ஸ்ட்ராங் மாதிரி குதிச்சு குதிச்சு நடப்பா, ஒரு சில பேருக்குத்தான் தாத்தா டெயிலர் கிட்ட அளவு குடுத்து தைச்ச மாதிரி கனகச்சிதமா இருக்கும். அதுலையும் சில பேர் அவாளோட வலது பக்க இடுப்புல சரியா செவ்வகமா மடிச்ச ஒரு வெள்ளை கர்ச்சிப்பை ‘இன்டியன் ‘ஸ்பின்’ பவுலர் கும்ப்ளே மாதிரி சொருகி வெச்சுருப்பா, அது இருந்துதுன்னா அந்த மாமி கரெக்ட்டா மடிசார் கட்டிக்கரான்னு அர்த்தம்.




எனக்கு தெரிஞ்ச ஒரு மாமி!...:)

ஆண்கள் எல்லாம் நதில ஸ்னானம் பண்ணிட்டு ஜரிகை வேஷ்டி எல்லாம் கட்டிண்டு கும்பதை எடுத்துண்டு மேளதாளத்தோட எல்லா தெருவும் சுத்தி வருவோம். சாதரண நாட்கள்ல பழைய பைத்தார வேஷ்டியும், அழுதுவடிஞ்ச மூஞ்சியுமா இருந்த பல மாமாக்கள் அன்னிக்கி பாத்தேள்னா மழுங்க ஷேவ் பண்ணி, சந்தனக் கீத்து, குங்குமப்பொட்டு சகிதமா ‘பளீர்’ மயில்கண் வேஷ்டியோட ‘தில்லானா மோஹனாம்பாள்’ சிவாஜிகணேசன் மாதிரி அம்சமா இருப்பா. அவாத்து மாமிகளே, ‘இது எங்காத்து மாமாவா?’னு ஆச்சர்யப்படுவா.

1 கிலோ எடை உள்ள பிரதான வெள்ளிக்குடத்தை யானை மேல உக்காசுண்டு யார் எடுத்துண்டு வரா அப்பிடிங்கர்து கடைசி வரைக்கும் பரமரகசியமா இருக்கும். அது வெறும் குடம் கிடையாது, பிள்ளையாரையே கொண்டு வரமாதிரி ஒரு நம்பிக்கை எல்லாருக்கும். தக்குடு மாதிரி பொடிப் பயலுக்கு எல்லாம் அந்த சான்ஸ் கிட்டினதே கிடையாது. பெங்களூருக்கு வேலைக்கு போனதுக்கு அப்பரம் முதல் தடவையா சதுர்த்திக்காக கல்லிடை போயிருந்தேன். வழக்கம் போல நானும் ஆத்தங்கரைக்கு போயிருந்தேன். நதிக்கு பூஜை எல்லாம் பண்ணினதுக்கு அப்பரம் கைல அழகான ஒரு மல்லிபூ மாலையை வெச்சுண்டு கோவில் தர்மகர்த்தா, ‘தக்குடு! இங்க வாடா கோந்தை!’னு கூப்ட்டார். பக்கத்துல போனா 'படக்'னு மாலையை கழுத்துல போட்டு, ‘தக்குடுதான் யானை மேல வரப்போறான்!’னு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டார்.

