Tuesday, November 30, 2010

என் சடையப்ப வள்ளலே!!

என்னடா இது தக்குடு ஊர்ல இல்லாத அதிசயமா சீக்கரமே போஸ்ட் போட்ருக்கானே?னு எல்லாரும் ஆச்சர்யமா இருக்கா? பதிவை படிக்க படிக்க காரணம் புரியும்.

பொதுவா ஒரு ஆத்துல கடைசி குழந்தையா பொறந்தா அதுல பல சிக்கல்கள் உண்டு. நாம என்ன தான் கஷ்டப்பட்டு ஒரு நல்ல காரியம் பண்ணினாலும்(பண்ணினது கிடையாது, ஒருவேளை பண்ணினா)ஆத்துல நம்மை யாரும் கண்டுக்கவே மாட்டாங்க. அப்பிடியே கண்டுண்டாலும் 'இந்த சின்னப்பயலோட கார்யத்தை பாத்தேளா"னு தான் கேட்டுப்பாளே தவிர உருப்படியா ஒன்னும் ஒப்பேறாது. உங்களுக்கு மூத்தது அண்ணாவா இருந்தா அது ஒரு மாதிரி, அக்காவா இருந்தா கதை வேற மாதிரி.

எனக்கு வந்து வாய்ச்சது அண்ணாங்கர விஷயம் எல்லாருக்குமே தெரிஞ்சுருக்கும் (ஆமா! ஆமா!னு வம்புக்கு சப்பு கொட்டிண்டு சுபா மேடம் சொல்லும் பதில் எனக்கு கேக்கர்து). அந்தப் பயலை பத்திதான் இந்த பதிவு.

உங்களுக்கு எல்லாம் பதிவர் அம்பியை (மூத்த பதிவர்!னு பீலா விட்டுண்டு அலையர்து தனி கதை) தான் தெரியும், தக்குடுவோட அண்ணாவை தெரியாது இல்லையா?
தந்திரம் பண்ணர்துல நம்பியார், சிரிக்கர்துல வீரப்பா, குசும்போட பேசர்துல அசோகன் ஆனா ஆத்துலையும் சரி வெளிலயும் சரி ஒரு எம்ஜிஆர் இமேஜ் இவனுக்கு (நம்ப கீதா பாட்டி அம்பத்தூர்ல அடிக்கர விசில் சத்தம் தோஹா வரைக்கும் கேக்கர்து). ஸ்கூல் படிக்கர காலத்துல சாயங்காலம் ஆத்துக்கு வந்தா வெளில விளையாடவே போக மாட்டான். அவனுக்கு கை,கால் & ட்ரெஸ்ல துளி அழுக்கு ஆகக் கூடாது, அதே மாதிரி எந்த காயமும் படாமா சக்கரகட்டியா உடம்பை பாத்துப்பான். கேரம்,செஸ்,சைனீஸ் சக்கர் இந்த மாதிரி உடம்புல படாத விளையாட்டா விளையாடுவான். எதுவும் இல்லைனா ஒரு புஸ்தகத்தை வெச்சுண்டு உக்காசுண்டுருவான்.


வாதாபி & வில்லாளன்...:)

தக்குடு அப்பிடி கிடையாது, ஸ்கூல் பையை வாசல இருந்தே ஆத்துக்குள்ள “சார் போஸ்ட்!” மாதிரி தூக்கி போட்டுட்டு 'ப்ளவுஸ்' சங்கரன்,’மாலாடு’ பாலாஜி,ரவிக்கு,ஹரிக்குட்டி,’மூஞ்சூர்’ மகேஷ்,’கிடுகிடு’கிரி,‘ரொட்டி சால்னா’ சேகர், கிச்சாகுட்டி,'சக்கப்பழம்' ஹரீஷ் இவாளோட விளையாட போயிடுவேன். நமக்கு எல்லாம் போட்டு இருக்கும் வெள்ளை கலர் ‘செளம்யா’ ப்ராண்ட் பனியன் மஞ்சக்கலர் ஆனா தான் ராத்திரி தூக்கமே வரும்.குறைஞ்சபட்சம் ஒரு ரத்தக் காயமாவது உடம்புல இருந்தா தான் சாப்பாட்ல கை வைக்கும் வீரப் பரம்பரை. தெரு தண்டர்துல எவ்ளோ பிசியா இருந்தாலும் சாப்பாடு டையத்துக்கு டாண்!னு வீட்ல ஆஜர் ஆயிடுவேன்.

நோகாமா நொங்கு திண்கர்துல எங்க அண்ணா மன்னன். தெரு முழுசும் இருக்கர எல்லா மாமிக்கும் தக்குடு செல்லப்பிள்ளைனு உங்க எல்லாருக்குமே தெரியும், அதனால நவராத்ரி சமயத்துல சுண்டல் கலெக்ஷன் ரொம்ப மும்மரமா நடக்கும். எங்க அண்ணா ஒரு ஆத்துக்கு கூட வரமாட்டான் ஆனா ஆத்துல இருந்த மேனிக்கே 50% சுண்டலை என்கிட்ட இருந்து தந்திரமா வாங்கி ஆட்டையபோடுவான். 'அலமேலு மாமியாத்துக்கு போனியா?' 'சுந்தரா மாமியாத்துக்கு போனியா?'னு ப்ராஜக்ட் மேனேஜர் மாதிரி வக்கனையா என்கிட்ட கேப்பான். 'செல்லம்மா மாமியாத்துக்கு ரெண்டாம்தரம் போ ல, அவாளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், ஒன்னும் சொல்லமாட்டா!னு ரெண்டாம் தடவை வேர அனுப்பி வெப்பான். நான் இப்போ இருக்கர மாதிரியே அப்போவும் கள்ளம் கபடமே தெரியாது, பைத்தியம் மாதிரி போய் வாங்கிண்டு வந்து அவனுக்கும் குடுப்பேன். 8 - 12 கிளாஸ் வரைக்கும் அவன் (ரொட்டி சால்னாவுக்கு ஆசை பட்டு) NCC-ல எல்லாம் இருந்தான். லொங்கு! லொங்கு!னு 2 மணி நேரம் “பீச்சே மூட், ஆகேசலேகா ஆயேமூட்!”னு பரேட் பண்ணினா 2 ரொட்டி கிட்டும், அதுல பாதி ரொட்டி டிபன் பாக்ஸ்ல போட்டு எனக்கு கொண்டு வருவான் (இல்லைனா நான் எதுலையும் பங்கு குடுக்கமாட்டேன்).

அந்தப் பய போட்ட பழைய ஸ்கூல் யூனிபார்ம் தான் எனக்கு வரும். அவன் துணியை எல்லாம் அழுக்காக்காம அப்பிடியே வெச்சுருந்து எனக்கு தள்ளி விட்டுடுவான். அவனுக்கு எப்போதும் புதுசு கிடைக்கும், பைத்தார தக்குடுவுக்கு எப்போதுமே பழைய ட்ராயர் தான். ‘உன்னோட சந்துல என்ன அருமாமனையா இருக்கு? தார்பாய்ல தான் உனக்கு ட்ராயர் தெய்க்கனும்!’ னு எங்க அம்மா என்னை சத்தம் போடுவா, ஏன்னா ஒரு ட்ராயர் போட்டு சரியா 2 மாசத்துல நமக்கு டிக்கில போஸ்ட் ஆபிஸ் ஓப்பன் ஆயிடும். ஆரம்பத்துல 15 பைசா போஸ்ட் கார்ட் சைஸ்ல இருக்கும் ஓட்டையை, ஒரே நாள்ல 10 ரூவா கவர் போஸ்ட் பண்ற சைஸுக்கு பெரிசாக்கி அடுத்த ட்ராயருக்கு அடி போடுவேன்.