முதல் தடவையா அந்த வாய்ப்பு எனக்கேவா?னு ஆச்சர்யமா இருந்தது . பொதுவா எப்போதும் பயங்கர போட்டி நடக்கும். இந்த தடவை போட்டியே இல்லை, அதுவும் எனக்கு ஆச்சர்யமா இருந்தது. அந்த வருஷம்தான் 3- 4 கோவில் யானை மதம் பிடிச்ச சம்பவம் சன் டிவில வந்ததால ப்ளான் பண்ணி என்னை சிக்கவெச்சுட்டாளோ?னு கூட ஒரு சந்தேகம் வந்தது. இதுக்கு நடுல யானைல நம்ப கூட இன்னொரு ஆளும் வருவார். நம்ப பின்னாடி உக்காசுண்டு குடை பிடிச்சுண்டு அவர் வரணும் அதுதான் அவரோட டுயூட்டி. எனக்கு ஜோடியா என்னோட ஸ்கூல்ல படிச்ச ஒரு பையனை தேர்ந்தெடுத்துருந்தா. அவனை பத்தி கொஞ்சம் சொல்லியே ஆகனும். துபாய்ல ஸ்டோர் கீப்பரா வேலை பாத்துண்டு, லீவுக்காக ஊருக்கு வந்துருந்தான். பாக்கர்த்துக்கு ஆள் சும்மா ஆஜானுபாகுவா 6 அடி ஒசரத்துல கஜக்குட்டியாட்டமா இருப்பான். ஸ்டோர்ல க்ரேன் ரிப்பேர் ஆனா சாமானையெல்லாம் இவன் கையாலையே தூக்கி வச்சுடலாம். குடை புடிக்கரவந்தான் முதல்ல ஏறனும். இவன் ஏறினோன்னே யானை ஒரேடியா கீழ படுத்துர கூடாதே!னு எனக்கு கவலையா இருந்தது.

நல்ல வேளை யானை எப்பிடியோ அவனை தாங்கிடுத்து. அடுத்து இப்போ நான் ஏறனும். ஏறர்த்துக்கு முன்னாடி வண்டி கண்டிஷன்ல இருக்கா?னு செக் பண்ணிக்கர டிரைவர் மாதிரி நான் பாகன்ட போய், “யானைக்கு மம்மு அக்கம் எல்லாம் குடுத்தாச்சா? காத்தால நரசூஸ் காபி குடுச்சோனே யானை சுச்சா & கக்கா எல்லாம் போச்சா?”னு கேட்டேன். “சுச்சா & கக்கா எல்லாம் on the way-ல தான் யானை போகும்!”னு பாகன் சொன்னார். வெள்ளிக்கும்பத்தை பக்கத்துல இருந்த ஒரு மாமாட்ட குடுத்துட்டு, நான் ஏறர்த்துக்காக தூக்கி காமிச்சுண்டு இருந்த யானையோட வலது காலை தொட்டு மொதல்ல கண்ணுல ஒத்திண்டேன். ‘அப்பனே வினாயகா! நம்ப ரெண்டுபேருக்குள்ள ஆயிரம் அபிப்ராய பேதம் இருக்கலாம், ஆனா அதை எல்லாம் நாம பேசித்தான் தீர்த்துக்கனும், எக்காரணத்தை கொண்டும் வன்முறைல இறங்கக் கூடாது!’ அப்படின்னு யானை கிட்ட ஒரு டீலிங் பேசிட்டு, அப்பரம் ஒரு மாதிரி தம் கட்டி யானை மேல ஏறியாச்சு.



பட்டுப் பாவாடையில் ஒரு பட்டூ!!..:)

கஜாரோஹணம் ஒன்னும் அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. கஜம் + ஆரோஹனம் = யானையேற்றம், “யானையோட உடம்பு அசைவுக்கு ஏத்தமாதிரியே நாமும் அசைஞ்சு குடுக்கனும். யானையோட கழுத்துல ரொம்ப நேரம் உக்காரக் கூடாது. கழுத்துப் பகுதில ரயில் தண்டவாளம் மாதிரி 2 எலும்பு உண்டு, அதுக்கு நடுலதான் கும்பத்தை வைக்கனும், வேற எடத்துல வெச்சா கவுந்துடும்!”நு என்னோட குருனாதர் சொன்னது எல்லாம் ஞாபகத்துல இருந்தது.

இருந்தாலும் ரொம்பவே பயமா இருந்தது. கரெக்டா யானை கிளம்பர்த்துக்கு முன்னாடி கோவில் தர்மகர்த்தா எங்கேந்தோ ஓடியே வந்தார். ‘பத்ரமா வாடா தக்குடு!’னு சொல்லபோறார்னு பார்த்தா, ‘வெள்ளிகுடம் பத்ரம்டா!’னு சொல்லி அவர் ‘தர்மகர்த்தா!’னு நிரூபிச்சுட்டுப் போனார்.

அதுக்கு அப்புறம் தான் காமெடியே ஆரம்பிச்சது...........(தொடரும்)