நான் எட்டாம் கிளாஸ் படிச்சுண்டு இருந்த போது திடீர்னு ஒரு நாள் அவனுக்கு மதுரை காலேஜ்ல படிக்க இடம் கிடைச்சுருக்குனு சொல்லி மதுரை அனுப்பி வெச்சுட்டா, முதல்ல ஒன்னும் தெரியலை, அன்னிக்கி ராத்திரியே ஒரே அழுகையா வந்துடுத்து, நித்யம் அவனை 2 மிதியோ நாலு அடியோ குடுத்துட்டு அவன் மேல ஏறி படுத்துண்டாதான் எனக்கு தூக்கமே வரும் (வேற யாரையும் உதைக்கவும் முடியாது ஏன்னா, “கழுதை மிதியை கழுதைதான் தாங்க முடியும்!”னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா). அவன் இல்லைனவொடனே எதோ மாதிரி ஆயிடுத்து. 10 நாளைக்கு சாப்ட உக்காசுண்டா அவன் இல்லாட்டாலும் அவனோட சாப்படர தட்டையும் எனக்கு பக்கத்துல எடுத்து வெச்சுப்பேன், படுக்கையும் அதே மாதிரி தான். 'ஒளியும் ஒலியும்'ல தர்மத்தின் தலைவன் படத்துலேந்து 'தென்மதுரை வைகை நதி' பாட்டு வந்தா பயங்கர பீலிங் ஆகி கண்ணுல ஜலம் வந்துடும்.

எங்க அப்பா அம்மாவுக்கு அடுத்த படியா என் மேல அளவு கடந்த பாசம் வெச்சுருக்கும் ஒரு ஜந்து அவன் தான். குணமா/அனுசரனையா எல்லாம் அவனுக்கு பேச தெரியாது, எதாவது ரெண்டாம் தடவை கேட்டாளே சல்லு!புல்லு!னு எரிஞ்சு விழுவான். ப்ளாக்லதான் எதோ காமெடி பீஸ் மாதிரி வளைய வந்துண்டு இருக்கான். நான் அதெல்லாம் கண்டுக்கவே மாட்டேன். "அவன் எப்பிடி இருந்தாலும் அவன் தான் உன்னோட அண்ணா!"னு அம்மா சொன்னதுதான் மனசுல இருக்கு. 'டேய் அண்ணா!'/பெரிய மாப்ள!னு எப்போதும் மரியாதையாதான் அவனை கூப்பிடுவேன்.

எள்ளு ஒன்னை எட்டா பங்கு வெச்சுடுவான், துட்டு விஷயத்துல ஆசான் பயங்கர உஷார்! ஆனா நான் படிப்பு முடிச்சு வேலை தேட ‘பூலோக சொர்க்கமான’ பெங்களூருக்கு போன போது 4 சட்டை பேன்ட்,ஒரு துண்டு, 2 மயில்கண் வேஷ்டி வித் அட்டாச்சுடு அங்கவஸ்த்ரம் (வித் அட்டாச்சுடு ப்ளவுஸ் மாதிரி),ஒரு கோபிகட்டி,பஞ்சபாத்ரம்(சந்தி பண்ண) மட்டும் தான் கொண்டு போனேன். மத்தது எல்லாம் "அண்ணா பற்று" தான்..:)



இப்போ எதுக்கு அண்ணா புராணம்?னு கேக்கர்து புரியர்து! டிசம்பர் 1 தான் எங்க அண்ணா பூலோகத்துல உதிச்ச நாள். நான் நிச்சயமா கம்பர் கிடையாது, ஆனா அவன் எனக்கு என்னிக்குமே சடையப்ப வள்ளல் தான்! காசா பணமா? கூகுளாண்டவர் குடுத்த ஓசி ப்ளாக்ல அவனை பத்தி நாலு வரி எழுதலாம்னு தோணித்து.சொல்லியாச்சு!

டேய் அண்ணா! ஹேப்பி பர்த்டே டா! சந்தோஷமான மனசோடையும், ஆரோக்கியமான உடம்போடையும், பிக்கல் பிடுங்கல் இல்லாம தீர்க்காயூசா நீ இருக்கனும்னு உம்மாச்சி கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கறேன்.

Saturday, November 20, 2010

மூஞ்சி புஸ்தகம்

இதை எந்த புண்ணியவான் கண்டுபிடிச்சானோ!!! அட ராமா! இதுல எல்லாரும் படுத்தரபாட்டை பாத்தேள்னா தாங்கமுடியாது. அடுத்த வேளை சாப்பாடுக்கு வழி இருக்கோ இல்லையோ எல்லாருக்கும் மூஞ்சி புஸ்தகத்துல ஒரு பக்கம் இருக்கு. தத்துனூண்டுலேந்து ஆரம்பிச்சு தாத்தா பாட்டி வரை எல்லாரும் இதுல அடிக்கற லூட்டி இருக்கே! அம்ம்ம்ம்மாடி! 2004 -ல நாலு பொழப்பத்த வெள்ளைக்கார துரைகள் கண்டுபிடிச்ச இந்த நெட்வொர்க் இன்னிக்கி லோகத்துல இல்லாத இடமே இல்லை.




ஸ்டேட்டஸ் மெசேஜ் போடர்த்துக்கு அவனவன் படும் அவஸ்தையை பாத்தா சிரிப்பு தான் வருது. நச்'னு ஒரு ஸ்டேட்டஸ் மெசேஜ் போடர்து ஒன்னும் நாயுடு ஹால்ல போய் கலர் எல்லாம் பாக்காம எலாஸ்டிக்கை மட்டும் இழுத்து பாத்து சாமான் வாங்கிண்டு வர்ர மாதிரி ஈசியான விஷயம் கிடையாது. அதுலையும் நாம போட்ட மெசேஜை பாத்துட்டு குறைஞ்சது ஒரு 10 பேராவது வந்து காறி துப்பிட்டு போனா தான் நம்ம மனசுக்கு திருப்தியா இருக்கு. கல்லிடைல அழகான பிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்ட மாதிரி வர வர இந்த ஸ்டேட்டஸ் மெசேஜுக்கும் கடுமையான பஞ்சம் வந்துடும் போலருக்கு. என்னோட தோஸ்த் ஒருத்தன் 3 இட்லி ஒரு வடை நு அவனோட முகப்புப்பக்கத்துல போட்டுருந்தான். என்ன்ன்னடா இது?னு வடிவேல் குரல்ல அவன்கிட்ட கேட்டா, காத்தால உடுப்பி ஹோட்டல்ல அவன் சாப்பிட்ட டிபனாம் அது. வித்தியாசமா இருக்கட்டுமேனு போட்டானாம். எப்பிடியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!!..:) இந்த மாதிரி யோசிக்கத் தெரியாதவா எல்லாரும், பக்கத்தாத்து பாட்டி வழுக்கி விழுந்ததுலேந்து ஆரம்பிச்சி, எதிர்த்தாத்து மாட்டுக்கு பிரசவத்துல கன்னுகுட்டி பொறந்தது வரைக்கும் எல்லாத்தையும் போடறா!

காளை மாடு காசிக்கு போனாலும் கட்டி தான் உழுவாளாம், அதை மாதிரி இங்க வந்தும் இந்த கவிதை சொல்லறவாளோட தொல்லை தாங்க முடியாது. ஒரு வாரமா சிரைக்காத தாடியை பேனாவால வருடிண்டே வேப்பமரத்து உச்சிக் கிளையை வெறிச்சு பாத்துண்டே எழுதின கவிதைனு முதல் வரியை வாசிச்சோன்னே சொல்லிடலாம். எதோ சந்தோஷமான கவிதைனா கூட சகிச்சுக்கலாம், "என்னை ஏன்ன்ன் பிடிக்காதென்றாய்!"னு ஒப்பாரி வெக்கறவாளை பாத்தாளே, நம்ப கவுண்டமணி மாதிரி 'சத்ய சோதனை'னு சொல்லும்படியா ஆயிடும்.

தேங்காய் இல்லாமல் தேங்காய் சாதம் செய்வது எப்படி? எலுமிச்சை இல்லாமல் எலுமிச்சை சாதம் செய்வது எப்பிடி?னு சமையல் மாமிகள் சவுண்ட் இங்க(யும்) கொஞ்சம் ஜாஸ்தி. எலுமிச்சை இல்லாத சாதம்னா அப்போ அது மஞ்சப்பொடி சாதம் தான்!னு கமண்ட் போடலாம்னு கூட மனசுக்கு தோனும், இருந்தாலும் பத்தினி தெய்வங்களோட சாபத்துக்கு ஆளாக வேண்டாம்னு பேசாம இருந்துடுவேன். லோகம் பூராவே லெமன் சாதம் இப்பிடித்தான் இருக்கும் போலருக்கு!னு நினைச்சுண்டு இந்த மஞ்சப்பொடி சாதத்தை டப்பர்வேர்ல(Tupper ware) கட்டிண்டு போய் ஆபிஸ் மைக்ரோஓவன்ல சூடு பண்ணி சாப்பிடும் அவாத்து அப்பாவி ரங்கமணிகள் உண்மைலேயே கர்மவீரர்கள் தான்.

ராத்திரி முழுசும் தூங்காம கண் முழிச்சு யோசிச்சு ஒரு விஷயம் போட்டதுக்கு அப்புறம் எவனாவது ஒருத்தன் வந்து அழகா கமண்ட் போட்டுட்டு, அடுத்து வரக் கூடியவா எல்லாரும் அந்த கமண்டுக்கு 'லைக்'நு க்ளிக் பண்ணும் போது அந்த கடை மொதலாளியோட வயத்தெரிச்சலை பாக்கர்த்துக்கு கண் கோடி வேண்டும். ஒரு லெவல்ல வெறுத்துப் போய் அந்த மொதலாளி, “அவனோட கமெண்டுக்கெல்லாம் லைக் போடாதேடி!”னு சொல்லும் போது நம்மால சிரிப்பை அடக்க முடியாது.



பிக்காஸால அக்கவுண்ட் இல்லாதவா எல்லாரும் மூஞ்சி புஸ்தகத்தை அக்காஸா மாதிரி உபயோகப்படுத்திண்டு இருக்கா. அவாளோட நாத்தனார் கல்யாணத்துல நர்த்தனம் ஆடினதுலேந்து, புளியோதரை சாப்டுட்டு நயாகரால கை அலம்பின போட்டோ வரைக்கும் எல்லாத்தையும் இதுல போட்டுடுவா. US-ல இருக்கும் என்னோட ஒரு தோழி, தோழினு சொல்லர்தை விட உடன்பிறப்புனே சொல்லலாம். அவாளோட அக்காஸால சூரியகாந்தி பூ, ரோஜாப்பூ போட்டோ மட்டும் தான் இருக்கும். “ஆத்து மனுஷாளை வரிசையா நிக்க வெச்சு, ‘ஸ்மைல் ப்ளீஸ்!’னு ஜிப்பா போட்ட ஒரு போட்டோக்ராப்பர் மாமா சொல்லும் போது பாதி கண்ணை மூடிண்டு உங்காத்துக்காரா போஸ் குடுத்த போட்டோ ஒன்னு கூட இல்லையா உங்கிட்ட?”னு நான் மானம் கெட்ட கேள்வி கேட்டும் இன்னைய தேதி வரைக்கும் ஒரு போட்டோ போடலை அந்த அமுக்கு. இன்னோரு சமத்துக்குடம் அவனோட 2 வயசு போட்டோ ஒன்னை போட்டுட்டு, எப்பிடி இருக்கு? எப்பிடி இருக்கு?னு என்கிட்ட ஓயாம கேட்டுண்டே இருந்தான். “கழுதை குட்டியா இருக்கும் போது ரொம்ப அழகா இருக்குமாமே? அதை பத்தி நீ என்ன நினைக்கரை?”னு கேட்டதுக்கு அப்புறம் சத்தம் இல்லாம இருக்கான்.
உன்னோட தோழி அவளோட போட்டோவை பத்தி கமண்டி இருக்கா, பாக்க வா தக்குடு!னு என்னோட இன்பாக்ஸுக்கு FB-லேந்துஒரு மெயில் வந்தது. அங்க போய் க்ளிக் பண்ணினா ஒரு பெரிய்ய்ய்ய காண்டாமிருகம் போட்டோ வருது. அப்போ இதுதான் உன்னோட போட்டோவா?னு கேக்கனும் போல இருந்தது எனக்கு..:)

இவ்ளோ இம்சை இருந்தாலும் சில சமயம் நன்னாவும் இருக்கு. நமக்கு தெரிஞ்ச ரெண்டு பொம்ணாட்டிகள், “காலெஜ்ல நீ சைட் அடிச்ச பையனுக்கு கல்யாணமாம்டீ!” “தீபாவளிக்கு என்னடி பண்ணினை?” “நான் ஒன்னும் பண்ணலைடீ! போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் பக்கத்தாதுல எதிர்த்தாலுலேந்து வரும் ஓசி ஸ்வீட்டை வெச்சே ஓட்டலாம்னு இருக்கேன்டீ!” “அப்பிடியே உனக்கு வரர்தை இங்க கொஞ்சம் தள்ளி விடுடி!”னு அவாளுக்குள்ள மாத்தி மாத்தி பேசின விஷயம் எல்லாம் நோகாம படிக்கும் போது பலபேருக்கு மகிழ்ச்சியாத்தான் இருக்கு. இருந்தாலும் தக்குடுவுக்கு பொதுவா ஊர்வம்பே பிடிக்காதுனு உங்க எல்லாருக்குமே நன்னா தெரியும். அதனால நான் இதெல்லாம் படிக்கவே மாட்டேன். அதுவும் போக எனக்கு இந்த ஸ்டேட்டஸ் மெசேஜ், தத்துவம் இதுலெல்லாம் ஞானம் கிடையாது.



குத்துவிளக்கின் கையில் அகல்விளக்கு...:)

(குறிப்பு - எல்லாருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்! அதிர்ஸம் பொரி எல்லாம் பக்கத்தாத்ல இருக்கும் தக்குடு மாதிரியான சின்னகுழந்தைகளுக்கும் குடுத்துட்டு நீங்களும் சாப்டுங்கோ!)

Friday, November 5, 2010

தீபாவளி ஸ்பெஷல்

கைல எண்ணைக் கிண்ணத்தோட துரத்தும் பாசமான அம்மா, கண்ணில் விழுந்த சியக்காய் பொடி, வெண்ணீர் அடுப்பில் எரிந்த சரட்டையின் 'ஸ்ஸ்ஸ்ஸ்' சத்தம், வெண்கலப்பானைலேந்து வெண்ணீரை எடுக்கும் போது எவர்சில்வர் சொம்பு பக்கவாட்டில் மோதி எழும் 'டைங்ங்ங்ங்' ஓசை, ‘எவர்கிங்’ ஸ்டிக்கர் கிழிக்காமல் போடுண்ட பட்டாபட்டி, இஞ்சி லேகியத்துக்கு முன்னாடி அம்மாவுக்கு தெரியாமல் கள்ளத்தனமாய் அவசரம் அவசரமா வாய்ல போடுண்ட பாதாம் ஹல்வா, அதுல பங்குக்கு வந்த பாசக்கார அண்ணா, பக்கத்தாத்து பொண்ணோட பட்டுப்பாவாடை வாசனை எல்லாமே ஞாபகத்துல அப்பிடியே இருக்கு.



வெள்ளிக் கிண்ணத்தில் ஜொலிக்கும் திரட்டிப்பால்..:)

நல்ல நாளும் அதுவுமா கூடப்பிறந்தவனை திட்டக் கூடாது, அதனால மரியாதைகுரிய என்னோட அண்ணா ஒரு மகாசோம்பேறி. 6 மணிக்கு மேல தான் தீபாவளி அன்னிக்கு எழுந்திருப்பான். தக்குடு 4 மணிலேந்தே குடைய ஆரம்பிச்சுடுவான். அப்பிடிக்கு ப்ரமாதமா பட்டாசு எல்லாம் ஒன்னும் கிடையாது. எங்க அம்மா வாங்கர 4 பட்டாசையும் 'துட்டை கரியாக்குவாளாடா'னு பக்கத்துலேந்து அஸ்து பாடி எங்க அண்ணா ஓய்ச்சு விட்டுடுவான். தக்குடு 2ஆம் கிளாஸ் படிக்கும் போது எங்க அம்மாவுக்கு கோ-ஆப்டெக்ஸ்ல பட்டுப் புடவை வாங்கிண்டு வந்தா, அதை பாத்துட்டு, ‘எனக்கு மட்டும் வெறும் ட்ராயர்தானா?’னு நான் ஒரே ஆர்ப்பாட்டம். வெறுத்து போன எங்க அப்பா ஒரு கட்டத்துல ‘உனக்கு கோ-ஆப்டெக்ஸ்ல டபுள் சைடு பார்டர் போட்ட பட்டுக் கோமணம் வாங்கி தரேன் கோந்தை, சட்டையை போட்டுண்டு வா, வாங்கிண்டு வரலாம்!’னு சொன்ன உடனே வேகமா சட்டையை போட்டுண்டு கிளம்பினதா இப்பையும் அம்மா சொல்லி சிரிப்பா.



நம்பாத்து வெண்கல விளக்கு...:)

எல்லாராத்துலையும் வெடி எல்லாம் நிறைய போடுவா. புது ட்ரெஸ் போட்ட நானும் என்னோட தோஸ்துகளும் எதோ சர்வே ஆபிசர் மாதிரி அவாத்து வாசல்ல இருக்கும் வெடிக் குப்பையை வெச்சு யாராத்துல நிறைய வெடி போட்டுருக்கானு சர்வே எடுப்போம். காலேஜ் கோஷ்டியா ஆனதுக்கு அப்புறம் சர்வே அஜெண்டாவை மாத்திட்டோம். வெளக்கி வச்ச வெண்கல விளக்கு மாதிரி இருந்தாலும் எங்க தெரு பிகர்களை எல்லாம் நாங்க திரும்பி கூட பாக்க மாட்டோம். அதுல சில பல சட்டசிக்கல்கள் உண்டு. பாவனா மாதிரி பளிச்னு இருக்கானு நம்ப பல்லை காட்டினா பின்னாடியே அவளோட அம்மா சொர்ணாக்கா மாமி முந்தானையை இழுத்து சொரிகிண்டு சண்டைக்கு வந்துடுவா, பேக்ரவுண்ட்ல 'ஐகிரி நந்தினி நந்திதமேதினி' போட்டா கன கச்சிதமா பொருந்தும். இதுல என்ன தமாசுன்னா சூப்பர் பிகரோட அம்மா சண்டைக்கு வரும் போது சுமார் பிகரோட அம்மாவும் மெதுவா சேர்ந்துக்கப் பார்ப்பா. இந்த மாதிரி ஒரு தடவை ஆன போது என்னோட தோஸ்த் ஒருத்தன், ‘மாமி! நீங்களும் சேர்ந்து சவுண்ட் குடுக்காதீங்கோ! உங்காத்து பொண்ணையெல்லாம் நீங்களே சைட் அடி!னு சொன்னாலும் நாங்க பார்க்கமாட்டோம்!’னு சொல்லிட்டு அந்த இடத்திலேயே நிக்காம சிட்டா பறந்துட்டான். அதனால பக்கத்து தெரு பிகரை பாத்தாத்தான் தலையவே நிமிர்த்துவோம்.



நெஞ்சை அள்ளும் நெல்லையின் அல்வா


செல்லம்மா மன்னியாத்துல அல்வா அற்புதமா இருக்கும். அவாத்து மாமா & மாமியார் ஆம்பூர் கோமு மாமியை சேர்த்து மொத்தம் 3 பேர். அவாத்துல தக்குடுவுக்கு சர்வ சுதந்திரப் பாத்யதை உண்டு. தீபாவளி அன்னிக்கி காத்தால 8 மணி வாக்கில் போனா மொதல்ல செல்லமா மன்னி ஒரு துண்டம் அல்வா (ஆமாம், துண்டம் துண்டமா இருக்கும் அவாத்து அல்வா) தருவா. கொஞ்ச நேரம் கழிச்சி அவாத்து மாமா இந்தாடா தக்குடு!னு சொல்லி அவர் அல்வாவை ஆட்டையை போடும் போது எனக்கும் ஒரு துண்டு தருவார். கொஞ்ச நேரத்துல கோமு மாமி வந்து இந்தாடா சப்பைமூக்கா!னு ஒரு துண்டு தருவா. அந்த சமயம் பாத்து செல்லம்மா மன்னி & அவாத்து மாமா வந்து சேர்ந்துடுவா. ஓஒ! நானும் குடுத்தேனே! நானும் குடுத்தேனே!னு ஒருத்தருக்கொருத்தர் சொல்லிண்டு, கள்ளப் பயலே! மூச்சே விடலையேடா நீ!னு சிரிச்சுண்டே என்னை அதட்டுவா. நான் ஒன்னுமே தெரியாத மாதிரி முகத்தை வெச்சுண்டு மெதுவா இடத்தை காலி பண்ணிடுவேன். காலேஜ் பையன் ஆனதுக்கு அப்புறமும் கூட அவாத்து அல்வாவை நான் மிஸ் பண்ணினதே கிடையாது. ‘ஆம்பூர்’ கோமு மாமி உம்மாச்சி கிட்ட போய் சேர்ந்த அன்னிக்கு அவாத்து ரேளில போய், 'கோமு மாமி! இனிமே எனக்கு யாரு அல்வா பண்ணித் தருவா!'னு கண்ணீர் விட்டு கதறி அழுதேன்..:(

ஒரு தீபாவளி அன்னிக்கி காத்தால என்னோட தோஸ்த் 'ப்ளவுஸ்' சங்கரன்(பெயர் காரணம் தனிப் பதிவில்) பத்த வெச்ச ராக்கெட், பாட்டில் கவுந்து வாசல்ல கோலம் போட்டுண்டு இருந்த ஸ்டைல்’ மீனா மாமியோட பொண்ணை துரத்தி துரத்தி எடுத்துடுத்து. அடுத்த பத்து நிமிஷத்துக்கு தெரு புல்லா ‘ஸ்டைல்’ மீனா மாமியும் ‘ப்ளவுஸ்’ சங்கரனும் ஆக்ரோஷமா ‘தொட்டுப்புடிச்சு’ விளையாண்ட காட்சி கண்ணுலையே நிக்குது. கடைசி வரைக்கும் ‘ப்ளவுஸ்’ சங்கரன் அவுட்டே ஆகலை என்பது தான் அதுல ஹைலைட்டான விஷயம்...:)



தக்குடுவின் இதயராணி பப்பு...:)(பட்டுப்பாவாடையில் என்னோட பப்பு)

தக்குடுவை உங்காத்து புள்ளையாட்டமா நினைச்சு பாச மழை பொழியும் எல்லா அன்பு இதயங்களுக்கும் தக்குடுவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த நல்ல நாள்ல நம்ப எல்லாருக்கும் நல்ல எண்ணங்களையும், விசாலமான மனசையும், நிஷ்கபடமான பக்தியையும், திருப்தியான வாழ்க்கையையும் உம்மாச்சி நமக்கு அனுக்ரஹம் பண்ணனும்னு ப்ரார்த்தனை பண்ணிப்போம்.